பாடசாலை அபிவிருத்திக்காக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த திட்டத்தை கைவிட்டு பொதுமக்களின் பொது வரி பணத்தை தவறாக பயன்படுத்துவதாக தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கங்கள் மாறும்போது தமது திட்டங்களில் கவனம் செலுத்துவதோடு, நடைமுறையில் உள்ள திட்டங்களை நிறுத்துவது அல்லது கைவிடுவது பொது நிதியை தவறாகப் பயன்படுத்தும் செயல் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பாடசாலை வளர்ச்சியின் முக்கிய அங்கமாக, முன்னைய அரசாங்கம் ‘அருகிலுள்ள பாடசாலை, சிறந்த பாடசாலை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தகவல்களுக்கு அமைய, முன்னைய அரசாங்கம் இந்த திட்டத்திற்காக 64 ஆயிரத்து 950 மில்லியனை ஒதுக்கியிருந்தது.
ஒன்பதாயிரத்து 63 பாடசாலை கட்டிடங்களை நிர்மாணிப்பது உள்ளிட்ட 18 ஆயிரம் திட்டங்களை 2016 முதல் 2020 வரை நான்கு வருட காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால் இந்த திட்டம் திடீரென கைவிடப்பட்டுள்ளது.
மேலும் 700ற்கும் மேற்பட்ட பாடாசலைகளை நிர்மாணிப்பது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக, அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, கட்டட ஒப்பந்தக்காரர்களும் தங்கள் உபகரணங்களை பாடசாலைகளில் இருந்து அகற்றியுள்ளனர், மேலும் பல பாடசாலைகளிள் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.
சில பாடசாலைகளில் தற்போதுள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதால், இட வசதி குறித்த பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை செயற்படுத்தி வந்த கல்வி அமைச்சின் அமையப்பெற்றிருந்த அலுவலகமும் மூடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கான 40% பணம் 2016 ஆம் ஆண்டில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தில் இடம்பெற்ற சில மோசடி நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
நாச்சதுவ சிங்கள கனிஷ்ட பாடசாலை என எந்தப் பாடசாலையும் இல்லை. எவ்வாறெனினும் கட்டடம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
மேலும், திரப்பனே மஹநாம கல்லூரியில் மூன்று மாடி கட்டடத்திற்கு 24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும், தற்போது அடிக்கல் நாட்டிய குழிகள் மாத்திரமே காணப்படுவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வட மத்திய மாகாணத்தில் இந்த திட்டத்துடன் தொடர்புடைய குறித்து பாடசாலைகள் குறித்து 2020ஆம் ஆண்டில் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வரிப் பணத்திலிருந்து இவ்வளவு பெரிய திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்த அனுமதிப்பது கடுமையான பிரச்சினை என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கங்கள் மாறும்போது, அவர்கள் தங்கள் சொந்த திட்டங்களில் கவனம் செலுத்துவதாகவும், ஆனால் இருக்கும் திட்டங்களை நிறுத்துவது அல்லது கைவிடுவது என்பது பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கல்வி அமைச்சு ‘1,000 தேசிய பாடசாலைகளை புதுப்பித்தல்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, பாடசாலைகளுக்கு இரண்டு மில்லியனை ஒதுக்குகிறது.
இதனால் 64 ஆயிரத்து 950 மில்லியன் மதிப்புள்ள திட்டம் குறித்து முறையான மதிப்பீடு இல்லாமல் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் செலுத்தாமை உள்ளிட்ட பிற காரணங்களால் பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படும் நிலை குறித்து உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
முறையாக மதிப்பீடு செய்யப்படாத பிரச்சார திட்டங்களுக்கு பதிலாக கல்வி முறையில் பயனுள்ள நடவடிக்கைகளை நோக்கி நகர்வது கல்வி அமைச்சின் பொறுப்பு எனவும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.