Home உலகம் நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி

நமீபியா படுகொலைகளை “இனப்படுகொலை” என்று ஒப்புக்கொண்டது ஜேர்மனி

by admin

நூறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேற்ற நாடான நமீபியாவில்(Namibia) ஜேர்மனிய பேரரசினால் நடத்தப்பட்ட இனஅழிப்புச் செயல்களை “இனப்படுகொலை” (Genocide) என்று அந்நாடு ஏற்றுக்கொண் டுள்ளது.

நமீபிய அரசுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் அங்கு இனப்படுகொலையுண்ட ஆதிக்குடி மக்களது பரம்பரையினரது முன்னேற்றத்திற்காகவும் நாட்டை மீளக் கட்டியெ ழுப்புவதற்காகவும் ஒரு பில்லியன் ஈரோக்களை (€1.1 billion) வழங்குவதாகவும் ஜேர்மனி அறிவித்திருக்கிறது. இந்த நிதியை இழப்பீடு என்ற வகையில் சட்டரீதியாகக் கேட்டு எவரும் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமீபியப் படுகொலைகளுக்காக ஜேர்மனி கடந்த 2002 ஆம் ஆண்டில்மன்னிப்புக் கோரி இருந்தது. ஆனால்அதனை அது “இனப்படுகொலை”(genocidal) என்று ஏற்றுக்கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

நமீபியாவில் இழைக்கப்பட்டவைகள் இன்றைய உலகின் கண்ணோட்டத்தில் இனப்படுகொலைகளே என்பதை ஒப்புக்கொள்வதாக ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் (Heiko Maas) அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக் கிறார்.

நமீபியாவின் ஆதிக் குடிகளான ஹெரேரோ மற்றும் நாமா(Herero- Nama)இனங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஜேர்மனிய காலனிப் படைகள் புரிந்தகொடுமைகளை “அளவிடமுடியாத் துன்பம்”( immeasurable suffering) என்றுஅவர் வர்ணித்திருக்கிறார்.

பிரான்ஸின் அதிபர் மக்ரோன் 1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த இனப்படு கொலைகளைத் தடுக்கத் தவறியதை ஒப்புக் கொண்டு அதற்காக வருத்தம் தெரிவித்து 24 மணித்தியாலங்களுக்குள் ஜேர்மனியின் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

நமீபிய இனப்படுகொலையை முறைப்படி ஏற்றுக்கொள்கின்ற பிரகடனத்தை ஜேர்மனிய நாட்டின் குடியரசுத் தலைவர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர்(Frank-Walter Steinmeier) விரைவில் நமீபிய நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக நடைபெறவுள்ள ஒரு நிகழ்வில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

? நமீபியாவில் என்ன நடந்தது?

1800 களின் இறுதியிலும் 1900 களின் தொடக்கத்திலும்(1884 -1915) நமீபியா உட்பட பலநாடுகள் ஜேர்மனியின் ஒரு பகுதியாக அதன் பேரரசுகளது கட்டுப் பாட்டில் இருந்தன. இன்றைய நமீபியா அச்சமயம் “ஜேர்மன் தெற்கு மேற்கு ஆபிரிக்கா”(German South West Africa) என்றே அழைக்கப்பட்டது.

நமீபியாவின் பூர்வீக குடிகளான ஹெரேரோ மற்றும் நாமா இனங்களைச்சேர்ந்தோர் அன்றைய ஜேர்மனியக் குடியேற்ற அதிகார ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். முதலில் ஹெரேரோ இனமக்களும் தொடர்ந்து நாமா இனத்தவரும் நடத்திய கிளர்ச்சிகளை ஜேர்மனியப் பேரரசுப் படைகள் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கின.

ஆண்கள் அனைவரும் தூக்கில் இடப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் சிறிதளவு உணவுடன் பாலைவனத்திற்குத் துரத்தப் பட்டு அங்கு தண்ணீர் இன்றிப் பட்டினி மற்றும் வாந்திபேதியால் மடியவிடப் பட்டனர்.

தங்கள் நிலங்களையும் கால்நடைகளும் இழந்து இன்று கலஹாரி பாலைவனம் என்று (Kalahari Desert) அழைக்கப்படுகின்ற பகுதிக்குள் விரட்டப்பட்டவர்கள் நீர் இன்றி உயிரிழப்பதை உறுதிப்படுத்துவதற்காக பாலைவனத்தில் காணப்பட்ட ஒரு சில தண்ணீர் கிணறுகளை ஜேர்மனியப் படைகள் தகர்த்து மூடிவிட்டன.

ஆயிரக் கணக்கான ஹெரேரோ இன ஆண்களும் பெண்களும் நமீபியா கரையோரமாக அமைந்துள்ள சுறாத் தீவில் (Shark Island) வதை முகாம்களில்அடைக்கப்பட்டனர். ஜேர்மனியப் பேரரசினால் நிறுவப்பட்ட வதை முகாம்கள் பல அமைந்திருந்த காரணத்தால் சுறாதீவு , மரணத்தீவு (“Death Island”) எனவும்அழைக்கப்பட்டுவந்தது.

பேரரசை எதிர்த்த பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் உத்தரவுகளை அப்போதைய ஜேர்மனிய குடியேற்றப்படைகளது தளபதி ஜெனரல் லோதர் வொன் ட்ரோத்தா(General Lothar von Trotha) என்பவரே விடுத்தார்.

அவரது கொடூரசெயல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் அழித்தொழிக்கப்பட்டனர்.வரலாற்று நிபுணர்களது கணிப்பின்படி1904-1908 காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த ஹெரேரோ (Herero) இனத்தவர்களில் சுமார் 65 ஆயிரம் முதல் ஒரு லட்சம்பேர்வரை கொல்லப்பட்டனர் என்று மதிப்பிடப்படுகிறது.

நாமா (Nama) மக்கள் கூட்டத்தில் சுமார் இருபதாயிரம் பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர். நமீபியாப் படுகொலைகளை இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று வரலாற்றாசிரியர்கள்பதிவு செய்கின்றனர்.

ஜேர்மனியின் ஆதிக்கத்துக்குப் பின்னர் சுமார் 75 ஆண்டு காலம் தென்னாபிரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த நமீபியா 1990 இல் சுதந்திர நாடாகியது.

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.28-05-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More