சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது. அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன். அழகேஸ்வரர். அவர் யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்டார். அதனால் கிடைத்த பலம் காரணமாக கோட்டை ராச்சியத்துக்கும் அரசனாகினார். அக்காலகட்டத்தில் சீனாவின் புதையல் கப்பல் என்றழைக்கப்படும் ஒரு கப்பல் படையணி இலங்கை தீவை ஆக்கிரமித்தது. புதையல் கப்பல் என்பதன் பொருள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து அபகரிக்கப்பட்ட விலைமதிப்பற்ற திரவியங்களை காவிச் செல்லும் கப்பல் என்பதாகும். அக்கப்பல் படைக்கு தளபதிகளாக பெரும்பாலும் நலமெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வீரம்மிக்க தளபதிகளே நியமிக்கப்பட்டார்கள்.சிறுவயதிலேயே நலம் எடுக்கப்பட்ட போர்வீரர்கள் திட்டமிட்டு உக்கிரமான தளபதிகளாக வளர்க்கப்படுவார்கள். எங்களூர்களில் காளைகளுக்கு நலம் எடுப்பது போல.
இவ்வாறு வெல்லக்கடினமான தளபதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட புதையல் கப்பல் படைப்பிரிவின் சுமார் 3000 துருப்புக்கள் கோட்டை ராஜ்ஜியத்தை வெற்றி கொண்டன. அழகேஸ்வரனும் அவருடைய குடும்பமும் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். எனினும் சீனத்துப் பேரரசன் அழகேஸ்வரனை விடுதலை செய்ததோடு அவருடைய இடத்துக்கு ஆறாவது பராக்கிரமபாகுவை அரசனாக நியமித்தார். அல்லது ஆறாவது பராக்கிரமபாகு சீனப் பேரரசின் ஆளுகையை ஏற்றுக் கொண்டதனால் அரசனாக இருக்க அனுமதிக்கப்பட்டார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இப்படித்தான் சீனா ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைதீவின் கோட்டை ராச்சியத்தை ஆட்சி செய்தது. அது ஒரு ஆக்கிரமிப்பு. ஆனால் இப்பொழுது நடப்பது அப்படியல்ல. இது ஒரு வர்த்தக விரிவாக்கம். சீனப் படர்ச்சி எனப்படுவது அப்படி ஒரு வடிவத்தில்தான் முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கெனவே மாலைதீவுகள் மியான்மர், தென்கிழக்காசியா, ஆபிரிக்காவின் ஒரு பகுதி போன்றன சீனாவின் கடன் பொறிக்குள் மீள முடியாதபடி வீழ்ந்துவிட்டன. இலங்கையிலும் சீனப்பட்டினம் அப்படித்தான் பார்க்கப்படுகிறது.இந்தியாவின் தெற்கு வாசலில் சீனா நிரந்தரமாக குடியேறி விடும் என்ற அச்சத்தை அது அதிகப்படுத்தியிருக்கிறது. ஆறு நூற்றாண்டுகளின் முன் நிகழ்ந்தது ஒருவித ஆக்கிரமிப்பு. ஆனால் இப்பொழுது நடப்பது இலங்கைத்தீவின் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு நிகழும் ஒரு சீன விரிவாக்கம். சீனாவை உள்ளே வரவிட்டு நாட்டின் வரைபடத்தை மாற்றும் விதத்தில் தீவுக்குள் ஒரு தீவை உருவாக்க அனுமதித்தது தனியாக ராஜபக்சக்கள் மட்டுமல்ல ரணில் விக்ரமசிங்கவுந்தான்.தமிழ் மக்களை வெற்றிகொள்ள எந்த ஒரு வெளிப் பிசாசோடும் கூட்டுச்சேர தயாராக காணப்பட்ட எல்லா சிங்கள ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்பு.
சீன விரிவாக்கம் எனப்படுவது திறந்த சந்தை பொருளாதாரம் திறந்துவிட்ட வழிகளின் ஊடாக சீனா பெற்ற அபரிதமான ஒரு வளர்ச்சியின் விளைவுதான். கெடுபிடிப் போரின் முடிவுக்குப் பின் குறிப்பாக கம்யூனிச பொருளாதாரக் கட்டமைப்பின் தோல்விக்கு பின் உலகம் முழுவதும் பொருளாதார அர்த்தத்தில் ஓரலகு ஆகிவிட்டது. இன்டர்நெட் நாடுகளின் எல்லைகளை திறந்தது. நிதி மூலதனம் சந்தைகளின் எல்லைகளை திறந்தது. இவ்வாறாக திறந்துவிடப்பட்ட சந்தைப்பரப்பில் சீனா வெற்றிகரமாக தன்னை பலப்படுத்திக் கொண்டு விட்டது.
யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த தத்துவவியலாளர் ஸ்லோவாச் சிசிக் பல ஆண்டுகளுக்கு முன் பின்வருமாறு சொன்னார் “முதலாளித்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று. அதன் பொருள் என்னவென்றால் ஜனநாயகமற்ற சீனா திறந்த சந்தை பொருளாதாரக் கட்டமைப்பைக் கைப்பற்றிவிட்டது என்பதுதான்.இவ்வாறு திறந்த சந்தைப் பொருளாதாரம் திறந்துவிட்ட வழிகளினூடாக சீனா பெற்ற வளர்ச்சியின் விளைவே சீன விரிவாக்கம் ஆகும்.வுகானில் தோன்றிய வைரசையும் அந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகப் பார்பவர்கள் உண்டு.இவ்வாறு திறந்த சந்தை பொருளாதாரத்தின் அனுகூலங்களை பயன்படுத்தி சீனப்பொருளாதாரம் உலகின் ஏனைய ஜனநாயக பொருளாதாரங்களை விடவும் சக்தி மிக்கதாக மேலெழுந்தது. அது வறிய சிறிய நாடுகளை மிக இலகுவாக தனது கடன் பொறிக்குள் வீழ்த்தி விட்டது. மேற்கத்திய ஜனநாயக அரசுகள் வறிய நாடுகளுக்கு உதவி செய்யும் பொழுது மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக வைக்கின்றன. ஆனால் சீனாவுக்கு மனித உரிமைகள் ஒரு விவகாரமல்ல. எனவே எந்தவிதமான முன் நிபந்தனையும் இன்றி உதவி செய்யத் தயாரான சீனாவை நோக்கி வறிய சிறிய நாடுகள் போவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
இலங்கைத் தீவுக்கும் அதுதான் நடந்தது. இலங்கைத் தீவு போர் காரணமாக ஏற்கனவே கடனாளியாக இருந்தது.இந்நிலையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததும் இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்க சீனா தயாராக இருந்தது. ஏனெனில் சீனாவின் முத்துமாலை திட்டத்தில் இலங்கை ஒரு முக்கியமான முத்து என்று சீனா கருதியது. அதேசமயம் அப்பொழுது இலங்கை தீவை ஆட்சி செய்த ராஜபக்ஷக்களுக்கு மேற்கை நோக்கியோ அல்லது இந்தியாவை நோக்கியோ செல்வதில் சில வரையறைகள் இருந்தன.
மேற்கில் மிகப்பலமான ஒரு தமிழ் டயஸ்போரா இருந்தது. அது போரின் தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. அதோடு ஐநாவில் இலங்கை தீவை ஒரு குற்றவாளியாக கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று அந்த டயஸ்போரா கடுமையாக உழைத்தது;உழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே மேற்கு நாடுகளை நோக்கி செல்லும் பொழுது அங்குள்ள பலமான தமிழ் டயஸ்போரா ஒரு தடை. மேற்கு நாடுகளும் மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக வைத்தே உதவிகளைச் செய்கின்றன. அதேசமயம், இந்தியாவைப் பொறுத்தவரை அங்குள்ள 8 கோடி தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக எப்பொழுதும் நொதிக்ககூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. அந்த நிலைமைகளை முன்வைத்து இந்தியா இலங்கைத் தீவில் தனது பேரத்தை அதிகப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் இந்தியாவையும் முழுமையாக நம்ப இலங்கையில் உள்ள அரசாங்கங்கள் தயாராக இல்லை. அதேசமயம் சீனாவில் ஒரு பலமான தமிழ்ச்சமூகம் இல்லை. தவிர சீனாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பண்பாட்டுப் பிணைப்புக்களும் இல்லை.
இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான நடைமுறைக் காரணம் உண்டு. அது என்னவெனில் ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை ஒரு முதலீடாக வைத்து தமது வம்ச ஆட்சியை ஸ்தாபித்து வருகிறார்கள்.யுத்த வெற்றியை அவர்கள் ஒரு அரசியல் வெற்றியாக மாற்ற தயாராக இல்லை. இவ்வாறு யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கி யுத்த வெற்றி வாதத்தை முன்னெடுக்கும் ஒரு அரசாங்கமானது மேற்கை நோக்கியோ இந்தியாவை நோக்கியோ போவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.மாறாக சீனாவை நோக்கி போவதை தவிர அவர்களுக்கு வேறு எந்த தெரிவும் இல்லை. இப்படித்தான் ராஜபக்சக்கள் சீனாவை நெருங்கினார்கள்.சீனாவுக்கும் தேவை இருந்தது. எனவே படிப்படியாக சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறிய ஸ்ரீலங்கா இப்பொழுது ஏறக்குறைய அதன் பங்காளியாகவே மாறியிருக்கிறதா என்ற கேள்வியை துறைமுக நகரம் எழுப்பியிருக்கிறது.
திறந்த சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தோடு உருவாக்கப்படும் சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் முதலீட்டு வலையங்கள் போன்றன விசேட சலுகைகளை பெற்ற கட்டமைப்புக்களாகவே உருவாக்கப்படுகின்றன. அவை உள்நாட்டுச் சட்டங்கள் பலவற்றிலிருந்து சிறப்பு விடுப்புரிமையை கொண்டிருப்பதை காணலாம்.”பூனை கறுப்பா வெள்ளையா என்பதல்ல பிரச்சினை அது எலி பிடித்தால் சரி” என்று கூறிக்கொண்டு சீனா தனது பிராந்தியங்களை திறந்த சந்தை பொருளாதாரத்தை நோக்கி திறந்த பொழுதும் இவ்வாறு விசேஷ சலுகைகள் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டன. எனவே திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் இவ்வாறான பொருளாதார வலயங்கள் உருவாக்கப்படும் பொழுது அவற்றுக்கு விசேட அந்தஸ்து வழங்கப்படுவது உண்டு.ஆனால் இங்கு பிரச்சினை சீனப்பட்டினத்துக்கு வழங்கப்பட்ட அவ்வாறான விடுப்புரிமைகள் எதிர்காலத்தில் அப்பட்டினத்தை இலங்கைத் தீவின் நாடாளுமன்றத்துக்கு பதில்கூற தேவையில்லாத ஒரு கட்டமைப்பாக மாற்றக் கூடியவையா என்பதுதான்.
மாலைதீவுகளைப் போன்று சீனாவின் அயல் நாடாகிய லாவோசை போன்று சில ஆபிரிக்க நாடுகளைப் போன்று மியான்மரை போன்று இலங்கைத் தீவும் அதன் கடன்பொறியில் இருந்து மீள்வதற்கு எதிர்காலத்தில் எதையெதை நீண்டகால அடிப்படையில் விற்க வேண்டிவரும் என்பதே இங்கு உள்ள மிக முக்கியமான கேள்வியாகும்.
மாலைதீவுகளை சீனக்கடன் பொறிக்குள் இருந்து முழுமையாக விடுவிப்பதென்றால் அங்குள்ள ஆளில்லாத் தீவுகளில் ஒன்றை விற்க வேண்டியிருக்கும் என்று இந்திய பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். அவ்வாறு விற்றால் சீனா இந்துமாகடலில் இந்தியாவின் தெற்கு வாசலில் நிரந்தரமாக வந்து குந்திவிடும். அப்படித்தான் மியான்மரிலும். அங்கே சீனசார்பு ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு மேற்கத்திய சார்பு ஆங் சாங் சூகி பதவிக்கு வந்தார். ஆனால் அவராலும் சீனாவின் செல்வாக்குக்குக்கு வெளியே சிந்திக்க முடியவில்லை. சீனாவுக்கு வங்காள விரிகுடாவில் எல்லைகள் இல்லை. எனவே மியான்மரின் கியாப்கியூ துறைமுகத்தை அது தனக்கான வங்காள விரிகுடா வாசலாக பயன்படுத்தி வருகிறது. கியாப்கியு துறைமுகம் எனப்படுவது பர்மிய வரைபடத்தில் வங்காள விரிகுடாவில் காணப்படும் பர்மாவை நோக்கி வாயை திறந்து கொண்டிருக்கும் ஒரு மாட்டுக் கன்றின் வடிவிலான நிலத்துண்டு ஆகும்.
அந்நிலத்துண்டில் சீனாவின் மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோக குழாய்கள் மியான்மரை குறுக்கறுத்து சீனாவை நோக்கி செல்கின்றன.இந்த நிலத்துண்டு ரோஹியங்யா முஸ்லிம்களின் சனத்தொகை செறிவாக உள்ள பகுதிகளுக்குள் வருகிறது. இது காரணமாகவே ரோகியங்கா இனப்படுகொலை எனப்படுவது பிராந்திய பரிமாணம் மிக்கதாக மாறியது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் விவகாரத்தை மேற்கு நாடுகள் சீனாவுக்கு எதிராக கையாளக்கூடிய நிலைமைகளுக்கு பின்னால் இருக்கும் புவிசார் அரசியல் காரணம் அதுதான்
.உலகப்புகழ் பெற்ற ஆங் சாங் சூகி தலைவியாக வந்த பின்னரும்கூட அவரால் சீனாவை மீறிச் செயற்பட முடியவில்லை. முடிவில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சீனச்சார்பு ராணுவம் அவரை கவிழ்த்து விட்டு மறுபடியும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இது சீன விரிவாக்கத்தின் மற்றொரு முனை. ஸ்ரீலங்காவிலும் அப்படித்தான். பட்ட கடனை மீறிச்சிந்திக்க மேற்கின் செல்லப் பிள்ளையான ரணில் விக்ரமசிங்கவாலும் முடியவில்லை. அதனால்தான் அவர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு நீண்டகால குத்தகைக்கு எழுதிக்கொடுத்தார். சீன நிதி நகரத்துக்கான திருத்தப்பட்ட உடன்படிக்கையை அவர்தானே தயாரித்தார்?
எனவே இங்கு ஒரு விடயத்தை நாங்கள் தொகுத்துப் பார்க்கலாம். மேற்கு நாடுகள் சீன விரிவாக்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றங்களை ஒர் உபாயமாக கைக்கொண்டு வருகின்றன. ஆனால் ஆட்சிகள் மாறினாலும் சீனாவின் கடன் பிடிக்குள் இருந்து குறிப்பிட்ட அரசுகளை விடுவிப்பது கடினமானது என்பதற்கு மலேசியா மியான்மர் லாவோஸ் மற்றும் சிறிலங்கா போன்றவை பிந்திய உதாரணங்களாகும். இந்த அடிப்படையில் கூறின், சீன விரிவாக்கத்தின் ஒரு பங்காளியாக மாறியிருக்கும் இலங்கைத்தீவிலிருந்து சீனாவை அகற்றும் வல்லமை தீவுக்குள்ளிருக்கும் எந்த ஒரு சக்திக்கும் இப்போதைக்குக் கிடையாது.அதை வெளிச்சக்திகளால் மட்டும்தான் செய்ய முடியும்.