Home உலகம் கனடா பாடசாலைத் தரையின் கீழ்215 பழங்குடி சிறுவரது எச்சங்கள்

கனடா பாடசாலைத் தரையின் கீழ்215 பழங்குடி சிறுவரது எச்சங்கள்

by admin
(படம் :பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ளகம்லூப்ஸ் இந்தியக் குடியிருப்புப் பள்ளியின் இன்றைய தோற்றம்)

பண்பாட்டு இனப்படுகொலையின் துயர் தோய்ந்த ஒரு சரித்திர சாட்சிவரலாற்றின் துயர்மிகுந்த சம்பவங்கள்தொடர்பான தகவல்கள் தொடர்ந்துவெளிவந்தவண்ணம் உள்ளன.

இதுகனடாவின் இந்தியப் பழங்குடியினர் மீது புரியப்பட்ட “பண்பாட்டு இனப்படுகொலையோடு” (cultural Genocide) தொடர்புடைய தகவல். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில்(British Columbia) அமைந்திருக்கிறது கம்லூப்ஸ் இந்தியக் குடியிருப்பு பள்ளி. (Kamloops Indian Residential School).

இதனை வதிவிடப்பள்ளி எனவும் அழைப்பார்கள்.பழங்குடியின ருக்காக இயங்கிய பெரிய வதிவிடப் பள்ளிகளில் இதுவும் ஒன்று. ‘போர்டிங்’ பள்ளிகள்போன்றவை. அண்மையில் இந்தப் பள்ளியின் தரைப் பகுதிகளை நில அளவை செய்வதற்காக ரேடார் மூலமான ஆய்வு வேலைகள்(ground-penetrating radar) நடத்தப்பட்டன.

அப்போது தரையின் அடியில் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் இருநூறுக்கு மேற்பட்ட சிறுவர்களது எலும்பு எச்சங்கள் அங்கு புதையுண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அவை அனைத்தும் 1978 இல் மூடப்பட்ட கம்லூப்ஸ் இந்தியக் குடியிருப்பு பள்ளியில் படித்த சிறுவர்களுடையவை ஆகும்.

அவற்றில் சில மூன்று, நான்கு வயதுக் குழந்தைகளுடையவையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. பள்ளிகளில் உயிரிழந்த பழங்குடி சிறுவர்களில் இதுவரை கணக்கில் காட்டப்படாத சிறுவர்களது உடல்களாக அவை இருக்கவேண்டும் என்று பூர்வாங்க விசாரணைகளை நடத்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி இன இளைஞர்களைக் கட்டாயமாக ஒருங்கிணைத்துக் கட்டுப்பாடுகளின் கீழ் வைத்திருக்கும் நோக்குடன் அரசாங்கத்தினாலும் கத்தோலிக்க மத நிறுவனங்களினாலும் நடத்தப்பட்ட பள்ளிகளே கட்டாயவதிவிடப் பாடசாலைகள் ஆகும்.

1863 – 1998 காலப்பகுதியில் சுமார் ஒருலட்சத்து 50 ஆயிரம் பழங்குடியினச் சிறுவர்கள் குடும்பங்களை விட்டுப் பிரிக்கப்பட்டு இவ்வாறு பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்கள் தங்களது சொந்த மொழிபேச அனுமதிக்கப்படவில்லை. அல்லது தங்கள் பண்பாட்டைப் பின்பற்றவிடாது தடுக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்.ஆதிக் குடிகள் மீது கொடுமைகள் புரியப்பட்ட இந்தப் பள்ளி முறைமையின் தாக்கங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 2008 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரு குழு, பள்ளிகளில் சேர்க்கப்பட்ட பழங்குடியின மாணவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் மீண்டும் தங்கள் குடும்பங்களுடனோ சமூகங்க ளுடனோ இணையவில்லை என்பதைக் கண்டறிந்தது. சுமார் நாலாயிரத்து 100 சிறுவர்கள் பள்ளிகளிலேயே உயிரிழந்ததனர் என்பதையும் அது கண்டுபிடித்தது.

மேலும் பலர் காணாமற்போயிருப்பதும்தெரியவந்தது. கனடாவின் பூர்வீகக் குடிகள் மீது மேற்கொள்ளப்பட்டுவந்த இத்தகைய கசப்பான வேறுபாடுகளை கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்கக்குழு(Truth and Reconciliation report) 2015 இல் வெளியிட்ட அறிக்கை “பண்பாட்டு இனப்படு கொலை” (cultural Genocide) என்று வர்ணித்திருந்தது.

நாட்டின் முதற்குடிகளை கொடுமைக்குள்ளாக்கிய பள்ளி நடைமுறைக்காக கனடா அரசு2008 ஆம் ஆண்டில் மன்னிப்புக் கோரியிருந்தது. சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கடந்த வியாழன்று வெளியாகியதும்”அது ஒரு துயரமான நினைவு. எங்கள் நாட்டின் வரலாற்றில் அவமானகரமான ஓர் அத்தியாயம்” என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வேதனை வெளியிட்டிருக்கிறார்.

அங்குள்ள பழங்குடி சமூகங்களிடையே அதிர்ச்சியும் துயரமும் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர்களது சடல எச்சங்கள் தொடர்பாக மேலும் தகவல்ளைப் பெறுவதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அருங்காட்சியகங்கள், தடயவியலாளர்கள் ஒத்துழைப்பும்பெறப்பட்டுள்ளது.

—————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.30-05-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More