கேரளாவின் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி இலக்கிய விருதினைத் திருப்பி வழங்கவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
குறித்த விருதினை பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யப்போவதாக விருதினை வழங்கும் ஓஎன்வி கல்சரல் அக்கடமி தெரிவித்துள்ள நிலையில் வைரமுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் பரிசுத்தொகையை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓஎன்வி குறுப் விருது என்பது ஞானபீட விருது பெற்ற ஓஎன்வி குறுப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதாகும். இந்த ஆண்டுக்கான விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது
வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்திருந்த நிலையில்,பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு வழங்கியமை குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்
இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள வைரமுத்து, ”காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.
அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்,”என தெரிவித்துள்ளார்.
மேலும் தான் மிக மிக உண்மையாய் இருப்பதாகவும்,தன்னுடைய உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.