வைத்திய சாலைகளில் நோயாளர் காவு வண்டிகள் (அம்புலன்ஸ்) பற்றாக்குறை காணப்படும் நிலையில், விபத்துக்கு உட்பட்ட நோயாளர் காவு வண்டியை மீள சேவையில் ஈடுபடுத்துவதில் அதிகாரிகள் அசமந்தமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி கொரோனா தொற்றாளரை ஏற்றி சென்ற வேளை கடந்த 17ஆம் திகதி நெல்லியடி சந்தியில் விபத்துக்குள்ளானது.
அதனால் வாகனத்திற்கு சிறு சேதம் செற்பட்டது. அதனை அடுத்து மேலதிக விசாரணைக்காக நெல்லியடி காவற்துறையினர் நோயாளர் காவு வண்டியை பொலிஸ் நிலையம் எடுத்தது சென்றிருந்தனர்.
இந்நிலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் சிறு சேதம் என்பதனால் குறித்த வாகனத்தை விடுவிக்க நெல்லியடி காவற்துறையினர் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், அதனை மீட்பதற்கு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை நிர்வாகமோ , வடமாகாண சுகாதர சேவைகள் திணைக்களமோ அக்கறையின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகம் திருத்த வேலைக்கான அனுமதியை தராமல் தாம் வாகனத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து மீட்க முடியாத நிலை உள்ளதாக சுகாதார சுகாதார சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டிகள் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறு விபத்துக்கு உள்ளாகி சிறு சேதங்களுடன் இரன்டு வார கால பகுதிக்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் உள்ள நோயாளர் காவு வண்டியை மீட்டு சேவையில் ஈடுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாக இருப்பது தொடர்பில் பல தரப்பினரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.