Home இலங்கை தீ காரணமாக மீன்பிடித் தொழிலில் ‘குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கங்கள்’

தீ காரணமாக மீன்பிடித் தொழிலில் ‘குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கங்கள்’

by admin

கொழும்பு துறைமுகத்திற்குள் அருகில் நங்கூரமிட்ட நிலையில் தீப்பற்றி எரிந்த  வணிகக் கப்பலில் இருந்து கடலில் கலக்கும் எண்ணெய் மற்றும் நச்சுகள் காரணமாக இலங்கை மீன்பிடி சமூகம் குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக மீனவர் சங்கங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மீன் நுகர்வு தொடர்பாக ஊடகங்களில் வெளியான பொறுப்பற்ற அறிக்கைகள் மீன்பிடி சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மீன் இனப்பெருக்கம் செய்வதிலும் அவற்றின் உணவு உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கும், பவளப்பாறைகள் அழிக்கப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மீனவர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எண்ணெய் கசிவு ஏற்பட்டால் நீர்கொழும்பு களப்பில் எண்ணெய் கசிவு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கொத்தலாவல பாலத்திற்கு கீழ் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு கரைக்கு வருவதற்கு முன்பு கப்பல் மூழ்காமல் தடுப்பது மிக முக்கியமாக விடயம் எனவும்,  இது ஓரளவு சேதத்தை குறைக்கும் எனவும், அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த தெரிவித்துள்ளார்.

கப்பல் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மீன்பிடியை மீண்டும் எப்போது ஆரம்பிக்கலாம் என்ற திகதி நிர்ணயிக்கப்படாதால், ஏராளமான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொடிய கொரோனா தொற்றுநோயால் மீன்பிடி சமூகம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், கப்பல் தீ விபத்து காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீனவர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் நிவாரணம் வழங்குமா? என மீனவர் சங்கத் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அன்றாட வருமானத்தை இழந்து வரும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு நிவாரணத் திட்டம் ஒன்று ஏற்படுத்தப்படுமென இராஜாங்க மீன்பிடி அமைச்சர் காஞ்சன விஜசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் விபத்து காரணமாக, அரசாங்கத்திற்கு கிடைக்கும் இழப்பீடு எவ்வளவு எனவும், வருமானத்தை இழந்த மீனவர்களுக்கு அதில் ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு எனவும் மீனவர் சங்கத் தலைவர் ஹெர்மன் குமார கேள்வி எழுப்பியுள்ளார்.

“மீனவர்களை அரசாங்கம் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்துள்ளது  என்பதை எமக்கு அறிவிக்க வேண்டும்” என அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொஷாந்த வலியுறுத்தியுள்ளார்.

எரியும் கப்பலில் இருந்து வெளியேறிய கழிவுகளில் அடங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் இரசாயன கூறுகளை மீன்கள் உண்பதால், மீனை உட்கொள்வது மனிதர்களுக்கு உகந்ததல்லவென சமூக ஊடகங்களில் செய்யப்படும் பிரச்சாரம் மீன்பிடித் தொழிலில் பேரழிவை ஏற்படுத்துமென மீனவர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுபோன்ற நச்சுப்பொருட்களை உண்ணும்  மீன்கள் இறக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ள மீனவர் சங்கத் தலைவர் அருண ரொஷாந்த, எவ்வாறெனினும் மீனவர்கள், மீன்களைப் உயிருடன் பிடிப்பதால் தேவையற்ற அச்சம்கொள்ளத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த மீன்களின் செதில்களில் பல பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், அந்த கருத்தை ஏற்க மீனவர் சங்கத் தலைவர், பருவக் காலங்களில் பல இறந்த மீன்கள் கரையொதுங்குவது இயல்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நேரத்தில் கடல் மீன்களை உண்பதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என நாராவின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி தீப்த அமரதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“மீன் சாப்பிடக்கூடாது என்ற கருத்து ஆதாரமற்றது, ஏனெனில் இது நடந்தவுடன் பெரிய மீன்கள் இங்கிருந்து வெளியேறும். இதனால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படப்போவது இல்லை. எனவே, மீன் சாப்பிடுவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படப்போவது இல்லை”  

இந்த விவகாரம் குறித்து விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி நாராவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மீன்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

“தீ விபத்து ஏற்பட்டவுடன், வேறு பாதிப்புகனை அடிப்படையாகக் கொண்டு, அதாவது புகை வாசனை மற்றும் கப்பலின் இடிபாடுகள் மீன்பிடி படகுகளுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மீன் பிடியை நிறுத்தினோம். கப்பலில் இருந்து வெளியேறிய இரசாயனப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறுவதில்லை, எனவே, இந்த பகுதியில் தற்போது எந்த மீன்பிடி நடவடிக்கையும் நடைபெறவில்லை. எனவே, மீன் சந்தைக்கும் வரப்புாவது இல்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More