Home உலகம் குடும்ப வன்முறையில் ஈடுபட்டபின் காட்டுக்குள் துப்பாக்கியுடன் மறைந்த முன்னாள் சிப்பாய் சுடப்பட்டுக் கைது

குடும்ப வன்முறையில் ஈடுபட்டபின் காட்டுக்குள் துப்பாக்கியுடன் மறைந்த முன்னாள் சிப்பாய் சுடப்பட்டுக் கைது

by admin

குடும்ப வன்முறை புரிந்த பிறகு துப்பாக் கியுடன் தப்பித் தலைமறைவாகியிருந்தமுன்னாள் படைச் சிப்பாய் ஒருவர் காவல்துறையினாிடம் பிடிபட்டுள்ளார். பிரான்ஸின் Dordogne என்னும் இடத்தில் சிறிய காட்டுப் பகுதி ஒன்றில் நேற்று முதல் மறைந்திருந்த ஆபத்தான அந்த ஆயுதபாணி கைது நடவடிக்கையின் போது படுகாயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

பிரான்ஸின் Nouvelle-Aquitaine பிராந்தியத்தில் Dordogne மாவட்டத்தில் காட்டுப் பகுதி ஒன்றில் மறைந்திருந்த அந்த நபரைப் பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கான காவல்துறை அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் நேற்று அதிகாலை முதல் ஹெலிக்கொப்ரர்களின் உதவியுடன் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நிலையில் இன்று நண்பகல்வேளை கொமாண்டோபடையினர் அவர் ஒளிந்திருந்த இடத்தை நெருங்கி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

கைது நடவடிக்கையின் போது காட்டுப்பகுதியில் பெரும் வெடியோசைகள் கேட்டன என்று அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் றொணி சூ புவாவைப் (Rosny- sous-Bois) பிறப்பிடமாகக் கொண்டஅந்த நபர் Dordogne மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படும் அவர் தனது முன்னாள் மனைவிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

குடும்ப வன்முறைகளுக்காகக் காலில் ‘காப்பு’ (electronic bracelet) அணிவித்த நிலையில் கண்காணிக்கப்பட்டுவந்தவர் என்றும் கூறப்படு கிறது.

அண்மையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு தனது முன்னாள் மனைவியின் இல்லத்துக்குத் துப்பாக்கிகளுடன் சென்று அங்கு வன்முறையில் ஈடுபட்டு ள்ளார்.மனைவியின் தற்போதைய கணவனைத் தாக்கியுள்ளார்.

பெண்ணையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அங்கு விரைந்த காவல்துறையினர் மீது அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். காவல்துறை வாகனங்களை நோக்கியும் சுட்டுச் சேதப்படுத்தியுள்ளார்.பின்னர்அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பிச்செல்ல முயன்ற அவரைத் தேடுவதற்காகஅழைக்கப்பட்ட காவல்துறை ஹெலிக்கொப்ரர் ஒன்றின் மீதும் அவர் சுட்டுள்ளார்.

நான்கு தடவை சிறை சென்று வந்த 29 வயதுடைய அந்த நபர் ஆயுதங்களைச் சரியாகக் கையாள்வதிலும் இலக்கு வைத்துச் சுடுவதிலும் தேர்ந்தவராகஇருந்ததால் எப்படியாவது அவரைச் சரணடைய வைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன.

நாட்டின் தென் மேற்கே Dordogne மாவட்டத்தில் Lardin-Saint-Lazarre என்னும் இடத்தில் அவர் ஒளிந்திருந்த பிரதேசத்து மக்கள் பாதுகாப்புக் கருதி வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்கப்பட்டிருந்தனர். பிரான்ஸின் குடும்ப வன்முறைகளில் ஆயுத பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதேவேளை – பெல்ஜியத்தில் இயந்திரத் துப்பாக்கிகளுடன் தப்பியோடிய படை வீரர் ஒருவரை அந்நாட்டின் படைகள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகத் தேடி வருகின்றன.

நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று நோய் நிபுணர் உட்பட மருத்துவத் துறையினருக்கு அச்சுறுத்தல் விடுத்துவந்த அவர் இராணுவக் களஞ்சியத்தில் இருந்து பெருமளவு ஆயுதங்களை அபகரித்துக்கொண்டு அடர்ந்த வனப் பகுதி ஒன்றில் தலைமறைவாகி உள்ளார்.

அவர் எங்காவது திடீரெனத் தோன்றி தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தால் பெல்ஜியம் நாடு முழுவதும் உஷார் நிலை பேணப்படுகிறது.

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.31-05-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More