இலங்கையில் போர்க் காலத்தில் காணாமல் போனவர்கள், சரணடைந்த அல்லது உறவுகளால் கையளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் கதி என்னவாயிற்று என்பது இன்னும் தெரியாமல் உற்றார் உறவினர்கள் சொல்லொணா துன்பத்தில் தத்தளிக்கின்றனர். இந்நிலையில் போர்க் காலத்தில் இலங்கை பொலிஸ் தலைவராக இருந்த ஒருவரை காணாமல் போனவர்களைக் கண்டறியும் அலுவலகத்தின் (ஓஎம்பி) தலைமைப் பொறுப்புக்கு நியமித்துள்ளது சர்வதேச அளவில் கடும் விமர்சனம் மற்றும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தும் -ஜொஹனஸ்பர்கை தலைமியிடமாகக் கொண்டு இயங்கும் உண்மை மற்றும் சமாதானத்திற்கான செயற்திட்டம் (ஐடிஜேபி), போர்க் காலத்தில் காவல்துறைக்குத் தலைவராக இருந்த ஒருவரை ஓஎம்பி அலுவலகத்திற்கு தலைவராக நியமித்துள்ளது இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடைக்கால நீதி வழங்கு பொறிமுறைகள் முற்றாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி வழங்கும் அந்தப் பொறிமுறை முந்தைய அரசால் ஏற்படுத்தப்பட்டது. ஓஎம்பி அலுவலகத்தின் தலைவராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த குமார விக்ரமரட்ண நியமிக்கப்பட்டுள்ளது காணாமல் போனவர்களின் குடும்பத்தாருக்கு உண்மை தெரியவும் நீதி கிடைக்கவும் இருந்த வழிமுறையை முற்றாக இல்லாமல் செய்துவிட்டது என்று இடைக்கால நீதி வழங்கல் பொறிமுறையில் முன்னணி சர்வதேச வல்லுநர்களில் ஒருவரும் ஐடிஜேபி அமைப்பின் செயல் இயக்குநருமான யாஸ்மின் சூக்கா விமர்சித்துள்ளார்.
“இது ஏற்புடையது அல்ல- இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதில் தொடர்புடைய மூன்று பொலிஸ் பிரிவுகளுக்குத் தலைமையேற்றிருந்தார் என்று ஐ நா விசாரணைகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் தற்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரணைகளை நடத்துகிறார். பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் திட்டமிட்ட சித்திரவதைகளில் ஈடுபட்ட பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பு வகித்தவர் என்கிற முறையில்-வெளிநாடுகளுக்கு பயணித்தால் சர்வதேசளவில் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் ஆபத்திலுள்ள ஒரு உயரதிகாரி ஓஎம்பி தலைமைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்“ என்று ஐ டி ஜே பியின் செயல் இயக்குநர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களுக்கான அந்த ஓஎம்பி அலுவலகம் போர்க் காலத்தில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்களின் கதி என்னவாயிற்று என்பதைக் கண்டுபிடித்துக் கூற வேண்டிய கடப்பாடு கொண்டதாகும். அந்த ஓஎம்பி அலுவலகம் கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டமொன்றின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த அலுவலகத்தால் ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பதோடு மட்டுமின்றி, 12 ஆண்டுகளாகக் கதறி அலையும் உறவுகளுக்கு காணாமல் போனவர்கள் குறித்து எவ்விதமான ஆக்கபூர்வ தகவல்களும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுப் போரின் போது கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க முன்னாள் நீதிபதி மேக்ஸ்வெல் பரணகம தலையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவொன்று சுமார் 20,000 பேர் `காணாமல் போனது உறுதி` என்று கண்டறிந்தது. ஆனால் ஐ நா உட்பட சர்வதேச அமைப்புகள் இந்த எண்ணிக்கை இரட்டிப்புக்கு மேலாக இருக்கும் என்று கூறியுள்ளன.
குறிப்பாக `வெள்ளைக் கொடி கொலைகள்` குறித்து தனியானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. மிகவும் சர்ச்சைக்குரிய ஓஎம்பி அலுவலகத்திற்கு சர்வதேச நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதியுதவியை நிறுத்தக் கோரி அவர்களுக்கு எழுதப்போவதாக யாஸ்மின் சூக்கா அம்மையார்
கூறியுள்ளார்.
“இலங்கைக்குள்ளும் வெளியேயும் இருக்கும் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஐ நா உட்பட சர்வதேச கொடையாளர்களுக்கு எழுதும்படி நாம் வலியுறுத்துவோம். தத்தமது நாடுகளில் வரி செலுத்துவோர் மூலம் கிடைக்கும் நிதி, இலங்கையில் நடைபெற்ற குற்றச் செயல்களை மூடி மறைத்து தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருக்கும் கலாச்சாரத்தை ஆதரிப்பவர்களுக்கும் செல்லாமல் இருப்பதைத் தடுக்க நாங்கள் கோருவோம்“. அது மட்டுமின்றி தமது அமைப்பு ஐ நா உட்பட உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் இலங்கையில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ள நியமனங்கள் தொடர்பில் இரகசிய ஆவணங்களை தமது அமைப்பு அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் அவமானங்கள் ஏற்கனவே ஓஎம்பி அலுவலகத்தின் தலைவராக நீதிபதி உபாலி அபேரட்னே நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது நியமனம் “ஒரு அவமானம் மற்றும் ஒரு வன்முறைச் செயல்“ என்று இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கடுமையாக விமர்சித்திருந்தன.
அரசியல் பழிவாங்கல் குறித்த குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவான் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் தலைவராக இருந்தவர். மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பல வழக்குகளில் “தலையிட்டு சட்ட நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்தவர்“அவர், மேலும் சட்ட வழிமுறைகள் மீறலில் ஒரு“குறியீடாக“ இருந்தவர் என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பஷேலா அம்மையார் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் அலுவலகத்திற்கு அவரைத் தலைவராக நியமித்தது அந்த அலுவலகத்தின் சுயாதீனம் மற்றும் நம்பகத்தன்மையைப் பெரியளவில் சீர்குலைத்து அது எந்தளவுக்கு திறமையாகச் செயல்பட முடியும் என்பது குறித்த கேள்விகளை எழுப்புகிறது என்று ஐ நா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி வழங்க அமைக்கப்பட்ட இரண்டு அமைப்புகளில் ஓஎம்பி ஒன்று மற்றொன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் அலுவலகம். மிகவும் உணர்வுபூர்வமான இந்த இரண்டு அமைப்புகளின் தலைமைப் பதவிகளுக்கு `சீருடை அதிகாரிகளை` நியமித்துள்ளதையும் ஐடிஜேபி கடுமையாகச் சாடியுள்ளது.
அவ்வகையில் இழப்பீடு வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள அலுவலகமும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலும் ஜனாதிபதியின் நெருங்கிய கூட்டாளியுமான வடுக பாலித பியசிறி பெர்ணாண்டோவின் நியமனத்தின் மூலம் இப்போது இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. நீக்கமும் புனர்வாழ்வும் கடந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவொன்று ஆயுதக் கொள்வனவு மோசடி ஒன்றில் சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உழல் செய்ததான குற்றச்சாட்டில் மேஜர் ஜெனரல் பெர்ணாண்டோ மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் பெர்ணாண்டோ எவ்விதமான அரச பதவிக்கும் நியமிக்கப்படக் கூடாது என்றும் கூறியிருந்தது. ஆனால் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறின. கோத்தாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மற்றொரு ஜனாதிபதி ஆணைக் குழு மேஜர் ஜெனரல் பெர்ணாண்டோவை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து முற்றாக விடுவித்தது. இதையடுத்து மூத்த சிவில் நிர்வாக பொறுப்பு ஒன்றுக்கு இராணுவத்தைச் சேர்ந்த அவர்
நியமிக்கப்பட்டார்.
“போரில் இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான இழப்பீடு பெருந்தொகையைக் கொண்டதாக இருக்கும். அப்படியான சூழலில் இடைக்கால நீதியை வழங்கும் வழிமுறை இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இழப்பீடுகளை வழங்கும் அமைப்பிலுள்ள ஒருவர் முன்னர் பொலிசாரின் தீவிர விசாரணைக்கு ஆளானவர்.
அந்த வழிமுறைக்கு முன்னர் நம்பகத்தகுந்த வாய்ந்ததாகக் கருதப்பட்டு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் இருந்தது. எனினும் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட அவர் முறையான வகையில் இன்னும் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்படவில்லை“ என்கிறார் யாஸ்மின் சூக்கா. தொடரும் சர்ச்சைக்குரிய நியமனங்களில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் செய்யப்பட்ட நியமனங்கள் ஒன்றையும் ஐடிஜேபி சுட்டிக்காட்டுகிறது.
நாட்டின் முன்னாள் பொலிஸ் மா அதிபரும் தற்போது ஓஎம்பி அலுவலத்தின் தலைவராகவும் உள்ள ஜயந்த விக்ரமரட்னவின் முன்னாள் சகாவான சந்திர நிமால் வக்சித ஊழல் தடுப்பு ஆணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009-10 ஆம் ஆண்டு காலப்பகுதியில்- தொடர்ச்சியாக சித்திரவதைகளுக்கு பொறுப்பான- பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஒன்றுக்கு வக்சித தலைவராக இருந்தார் என்று ஐ நா கூறுகிறது. சாட்சிகளுக்கான பாதுகாப்பு குறித்தும் தனது கவலையை ஐடிஜேபியின் செயல் இயக்குநர் யாஸ்கின் சூக்கா வெளியிட்டுள்ளார்.
“இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்கள் பாதுகாப்பாக இடைக்கால நீதியை வழங்கும் வழிமுறைகளுடன் ஈடுபட முடியாது. அதில் வன்முறைகள் மற்றும் குற்றங்கள் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்கள் இப்போது அந்த வழிமுறைகளில் அங்கம் வகிக்கின்றனர். அடிப்படையில் இந்த விஷயமே சாட்சிகளுக்குப் பேராபத்தையும் அவர்களுக்கான பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி அவர்களை அபாயத்தை நோக்கித் தள்ளுகிறது“. இந்த அண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற விவாதங்களில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு ஒரு முக்கிய பேசுபொருளாக இருந்தது என்பதும் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் சாட்சியங்களைச் சேகரித்து அதை ஆவணப்படுத்த வேண்டும் என்பது ஐ நா ஆணையரால் சுட்டிக்காட்டப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே சர்ச்சைக்குரிய இந்த நியமனங்கள் குறித்து தாங்கள் புதன்கிழமை(2 ஜூன்) ஐ நா மனித உரிமை ஆணையாளருக்கு அதிகாரபூர்வமாக எழுதியுள்ளதாக ஐடிஜேபி டிவிட்டரில் தெரிவித்துள்ளது.