Home உலகம் டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு”

டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு”

by admin
டென்மார்க்கின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான பவுல் ஸ்லூட்டர் (Poul Schluter) கடந்த மாத இறுதியில் காலமானா‌ர்.அவரது இறுதிச் சடங்குகள் டென்மார்க்கின் அரசமைப்பு தினமாகிய (Constitution Day) நாளை (ஜூன் 5ஆம் திகதி) கொப்பனேஹனில் (Copenhagen) நடைபெறவுள்ளன.
சில தசாப்தங்களுக்கு முன்பு ஈழத் தமிழ் அகதிகள் தொடர்புபட்ட ஒரு முக்கிய வழக்கு விவகாரம் பவுல் ஸ்லூட்டரின் பிரதமர் பதவியையும் அரசியல் எதிர்காலத்தையும் பறித்தது. மறைந்த தங்கள் தலைவரை நினைவு கூருகின்ற டெனிஷ் மக்கள் அந்தத் “தமிழ் வழக்கு” வரலாற்றையும் மீட்டுப் பார்க்கின்றனர்.
1980 களில் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிய ஈழத்தமிழ் அகதிகள் முதலில் கால் பதித்த ஸ்கன்டிநேவியன் நாடுகளில் ஒன்று டென்மார்க். இலங்கைக்கு வெளியே ஈழத்தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தால் ஆட்சி கவிழ்ந்து அங்கு பல பிரபலங்களது அரசியல் வாழ்வு அடியோடு அஸ்தமித்துப் போன தேசமும்
டென்மார்க்தான்.
டென்மார்கிலும் ஏனைய பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களில் பலர் அறிந்திராத தகவல் இது. டெனிஷ் மொழியில்”Tamilsagen” என்று அழைக்கப்படுகின்ற  “தமிழ் வழக்கு” (Tamil case) என்னும் அரசியல் நிர்வாக ஊழல் விவகாரம் டென்மார்க்கின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தடமாக – வடுவாகப்-பதிவாகி விட்டது. தமிழர்களோடு தொடர்புபட்ட அந்த விடயம் டென்மார்க்கின் “வார்ட்டர் கேற்” (‘Watergate’) என்றும் வர்ணிக்கப்படு கின்றது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டென்மார்க் நாட்டில் நீண்ட காலம்(1982 – 1993) பதவியில் இருந்த ஒரே பிரதமர் பவுல் ஸ்லூட்டர் ( Poul Schluter). அவர் கடந்த மே 27ஆம் திகதி தனது 92 ஆவது வயதில் காலமானார். தட்சர், றீகன் போன்ற அன்றைய உலகத் தலைவர்களது அணுகுமுறைகளைப் பின்பற்றி டென்மார்க்கில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு பிரபல கன்சர்வேட்டிவ் தலைவர் அவர். அவரது 11 வருட கால பிரதமர் பதவியையும் பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சியின் (Conservative Party) தலைவிதியையும் முடிவுக்குக் கொண்டுவந்த ஒர் ஊழல் விவகாரம் தான் “தமிழ் வழக்கு” (Tamil case).
??தமிழ் வழக்கின்” பின்னணி என்ன?
டென்மார்க்கில் அதிக எண்ணிக்கை யான குடியேற்றவாசிகளை உள்வாங்கு கின்ற Liberal Aliens கொள்கை 1983 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனையடுத்து 1984,1985 காலப்பகுதிகளில் சுமார் மூவாயிரம் ஈழத் தமிழர்களுக்கு அந்நாட்டில் அகதிகள் உரிமை வழங்கப்பட்டது. இலங்கையில் உள்ள தங்களது குடும்பஉறுப்பினர்களை அழைத்துக் கொள்வதற்கும்(family reunification) அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சந்தர்ப்பத் தில் சிறிலங்காவில் ஓர் இடைக்கால அமைதி நிலை தோன்றியது. அதனால் ஈழ அகதிகள் உண்மையிலேயே அரசி யல் அகதிகளா என்ற விவாதங்கள், சர்ச்சைகள் டென்மார்க்கில் எழுந்தன.
1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே இணக் கம் ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அங்கு தற்காலிக அமைதி திரும்பியது. அதனைக் காரணம் காட்டி டென்மார்க் தனது நாட்டில் உள்ள ஈழ அகதிகள் அவர் களது குடும்பத்தவர்களைத் தங்களிடம் அழைப்பதற்காக விண்ணப்பிப்பதைத்தடுக்க முயன்றது.
அச்சமயம் டென்மார்க் பிரதமர் பவுல் ஸ்லூட்டரின் அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த நின் ஹான்ஸன் (Ninn-Hansen) ஈழத் தமிழர்களைத் திருப்பிஅனுப்ப முயன்றார். அதற்கு எதிர்ப்புக்கிளம்பியது. அதனால் தனது முடிவைமாறிய அவர் அங்கு அகதிகளாக உள்ள தமிழர்கள் வதிவிட உரிமை(residence permit) பெற்றுக் கொள்வதையும் தங்கள் மனைவி, பிள்ளைகளைத் தங்களோடு சேர்ப்பதற்காக விண்ணப்பிப்பதையும் தடுத்தார்.
அந்த விவகாரம் டெனிஷ் நாடாளுமன்றம் வரை விவாதத்துக்கு வந்தது.ஆனால் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.ஈழ அகதிகளுக்கு எதிராகப் பிரதமர் பவுல் ஸ்லூட்டரின் அரசினால் சட்டரீதியான முடிவு எதனையும் எடுக்கமுடியாமற்
போனது. ஈழ அகதிகள் குடும்ப ஒன்றிணைவுக்கான(family reunification) தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதை வழக்கம் போலத் தொடர்ந்தனர்.
எனினும் நீதி அமைச்சர் நின் ஹான்ஸன் அதனைத் தடுக்கும் விதமான ரகசிய உத்தரவுகளைத் தனது அமைச்சின் நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கினார்.சட்டத்துக்குப்  புறம்பாகதமிழர்களது விண்ணப்பங்களை முடக்கிவைக்கப் பணித்தார். அது வெளியே தெரிய வந்ததும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. ஊடகங்கள் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன. நாட்டின் சட்டங்களை நீதியமைச்சர் மீறிவிட்டார் என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்ற விசாரணையை எதிர்கொள்ள நேர்ந்ததால் அமைச்சர் பதவி துறந்தார். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே ஈழ அகதிகள் விடயத்தைத் தானே
தனித்து ரகசியமாக – முறைகேடான – வழிகளில் கையாண்ட நீதி அமைச்சரது நடவடிக்கையே “தமிழ் வழக்கு” என்னும் பெயரில் பெரும் சட்டச் சிக்கலாக உருவெடுத்தது.
நாட்டின் அரசியலில் புயலைக் கிளப்பிய அந்த விவகாரம் இறுதியில் உச்ச நீதி மன்ற நீதிபதி ஒருவரது தலைமையில் விசாரிக்கப்படும் அளவுக்குச் சென்றது. அது பின்னர் பிரதமர் பவுல் ஸ்லூட்டரின் அரசாங்கத்தினது பதவி துறப்புக்குக் காரணமாகியது. டென்மார்க் அரசியலில் ஒரு கனவானாக மதிக்கப்பட்ட அவரது கன்சர்வேட்டிவ் கட்சியின் (Conservative People’s Party) அரசியல் எதிர்காலமும் அத்தோடு அஸ்தமித்தது.
தனது அமைச்சுப் பொறுப்புகளுக்குப் புறம்பாக – முறை கேடாக-சட்ட விரோத மாகச் – செயற்பட்ட குற்றத்துக்காக நீதி அமைச்சருக்கு 1995 இல் நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மிகுந்த நம்பிக்கையுடன் முன்னெடுத்த அவரது அரசியல் பயணமும் அத்தோடு முடிவுக்கு வந்தது. தனது அரசியல் கனவுகள் கலைந்த நிலையில் நீதி அமைச்சர் நின் ஹான்ஸன் கடந்த 2014 ஆம் ஆண் டில் தனது 92 வயதில் காலமானார்.
டென்மார்க்கில் இன்று ஆயிரக்கணக்கான தமிழர்களும் வெளிநாட்டவர்களும் புகலிடம் பெற்று  வசிக்கின்றனர். ஆரம்ப நாட்களில் அங்கு வந்து இறங்கிய தமிழர்கள் சம்பந்தப்பட்ட  “தமிழ் வழக்கு” அந்த நாட்டின் அரசியல் வரலாற்றோடு தமிழர்
களைப் பிணைத்து விட்டுள்ளது.
(படம் : ?அறுநூறு பக்கங்கள் கொண்ட “தமிழ் வழக்கு” ஆவணங்களுடன் டெனிஷ் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன்ஸ் ஹார்ன்ஸ்லெட். Mogens Hornslet).
—————————————————————–
– பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
04-06-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More