கொடிய தொற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான வசதிகளுக்காக சுகாதார ஊழியர்கள் போராடுகின்ற சூழ்நிலையில், சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பானது அடக்குமுறை நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள தொழிற்சங்கங்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன.
கொரோனா தொற்று மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற நிலையில் சுகாதார ஊழியர்கள் நோயாளிகளுடன் நேரடியான தொடர்புகளைப் பேணுகின்றனர்.
எனினும் தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்க தேவையான குறைந்தபட்ச வசதிகளையேனும் அவர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகளை விஞ்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரான இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிடம், அவுஸ்திரேலிய அரசு நேற்று பில்லியன் கணக்கான சுகாதார உபகரணங்களை பரிசாக வழங்கியுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான சுகாதார ஊழியர்களும் கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாதியர்கள் மற்றும் உதவி வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையில் 24 தொழிற்சங்கங்கள் கூட்டாக, ஊழியர்களின் தேவைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
இதற்கமைய, நேற்றைய தினம் (03) காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சுகாதார ஊழியர்கள் 5 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார ஊழியர்களின் ஒரு குழு தங்கள் கோரிக்கைகளுக்காக தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அடக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி அத்தியாவசிய சேவை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
அத்தகைய தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், 2021 ஜூன் 2 திகதியிடப்பட்ட 2230/9ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஊடாக, ஜனாதிபதி சுகாதார சேவையை அதத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் ஜனாதிபதி இவ்வாறு நடந்து கொண்டதாக, ஜூன் 3, வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
” கொரோனா தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்காக பல துறைகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசியயை கோரி வேலைநிறுத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்பத்திலும், கிராசேவகர்கள்தடுப்பூசி கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோதும், அந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, கிராம சேவகர்கள் தடுப்பூசி கிடைக்கப்பெறாத நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.” என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, இலங்கையில் கொரோனா தொற்று நோயுடன் போராடி, சுகாதார சேவை ஊழியர்கள் தங்கள் சேவைகளைத் தொடர அயராது உழைத்து வருகின்ற நிலையில், சுகாதார சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
“அவ்வாறான நிலையில், அவசரமாக அத்தியாவசிய சேவை குறித்த அறிவிப்பை வெளியிடுவதானது, தொழிற்சங்க நடவடிக்கையை அடக்குவதாக அமையும் என்பது தெளிவாகிறது.” என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவதற்கு பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த செயல் வடிவம் அந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றுவதே என தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுகாதார ஊழியர்கள் தமது சேவைகளின் பணிகளைச் செய்வதற்குத் தேவையான வசதிகளைக் கோருகையில், அந்த நிலைமையைப் பயன்படுத்தி அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்குவது என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.
தொற்றுநோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க தேவையான வசதிகளை வழங்காமல் சுகாதாரத் தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை அடக்கும் செயற்பாட்டை, தொழிற்சங்கத் தலைவர்களான ஜோசப் ஸ்டாலின், ரவி குமுதேஷ், ஜகத் குருசிங்க மற்றும் சிந்தக பண்டார ஆகியோர் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்த, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி ஏராளமான பிரத்தியேக பாதுகாப்பு அங்கிகளை இராணுவத்தின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கினார்.
இந்த பாதுகாப்பு உபகரணங்களில் 16,500 நுண்ணுயிர் பாதுகாப்பு அங்கிகள், 25,000 அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் , 100,000 கையுறை தொகுதி , 175 கண்ணாடி மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படும் போது முன்னணி சுகாதார ஊழியர்களால் பயன்படுத்தக்கூடிய பதினைந்து 25 லீட்டர் குளிர் பெட்டிகள் ஆகியவை அடங்கும்.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு 11.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது