ஜீ-7 மாநாட்டுக் குழுவின் தலைவர்களை மகாராணி எலிஸபெத் தலைமையில் அரச குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். இங்கிலாந்தின் கடற்கரை பிரதேசமான கார்பிஸ் பேயில் (Carbis Bay) முக்கிய நாடுகளது தலைவர்கள் கூடும் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.
மாநாட்டில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல், பிரெஞ்சு அதிபர் மக்ரோன், ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகா, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலியப் பிரதமர் மரியோ ட்ராகி ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.
இவர்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவி உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) அவர்களும் அங்கு பிரசன்னமாகி உள்ளார். சுமார் பதினெட்டு மாதங்கள் நீடித்த பெரும் தொற்றுநோய்க் காலத்தின் பிறகு பிரதான நாடுகளின் தலைவர்கள் முகத்துக்கு நேரே – சந்தித்துள்ளனர்.
வீடியோ வழியாக டிஜிட்டல் திரைகளில் நடைபெற்றுவந்த பல கூட்டங்களுக்குப் பிறகு தலைவர்கள் நேரில் – மாஸ்க் அணியாமல்- சந்தித்துக் கொண்ட மாநாட்டின் காட்சிகள் லண்டனில் வெளியாகி உள்ளன.
ஏழு நாடுகளின் தலைவர்களை அரச குடும்பத்தினர் வரவேற்கின்ற நிகழ்வுஏடன் உள்ளக மழைக்காட்டு மையத்தில் (Eden Project, indoor rainforest centre) நடைபெற்றது. அரச குடும்பத்தவர்களும் தலைவர்களும் மாஸ்க் அணியாதவர்களாக – நெருங்கி அளவளாவி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிப் பங்கீடு, பருவநிலை மாற்றம் ஆகிய இரு விடயங்கள் ஏழு தலைவர்கள் மாநாட்டின் முக்கிய விவகாரங்களாக விவாதிக்கப்பட வுள்ளன. ‘கடந்த 18 மாதகாலப்பகுதியில் விட்ட தவறுகள் மீள நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுமுக்கியமானது’ – என்று மாநாட்டை நடத்துகின்ற இங்கிலாந்தின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தொடக்க உரையில் தெரிவித்திருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் தனிமைப்பட்டுப் போயிருந்த அமெரிக்காவின் முக்கியத்துவத்தை சர்வதேச அரங்கில் மீள நிறுவவேண்டிய பொறுப்போடு புதிய அதிபர் பைடன் இந்த மாநாட்டில் தனது சகாக்களை எதிர்கொள்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஐரோப்பாவும் பல உலக நாடுகளும் மெல்ல மீண்டு வருகின்றன. எனினும் இங்கிலாந்தில் வைரஸ் திரிபுகளது தொற்றுக்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளில் இருந்து நாட்டை முற்றாக விடுவிக்கின்ற இறுதி நாளைத் தள்ளிப் போடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறுகின்ற பகுதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குகின்ற விடுதி ஒன்று தொற்றுக் காரணமாக மூடப்பட்டுள்ளது.அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கின்ற காவல்துறை உத்தியோகத்தர்களில் ஒருவருக்கும் வைரஸ் தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
—————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.11-06-2021