உலகம் பிரதான செய்திகள்

கூட்டமாக வரும் அகதிகளை விரட்ட கிறீஸ் எல்லையில் ஒலிப்பீரங்கிகள்

துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக நுழைகின்ற குடியேறிகளை விரட்டு தற்காக பெரும் ஒலி அலைகளை எழுப்பும் பீரங்கிகளை கிறீஸ் தனது எல்லையில் நிறுவி உள்ளது. புகலிடம் கோருகின்ற அகதிகளை ஐரோப்பாவுக்கு வெளியே-மூன்றாவதுநாடு ஒன்றுக்கு-அனுப்பி அங்கு வைத்து அவர்களது கோரிக்கையைப் பரிசீலிக்கின்ற திட்டத்துக்கு டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தமை பற்றிய செய்தி வெளியாகிய சில தினங்களில்அகதிகளுக்கு எதிராக கிறீஸிலிருந்து வந்துள்ள மற்றொரு தகவல் இது.

ஐரோப்பிய நாடுகள் அதன் ஒன்றியத்தின் குடியேறிகள் தொடர்பான பொதுச் சட்டங்களை மீறித் தனித்தனியே கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்திருப்பதை இந்த இரு நாடுகளின் தீர்மானங்களும் காட்டுவதாக அகதிகள் உரிமை பேணும் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.

துருக்கியையும் கிறீஸ் நாட்டையும் இணைக்கும் எவ்ரோஸ் நதி(Evros River)ஊடாக நுழைகின்ற குடியேறிகளைத்தடுப்பதற்கு அங்கு இராணுவ வாகனங்களில் ஒலிப் பீரங்கிகளை (Sound Cannons)நிறுவ கிறீஸ் எல்லைக் காவல் படை தீர்மானித்துள்ளது.

நீண்ட தூரம் ஒலி அதிர்வுகளை ஏற்படுத்துகின்ற இத்தகைய சாதனங்கள் (long range acoustic devices) ஜெற் விமானத்தை (jet engines) விட அதிகமான இரைச்சல் எழுப்பக் கூடியவை ஆகும். ஐரோப்பிய எல்லைக்குள் நுழைவதற்கு குடியேறிகள் வழக்கமாகப் பயன்படுத்தி வருகின்ற எவ்ரோஸ் பகுதியில் ஏற்கனவே டிஜிட்டல்வேலிகள்,மற்றும் கண்காணிப்புகளைகிறீஸ் நிறுவி உள்ளது.

அதற்கு மேலதிகமாக இந்த ஒலிப் பீரங்கிகளும் நிறுத்தப்படவுள்ளன.ஒலிப் பீரங்கி என்பது ஒரு சிறிய கருவி.ஒலி அளவில் 162 டெசிபெல் (162 decibels) பேரிரைச்சல் எழுப்ப வல்லது. மனித உடலுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சியையும் பெரும் வலியையும் ஏற்படுத்தக் கூடியது. மக்கள் கூட்டத்தை அல்லது விலங்குகளை விரட்டுவதற்காக காவல்துறையினா் ஒலிப் பீரங்கிகளைப் பயன்படுத்துவதுண்டு.

கிறீஸ் நாட்டின் இந்த நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் ஒருவர் கவலை வெளியிட்டிருக்கிறார்.”தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (use of the technology) குடியேற்ற வாசிகளைத் தடுப்பது அடிப்படை உரிமை தொடர்பான ஐரோப்பியச் சட்டங்களுக்கு முரணானதாக அமையலாம்”என்று அவர் கூறியிருக்கிறார்.

“உண்மையான ஏதிலிகளைத் தடுப்ப தல்ல. சட்டவிரோதமாக – பெரும் கூட்டமாக – வந்து குழப்பம் விளைவிப்போரை ஒழுங்கு படுத்துவதே இதன் நோக்கம்” என்று கிறீஸ் அரசுத் தரப்பில்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

🌊படகுகளை விரட்ட”செயற்கை அலை”

இதேபோன்று ஆங்கிலக் கால்வாய் வழியே பிரிட்டனுக்குள் நுழைகின்ற ஆபிரிக்க அகதிகளது படகுகளைத் தனது கடல் எல்லைக்கு வெளியே தள்ளுவதற்கு” செயற்கையாக அலைகளை” உருவாக்கும் தொழில்நுட்பத்தை (wave machine) பயன்படுத்த அந்த நாடு திட்டமிட்டிருந்தது.

நீரை வாரி இறைத்துப் பேரலைகளைஉருவாக்கி (pumps generating waves) படகுகளைத் தள்ளி விரட்டுகின்ற அந்தத் திட்டத்தை அகதிகள் உரிமை பேணு வோரும் எதிர்க்கட்சியினரும் கடுமையாகஎதிர்த்தனர். அதனால் பொறிஸ் ஜோன்சனின் அரசு திட்டத்தைக் கைவிட்டது.

பெருந் தொற்று நோய் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் ஏற்படுத்தவுள்ள பாரியதொழில் இழப்புகளும் வறுமையும் குடிபெயர்வுகளைத் தீவிரப்படுத்தவுள்ளது. கொரோனா வைரஸுக்குப் பின்னரான காலம் குடியேற்ற வாசிகள் பெரும் அலைகளாக ஐரோப்பாவுக்குள் படையெடுக்கக் கூடிய யுகமாக மாறும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் பல நாடுகளும் விழித்துக் கொண்டுள்ளன.

ஆபிரிக்காவில் முகாம் அமைக்கிறது டென்மார்க்!

தனது நாட்டில் தஞ்சம் கோரி வருவோரை ஐரோப்பாவுக்கு வெளியே ஆபிரிக்க நாடுகளில் எங்காவது தனது செலவில் தங்கவைத்துப் பராமரித்து விண்ணப்பங்களை அங்கேயே வைத்துப் பரிசீலித்து முடிவுகளை எடுப்பது டென்மார்க் நாட்டின் திட்டம்.

இவ்வாறு மூன்றாம் நாட்டில் முகாம் அமைக்கின்ற திட்டத்தைகொண்டுவந்துள்ள முதல் ஐரோப்பியநாடாக டென்மார்க் மாறுகிறது.அது ஆபிரிக்காவில் தனது அகதிகள் முகாம்களைத் திறப்பதற்காக றுவாண்டா உட்பட சில நாடுகளுடன் பேச்சுக்களைத் தொடக்கி விட்டது.

அண்மையில் றுவாண்டாவுக்கு ரகசியமாக விஜயம் மேற்கொண்டிருந்த டெனிஷ் நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் Mattias Tesfaye புகலிடம் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளார். அமைச்சர் Mattias Tesfaye டென்மார்க்கில் புகலிடம் பெற்ற ஒர் எதியோப்பியப் பிரஜையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்கள் தேடிவருகின்ற நாடுகளின் எல்லைக்கு வெளியே தங்க வைப்பது அவர்களது பாதுகாப்புக்கும் புகலிடம் தொடர்பான ஐரோப்பியச் சட்டங்களுக்கும் முரணானவை என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. அகதிகளுக்கான ஐ. நா.தூதரகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது.

—————————————————————– –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 13-06-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.