இலங்கை பிரதான செய்திகள்

இணையவழி கற்பித்தல் தோல்வி – 2,000ற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு சிக்கல்

தொற்றுநோய் காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட கற்பித்தல் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என்பது அரசாங்க புள்ளிவிபரங்கள் ஊடாக தெரியவந்துள்ளன.

கல்வி அமைச்சின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 2,000ற்கும் மேற்பட்ட பாடசாலைகளில்
இணைய வசதி இல்லையென்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியைப் மேம்படுத்த, தோல்வியுற்ற இணையவழி கல்வி முறையை கைவிட்டு மாற்று திட்டம் தொடர்பான கல்விச் சீர்திருத்தங்களை கண்டறிவது தொடர்பில், கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கும், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜூன் 11ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கொரோனா தொற்றுநோயால் கடந்த வருடம் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் பாடசாலைகள் மூடப்பட்டு ஒரு வருடமும் மூன்று மாதங்களுக்குப் பின்னர், மாற்று கல்வி செயற்பாடுகள் குறித்து அரச அதிகாரிகள், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியது இதுவே முதல் முறை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

“பெரும்பான்மையான மாணவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக கல்வி வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில், மாற்று கல்வி செயற்பாடு குறித்து விவாதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை கல்வியை தொடர்ந்து முன்கொண்டு  செல்வதில் இணையவழி கல்வியின் தோல்வியை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதை கல்வி அமைச்சும் ஏற்றுக்கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கூறியுள்ளார்.

“கல்வி அமைச்சின் தரவுகளுக்கு அமைய நாட்டில் 2,000ற்கும் மேற்பட்ட  பாடசாலைகள் இணைய வசதி இல்லாதவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கணினி கல்வியறிவு விகிதம் 23% ஆகவும், பெருந்தோட்டப் பகுதிகளில் இது 12% ஆகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.”

வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரே வழி, இணையவழி கல்வி முறைமையே என்ற எண்ணத்தில் செயற்பட்டமையால், பலர் கல்வியை இழந்துள்ளதாகவும், அவர்கள் 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்ட சந்தர்பத்தில் மாத்திரமே கல்வி கற்றதாகவும், தொழிற்சங்கங்கள், இராஜாங்க கல்வி அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளன.

தொலைக்காட்சி வகுப்பறைகள்

இந்த நிலைமைக்கு மாற்றாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் தொகுப்பை வழங்குவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது தற்போதைய இணையவழி கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
தொலைக்காட்சி கல்வித் திட்டங்களை வழங்கும்போது தற்போதுள்ள வகுப்பறை கற்பித்தல் முறைமைக்கு வெளியே கல்வித் திட்டங்களை உருவாக்கவும், தொலைக்காட்சி கல்வித் திட்டங்களைத் தயாரிப்பவர்கள், இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன்  கலந்துரையாடல்களை மேற்கொண்டு நிகழ்ச்சிகள் கவர்ச்சிகரமானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்”

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, மாணவர்கள் பங்கேற்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டுமென ஜோசப் ஸ்டார்லின் இராஜாங்க அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைக் கல்வி தற்போது கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவினால் மேற்கொள்ளப்படுவதாகவும்,  எனினும் கல்வி நடவடிக்கைகள் கல்வி ரீதியிலான தொழில்நுட்ப அறிவினைப் பெற்றவர்களாலேயே முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், தொழிற்சங்கத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகப் கற்ற அதிகாரிகளைக் கொண்ட கல்வி தொழில்நுட்பப் பிரிவை நிறுவவும், தொலைக் கல்வியை மேற்கொள்ளவும் இராஜாங்க கல்வி அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியை மேம்படுத்த, மாணவர்களுக்கு ‘ஃபைபர் ஒப்டிக்’ தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள எட்டு இலட்சம் பேரில், வசதிகள் இல்லாத, அடையாளம் காணப்பட்டுள்ள மாணவர்களுக்காவது ஆரம்பக்கட்டமாக தொலைக்கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பாடத்திட்டம் பொருத்தமானதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியை தொடர்வது தொடர்பாக புதிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.