உலகம் பிரதான செய்திகள்

இரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது! மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு!! திங்களன்று இசைவிழா களைகட்டும்

பிரான்ஸில் இரவு 11 முதல் அமுலில்இருந்துவரும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஞாயிறன்று- நாட்டின் இசைத்திருவிழா தினத்துக்கு (fête de la musique,)முதல் நாளுடன் – முற்றாக நீக்கப்படுகி றது. பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற பொதுவான சுகாதார விதியும் நாளை வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.

மக்களுக்கு மகிழ்ச்சிதரும் இந்தச் செய்திகளை பிரதமர் ஜீன் காஸ்ரோ இன்று வெளியிட்டிருக்கிறார். “நாளாந்த வாழ்வில் மகிழ்ச்சி திரும்புகின்ற ஒரு முக்கியமான தருணத்தில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்” என்று பிரதமர் செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 30கால அட்டவணைக்குப் பத்து நாட்கள் முன்பாகவே இரவு ஊரடங்கை நீக்குவது என்ற முடிவை அரசு வெளியிட்டுள்ளது.சுமார் எட்டு மாத காலத்தின் பின்னர் முதல் முறையாக இரவு ஊரடங்கு முற்றாக நீங்குவதும்- அடுத்த நாள் தெருவெங்கும் இசைபாடும் திருநாள் என்பதாலும்-வரும் திங்கட்கிழமை இரவு பாரிஸ் நகரம் பெரும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் – ஜேர்மனி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணத் தெரிவுப் போட்டியில் பிரான்ஸ்அணி வென்றதை அடுத்து ரசிகர்கள் நேற்று இரவு ஊரடங்கு நேரத்தை மீறிப் பல இடங்களிலும் ஒன்று கூடி ஆரவாரம் செய்து வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைவரம் நல்ல முன்னேற்றத்தை எட்டிஇருக்கிறது. ஆறாயிரம் என்ற எண்ணிக்கையைத் தொட்டிருந்த அவசர சிகிச்சைபிரிவு அனுமதிகள் இரண்டாயிரமாகக் குறைந்துவிட்டன. சராசரி முப்பது ஆயிரம் என்ற கணக்கில் இருந்து வந்தநாளாந்தத் தொற்றுக்கள் வேகமாகக்குறைந்து 4ஆயிரமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் கட்டுப்பாடுகளை முற்றாகநீக்க வேண்டுமானால் நாளாந்தத் தொற்று எண்ணிக்கை ஐயாயிரத்துக்கு குறைய வேண்டும் என்று அதிபர் மக்ரோன் வரையறை செய்திருந்தார். பிரான்ஸில் வளர்ந்தவர்களின் மொத்த சனத் தொகையில் 58 வீதமானோர் முதலாவது வைரஸ் தடுப்பூசியைப்பெற்றுக் கொண்டுள்ளனர். வரும் கோடை விடுமுறையின் முடிவுக்குள் 35மில்லியன் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கி முடிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.

நிலைமைகள் முன்னேற்றகரமாகத் தெரிவதால் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இனி அவசியம் இல்லை என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதிநீக்கப்பட்டாலும் பொதுப் போக்குவரத் துகள், விளையாட்டு, மைதானங்கள், மற்றும் பலர் நெருக்கமாகக் கூடுகின்ற மூடிய இடங்களில் மாஸ்க் அணிவதைத் தொடர்ந்து பேணுமாறு கேட்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜீன் காஸ்ரோ ஏழு தினங்கள் சுயதனிமையில் இருந்த பின்னர் அதனை நிறைவு செய்து கொண்டு இன்றையஅமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது துணைவியார் தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருக்க நேரிட்டதால் பிரதமரும் சுயதனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றநேர்ந்தது.

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.16-06-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.