இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பில் ‘டெல்ரா’ வைரஸ் சமூக மட்டத்தில் பரவுகின்றது

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட’டெல்ரா’ எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு இலங்கையின் தலைநகர் கொழும்பில் சமூக மட்டத்தில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பு-9, தெமட்டகொட பகுதியில் (Colombo-09,Dematagoda) ஐவரின் தொற்றுமாதிரிகளில் ‘டெல்ரா’ கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு 13பேரது தொற்று மாதிரிகள் மரபுமாற்றப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் ஐவருக்கு டெல்ரா வைரஸும் ஏனையோருக்கு அல்பா திரிபும் தொற்றியுள்ளது. கொழும்பு சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்புமற்றும் மூலக்கூற்றியல் மருத்துவத்துறையின் பணிப்பாளர் மருத்துவர் சண்டிமா ஜீவந்தரா (Dr. Chandima Jeewandara) இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

“தீவிரமாகப் பரவக் கூடிய டெல்ரா ஒரு தடவை ஏற்றும் தடுப்பூசியை எதிர்க்கக் கூடிய தன்மை கொண்டது” – என்று அவர்குறிப்பிட்டுள்ளார். தொற்றுத் தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றைப்பல்கலைக்கழகம் பின்னர் விடுக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதற்கு முன்பு ‘டெல்ரா’ திரிபு இந்தியாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் மையம் ஒன்றில் தங்கியிருந்த ஒருவரில் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தது. அது நாட்டுக்குள் சமூக மட்டத்தில் பரவுகின்றமை உறுதியாகி இருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

இலங்கையை இரண்டாவது பேரலையாக உலுக்கி வருகின்ற தொற்றுக்கள்’அல்பா’ (Alpha variant) என்கின்ற, ‘இங்கிலாந்து வைரஸ்’ மூலமே ஏற்பட்டிருந்தன. அதற்குப் புறம்பாக இந்திய வைரஸ் திரிபும் அங்கு பரவி வருவது இப்போது உறுதியாகிஉள்ளது. அங்கு சனத் தொகையில் பெரும் பங்குனருக்கு விரைவாகத் தடுப்பூசி ஏற்றப்படாவிட்டால் ‘டெல்ரா’ திரிபு பெருமெடுப்பில் பரவுவதற்கு வாய்ப்புண்டு என்று தொற்றுநோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

‘டெல்ரா’ வைரஸ் இங்கிலாந்துத் திரிபை விடவும் 60 முதல் 100 வீதம் தொற்றும் வேகம் கொண்டது என்பதை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். உலகில் சுமார் நூறு நாடுகளில் ‘டெல்ரா’ பரவியிருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

—————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.17-06-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.