ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ வீட்டுக்கு, காவற்துறைக் குழுவொன்று நேற்று (17.06.21) மதியம் சென்றுள்ளது.
வத்தளையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த காவற்துறை அதிகாரிகள் , வீட்டு வளாகத்தில் கூட்டமொன்று நடைபெறுகிறதா என தன்னிடம் விசாரித்ததாகவும் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
பிற்பகல் 1 – 1.30 மணியளவில் சிவில் மற்றும் சீருடை அணிந்த காவற்துறைக் குழுவொன்றே அங்கு பிரசன்னமாகி இருந்ததாகவும், சில காவற்துறை வாகனங்கள் தனது வீட்டினை அண்மித்த வளாகத்தில் தரித்து நின்றதை தான் சி.சி.டி.வியில் கண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயர் அதிகாரியிடம் இருந்து வந்த அலைபேசி அழைப்பினை தொடர்ந்து குறித்த குழுவினர் அங்கிருந்து சென்றதாக ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸ என விழித்தமை குறித்து ஜனாதிபதி தரப்பிலும், அரசாங்க தரப்பிலும் கடுமையான கோபம் வெளிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.