தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளாா். இத்திட்டத்துக்கு 5.42 கோடி ரூபாயினை ஒதுக்கியுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று 5 பயனாளிகளுக்கு உதவி வழங்கி திட்டத்தைத் ஆரம்பித்து வைத்துள்ளாா்..
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகவும், ஊரடங்கு காலத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியேயும் வசித்து வருகின்றார்கள். அவர்கள் சிறு தொழில்கள், தினக்கூலிப் பணிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.
கொவிட் – 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததை அறிந்து, அவர்களின் நலனைக் காத்திட, முதல் முறையாக முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்குத் தலா 4000 ரூபாய் வீதம் மொத்தம் 5 கோடியே 42 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திட அரசாணை வெளியிட்டார்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை, 5 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது