“நாம் கடற்றொழில் ஊடாக பிடிக்கும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் தலையீடுகள் காரணமாக எம்மால் சுயமாக விற்பனை செய்ய முடியாதுள்ளது” என தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் சார்பில் சிவநேசபிள்ளை சிவச்செல்வன், சந்திரன் ரவிவர்மன் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது,
“நாங்கள் எங்களுடைய சுய விருப்பின் பெயரில் கடலுணவுகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவந்தோம். உள்ளூர் வியாபாரிகள் கொழும்புக்கு அதனை விற்பனை செய்து வந்தனர்.இடையில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த கருத்து முரண்பாடுகளால் அது கைவிடப்பட்டது.
கடற்றொழிலாளிகளிடம் நேரடியாக கடலுணவுகளை வாங்குவதை நிறுத்தவேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். எங்களிடம் வாங்குவதற்கு வியாபாரிகள் முன் வருவதில்லை. அவர்கள் தற்போது அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், தம்பாட்டி கடற்றொழிலாளர்களிடம் கடலுணவுகளை கொள்வனவு செய்யும் வர்த்தகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போதே அந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் எங்களுடையது தான்.ஆனால் அது கட்சி சார்ந்து இயங்குகிறது. கட்சி சார்ந்தவர்களின் குறித்த சிலரை வைத்து முடிவு எட்டப்பட்டுள்ளது.
எங்களுடைய கடலுணவை விற்பதற்கு கட்சி சார்ந்து அமைச்சர் தலையிடுவதை நாம் விரும்பவில்லை . நாம் அதனை வன்மையாக கண்டிக்கிறோம். கூட்டுறவுச் சங்கம் என்பது பொதுவானது .பொதுச்சபை எடுக்கும் முடிவே செயல்படுத்த வேண்டும். ஆனால் கூட்டுறவுச் சங்கத்திலுள்ள கட்சி சார்ந்த நபர்கள் கட்சி சார்ந்த கட்சி சொல்வதை கேட்டு செயற்படுகின்றார்கள்.
கடற்றொழில் ஊடாக பிடிக்கப்படும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து எங்களுடைய வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் தலையீடுகள் காரணமாக எம்மால் சுயமாக விற்பனை செய்ய முடியாதுள்ளது. நாங்கள் சுயமாக உங்களுடைய கடல் உணவு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆவண செய்யவேண்டும்” என்றனர்.