!
செவ்வாய்க்கிழமை (22-06-2021) நாடாளுமன்றில் தமிழர் தரப்பின் குரலாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்ச 22-06-2021 பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையில்,
‘பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் லாபங்களுக்கு பாவிக்காதீர்கள் எனத் தெரிவித்தார்.
திரு. கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்ததாவது:
‘நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெரிவித்த கருத்துகளை நாம் வரவேற்கும் அதேசமயம், செயற்பாட்டில் ஏதும் இல்லாதவாறு வெறுமனே தத்தமது கருத்துகளை அரச தரப்பினர் எழுந்தமானமாக கூறுவதனை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இந்தக் காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் இப்படியாக ஏமாற்றுத்தனமான கூற்றுகளை தவிர்க்கவேண்டும்.
அரசியல் கைதிகள் விடயத்தில் தத்தமது விருப்பிற்;கு இணங்க வெறுமனே கருத்துச்சொல்லிவிட்டு அமருகின்ற ஒரு விடயம் அல்ல இது. இங்கு உண்மையில் அடிப்படை பிரச்சினையாக இருப்பது பயங்கரவாதத் தடைச்சட்டமே!
பயங்கரவாத தடைச்சட்டமே எவ்வித நீதியான விசாரணைகளும் இன்றி தடுத்துவைக்கின்றமை உடபட பல அநீதியான முடிவுகளுக்கு இடம்கொடுத்திருக்கிறது.
அதனடிப்படையிலேயே அரசியல் கைதிகள் நீதியற்றவிதமாக நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை முழுமையாக நீக்காமல் அல்லது அதையொத்த இன்னொரு சட்டத்தை கொண்டுவராமல் இருப்பதை உறுதிசெய்யாமல் இருந்தால் இப்படியான நெறிதவறிய முடிவுகளும் அநீதிகளும் கட்டமைக்கப்பட்ட வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் .
எனவே வெறுமனே பேச்சளவில் மட்டும் அரசியல் கைதிகளின் விடுதலை என கூறிக்கொண்டு காலத்தை கடத்துவதில் பயனில்லை. இதே ராஜபக்ச அரசின் முந்திய ஆட்சிக்காலத்திலும் ஜி எஸ் பி வரிச்சலுகைக்கால ஐஊஊPசு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் நடைமுறையில் அதற்கு எதிர்மாறாக , தமக்கு மாறான கருத்துடையவ்ர்களை ஒடுக்கவே அதை பாவித்திருந்தது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இந்த பாராளுமன்றிலும் இதற்கு முந்திய பாராளுமன்றிலும் தமிழ்த்தரப்பினர் குரல்கொடுத்தபோது அதை இங்கு இருப்பவர்கள் பலமாக எதிர்த்திருந்தனர், அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுப்பவர்களை ‘புலிகள் ‘ என அழைத்தனர்.
தமிழர் தரப்பு அரசியல் கைதிகள் தொடர்பில் கூறியவற்றையே இன்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டு ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூற முற்படுகிறார்.
உண்மையில் அரசியல்கைதிகள் தொடர்பில் இருக்கும் அடிப்படைப்பிரச்சினையான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுதலும் அதனையொத்த இன்னொரு அநீதியான சட்சமூலத்தை கொண்டுவராமல் தடுப்பதும்தான் அவர்களின் விடுதலைக்கான ஒரே வழி என்பதை அரசாங்கத்துக்கு இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் நேற்று 22-6-2021 பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் 25 வருடங்காளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்.
மே 18 ஆம் திகதி நினைவேந்தல் மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
முப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் பொது மக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். வடக்கு கிழக்கில் ஒரு அங்குல நிலமும் தமிழ் மக்களது அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு விற்க அனுமதிக்க முடியாது.
வலி வடக்கு கேப்பாபிலவு பகுதிகளில் பொது மக்களது காணிகள் அவர்களிடம் மீளக் கையளிக்கப்படல் வேண்டும்.
இன்று காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதம் பராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மேற்படி கருத்தை வலியுறுத்தினார். அவரது உரையின் விபரம் வருமாறு.
காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதம் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கே நான் உங்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்ற விடயம் இந்த சட்டமூலங்கள் தொடர்பான விவாதங்கள் திருத்தங்கள் எல்லாமே பெரும்பான்மை இன மக்களது நலன்களுக்கு மட்டுமானதா அல்லது இந்த நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் உரித்தானவையா. ஏனென்றால் நீங்கள் மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயல்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையை பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை. என்பதனை இந்த இடத்திலே நான் மன வருத்தத்தோடு பதிவு செய்துகொள்ளுகின்றேன்.
உங்களுடைய அரசாங்கம் இனவழிப்பு மூலமாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிற்பாடு வடகிழக்கிலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேசிய பாதுகாப்பு என்ற போரவையில் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தேசிய பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது.
அந்த வகையிலே வடக்கிலே பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் தமிழ்ர்களது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படாமலுள்ளது. ஆனால் கடந்த மே மாதம் 17ஆம் திகதி நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற செலந்திவ இணை நிறுவனத்தை உருவாக்கும் அமைச்சரவை பத்திரம் மூலமாக நீங்கள் உருவாக்குகின்ற நிறுவனம் ஊடாக பல நிலங்களை சீனாவிற்கு விற்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறீர்கள்.
அவ்வாறு விற்கப்படவுள்ள இடங்களில் ஒன்று கீரிலையிலுள்ள சனாதிபதி மாளிகை அமைந்துள்ள 7 ஏக்கர் நிலப்பரப்பும் அடங்குகின்றது. கீரிமலையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையிலே கையகப்படுத்தி அங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்கள் தமிழ் மக்களுக்கு மீளவும் வழங்கப்படவில்லை. ஏழு ஏக்கர் பரப்புள்ள அந்த நிலம் இப்பொழுது சீனாவிற்கு குத்தகைக்கு விடப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் இந்த செயற்பாட்டை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எங்களைப் பொறுத்தவரையில் வடகிழக்கில் எந்த ஒரு பகுதியும் தமிழ் மக்களுடைய விருப்பங்களுக்கு மாறாக எந்தவொரு நாட்டிற்கும் குத்தகைக்கு வழங்கப்படக்கூடாது என்பதையும் இந்த இடத்திலே நான் பதிவுசெய்து கொள்ள விரும்புகின்றேன்.
அத்தோடு இந்த நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதனையும் நான் இந்த இடத்தில் தெளிவாக பதிவு செய்து கொள்கின்றேன்.
கௌரவ காணி அமைச்சர் அவர்கள் இங்கே இருக்கின்றார். காணி சுவீகரிப்பு ஒன்று நடைபெறுவதாக இருந்தால் அது தொடர்பில் பிரதேச செயலாளரினால் உரிமையாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டு அதற்குரிய முறையான அரச வர்த்தமானி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பிற்பாடு அரச நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்டு முறைப்படி கையகப்படுத்துவதே இந்த நாட்டில் வழமையாகக் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெற்றிலைக்கேணி பகுதியில் 513 வது பிரிகேட் தலைமையகம் கடந்த 14 ம் திகதி ஒரு காணியை நில அளவை மேற்கொண்டிருக்கிறார்கள். இராணுவத்தின் பொறியியல் பிரிவிற்கு சொந்தமான நில அளவையாளர்களைக் அழைத்துவந்து நில அளவை செய்திருக்கிறார்கள். அங்கே கிட்டத்தட்ட 1000 ஏக்கர் காணிகளை ராணுவத்தினர் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவை அனைத்துமே தமிழ் மக்களுக்குரிய உறுதி காணிகள் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கின்றேன்.
அத்தோடு முல்லைத்தீவு கேப்பாப்பிலவு 59 வது படைத்தலைமையகம் அமைந்திருக்கின்ற இடம் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அந்த காணிகள் கிட்டத்தட்ட 100 ஏக்கர் வரையிலே பொதுமக்களுக்கு இன்னமும் கையளிக்கப்படவில்லை. அதை உடனடியாக அந்த மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதனையும் இந்த இடத்திலே நான் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யப்போவதான ஒரு விடயம் இன்று பாராளுமன்றத்திலே பிரஸ்தாபிக்கப்பட்டது. அது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் நீங்கள் கைதிகளை விடுவிக்கிறோம் என்று சொல்வதும் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று சொல்வதும் நீங்கள் நீங்கள் விரும்பியவாறு முடிவெடுக்க முடியாது.
தற்போது இலங்கையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு கொடூரமான சட்டம். இந்த சட்டத்தினால்தான் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். ஆகவே இந்த கொடிய சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதனை இந்த அவையில் ஆணித்தரமாக வலியுறுத்தி இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பப்பவர்கள் விடுதலை செய்யப் படுகின்ற அதே நேரத்தில் எதிர்காலத்திலும் தமிழர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டுமாகவிருந்தால் சர்வதேச ரீதியிலேயே ஒரு கொடூரமான சட்டமாக விமர்சிக்கப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கடந்த மே மாதம் 18ஆம் திகதி யுத்தத்திலே இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக 10 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அப்பாவிகளான அவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
- குருசுமுத்து லவக்குமார் (கிரான்)
- விநாகமூர்த்தி பிரதீபன்(கிரான்)
- சிங்கரெட்ணம் சத்தியதாசன்( ஓமடியாமடு)
- குமாரசிங்கம் ஜிவிதா(ஓமடியாமடு)
- ஆறுமுகம் ஞானசேகரம்(வந்தாறுமூலை)
- அழகரெத்தினம் கிருஷ்ணா (வந்தாறுமூலை)
- கந்தலிங்கம் யேசுசகாயம்(கிரான்)
- பஞ்சாட்சரம் துவிதா(மண்டூர்)
- விமலசேன குருசுமுத்து(கிரான்)
- செல்வநாயகம் நேசன் (ஓமடியாமடு).
ஆகிய பத்துப்பேரும் வெறுமனே ஒரு நினைவேந்தல் நிகழ்வை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தற்பொழுது ஒரு மாதம் கடந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். அவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.
இந்த பயங்கரவாத தடை சட்டமானது தமிழ் மக்கள் மீது ஒடுக்கு முறைகளை வரையறையற்ற அதிகாரங்களை வழங்குகின்றது என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே இந்த பயங்கரவாதத் தாடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன்.