சிங்கப்பூரில் வேலைக்கார பெண்ணை அடித்து கொலை செய்ததாக பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண்ணான காயத்ரி முருகையன் (வயது41) அவரது வீட்டில் வேலைக்கமா்த்திய மியன்மார் நாட்டை சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது
பிரேத பரிசோதனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பியாங்நகாய்டானின் உடலில் சூடு வைத்த 31 காய வடுக்கள், 47 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதுகுறித்து காயத்ரி முருகையனிடம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டபோது அவர் பியாங்நகாய்டானை கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் 11 மாதங்கள் வேலை செய்த அந்த பெண்ணை காயத்ரி முருகையன் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளதுடன் அவரின் கைகளை கட்டிப்போட்டு உடல் முழுவதும் சூடு வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளார். இறுதியில் பியாங்நகாய்டான் மூளையில் காயம் அடைந்து உயிாிழந்துள்ளாா்.
ஏழ்மை காரணமாகவும், தனது 3 வயது மகனை காப்பாற்றவும் வீட்டு வேலைக்கு சென்ற பியாங்நகாய்டானை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் காயத்ரி முருகையன் மீது 28 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. அனைத்தையும் அவர் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் வேலைக்கார பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக பெண் காயத்ரி முருகையனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்நாட்டில் நடத்த குற்றத்திற்காக சிங்கப்பூரில் வழங்கப்பட்ட மிக நீண்ட சிறைத்தண்டனை இது என கூறப்படுகிறது.