துமிந்தவின் விடுதலை “பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது ”
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிலிட்ஸ் கண்டனம் வெளியிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உறுதிசெய்த துமிந்த சில்வாவின் தீர்ப்பை தற்போது மன்னிப்பதென்பது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பீடுக்கு உட்படுத்துவதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், “இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டமைக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் இறையாண்மை மட்டுமல்லாது இலங்கையின் சுதந்திரமும் இன்று சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது!
“ஒரு நாட்டில் நிதித்துறை செயல்மறை ஜனநாயக நிர்வாகத்தின் மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகின்றது. சட்டத்தின் இறையாண்மை மட்டுமல்லாது இலங்கையின் சுதந்திரமும் இன்று சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பிலிருந்து தெளிவாகிறது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சரியான நடைமுறையை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயற்பாடு நாடாளுமன்றமும் நீதித்துறையும் அவர் விரும்பிய படி செயற்பட வேண்டுமென்பதைக் காட்டுவதாகவும் “இது ஜனநாயக ஆட்சிக்கு கடுமையான அச்சுறுத்தலாகும்” என்றார்.
மக்கள் அநீதிகளை உடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஹிருணிகா பிரேமச்சந்திர கடிதம் அனுப்பியுள்ளார்.
பௌத்த மதத்தின்படி, துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நாட்டின் தற்போதைய சட்டத்தை நிலைநிறுத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
துமிந்தா சில்வா அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலோ அல்லது அரசியலில் நுழைந்தாலோ ஆச்சரியப்பட மாட்டேன் என்றும், மக்கள் அநீதிகளை உடைக்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹிருணிகாவின் தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்கு கடந்த அரசாங்கத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
‘நீதியில்லாத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’
“மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் உறுதிப்படுத்திய உயர்நீதிமன்ற நீதியசர்கள் ஐவர் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத நாடொன்று உருவாகியுள்ளது” எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர “நீதியில்லாத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
தனது கணவனை சுட்டுப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இதுதொடர்பில் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர எழுதியுள்ள குறிப்பொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“விடுதலை” ஒரு மதமாகவும் நடைமுறையாகவும் மாற்றியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பாரத லக்ஷ்மனை படுகொலை செய்த ஒரு மனித படுகொலையாளிக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கி விடுவித்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய சாட்சியமிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிழையென நன்றாக தெரியும் கொலையாளி பொசன் போய தினத்தன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ‘ ஒரு நாட்டுக்குள் பல சட்டங்கள் செயற்படுகின்றது’ என்பதை நிரூபிப்பதற்கே படுகொலையாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
“நாட்டின் மீது அன்பு செய்திய லக்ஷ்மன் பிரேமசந்திர மற்றுமொரு சிங்களவரான தமித் தமிழரான குமார் ஹசீம் என்ற முஸ்லிம் ஆகிய மூவரின் உடல்களின் மீதும் ஏறி நின்று துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட படுகொலையாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
“கொலையாளி விடுவிக்கப்பட்டு நீதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. நீதி இல்லாத ஒரு நாட்டில் சூரியன் பிரகாசிக்காது. சட்டம் இருக்கும் நாட்டில் குற்றவாளி தண்டிக்கப்படுவார். சட்டம் இல்லாத நாட்டில் தண்டனைக்கு நீதி இல்லாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள்” என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துமிந்தவின் விடுதலை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் 6 கேள்விகள்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கும்போது உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும்போது, விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் பரிந்துரைகளை பெறவேண்டுமென அந்த சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான சூழ்நிலைகள் மற்றும் மன்னிப்பு பெற அவர் எப்படி தகுதியானவர் என்பதற்கு சில்வா தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட ஏனையவர்கள் தண்டனை அனுபவிக்கும் போது, துமிந்த சில்வாவை மாத்திரம் எவ்வாறு அதிலிருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட 06 கேள்விகளை அவர்கள் தொடுத்துள்ளனர்.