பிரித்தானியாவில் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து பிரித்தானியாவின் புதிய சுகாதார செயலாளராக சஜிட் ஜாவிட்(Sajid Javid) என்ற முன்னாள் உள்துறை அமைச்சரை பொறிஸ் ஜோன் சன் அறிவித்திருக்கிறார்.
தொற்று நோய் நெருக்கடிக்குள் நாட்டை வழி நடத்திய சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு செயலாளர் மற் ஹான்கொக் (Matt Hancock) சமூக இடைவெளி விதி முறைகளை மீறிப் பெண் ஒருவரை முத்தமிட்ட விடயம் அம்பலமாகியதைத் தொடர்ந்து தனது பதவியை விட்டு விலகி உள்ளார். அதனை அடுத்தே புதிய சுகாதார செயலரின் பெயர் அறிவிக் கப்பட்டிருக்கிறது.
மற் ஹான்கொக் சக பெண் அலுவலர் ஒருவரை முத்தமிடுகின்ற காட்சி “சண்” (Sun) பத்திரிகையில் வெளியாகியது. ஆரம்பத்தில் பதவி விலக மறுத்த அவர் பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரியதுடன் பதவி விலகல் கடிதத்தையும் பிரதமருக்கு அனுப்பி இருந்தார். மிகுந்த வருத்தத்துடன் அவரது பதவி விலகலை ஏற்றுக் கொள்வதாக பொறிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.
“பெரும் தொற்று நோய்க் காலப்பகுதியில் மக்கள் எவ்வளவோ தியாகங்களைச் செய்துள்ளனர். அவற்றை சிறுமைப்படுத்தும் விதமான காரியங்களில் ஈடுபடும் போது நாங்கள் நேர்மையாக இருத்தல் வேண்டும்” – என்று தனது ராஜினாமா கடிதத்தில் மற் ஹான்கொக் கூறியிருக் கிறார். தனது செயலுக்காக மன்னிப்புக் கோருகின்ற வீடியோ பதிவு ஒன்றை அவர் ருவீற்றர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
42 வயதான மற் ஹான்கொக் தனது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகக் கால நண்பியான ஜினாவை (Gina Coladangelo) சுகாதார செலரின் அலுவலகத்துக்குள் முத்தமிட்ட கண்காணிப்புக் கமரா காட்சி பத்திரிகையில் வெளியாகியமை வெஸ்ட்மினிஸ்டர் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்
தியிருந்தது.
கொரோனா வைரஸினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரித்தானியாவில் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மற் ஹான்கொக் முக்கிய பங்காற்றியவர். அவரது விலகல் பொறிஸ் ஜோன்சன் அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.