Home இலங்கை கிரிஜா தழுவலாக்க சிறுவர்கதையும் மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்துப்பனுவலும். இரா. சுலக்ஷனா.

கிரிஜா தழுவலாக்க சிறுவர்கதையும் மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்துப்பனுவலும். இரா. சுலக்ஷனா.

by admin

.
ஈழத்துத் தமிழ் அரங்கச் சூழலில், 1960களில் தமிழ் தேசியகலையாக்கம் எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கூத்துச் செம்மையாக்கம், மத்தியதரவர்க்கப் பார்வையாளர் நலன்பேண்தகு நவீன நாடக முறை ஒன்றை, கூத்து என்ற கலை வடிவாக பரப்புரை செய்வதற்கு வழிவகுத்தமையை கூத்துச் செம்மையாக்கச் செயற்பாட்டு முன்னெடுப்பை அவதானிக்கின்ற போது தெளிவாகின்றது. இத்தகைய பரப்புரை, கூத்து கலைவடிவம் என்பதன் திரிபுபடுத்தப்பட்ட வடிவநிலையையே, கூத்தின் அசல் நிலையாக கருதவும், பேணவுமான நிலைப்பாட்டை வலிந்து உருவாக்கிவிடலாயிற்று.
இத்தகையதொரு நிலைப்பாடு, ‘காலனியக்காரர்கள் காணுகின்ற அல்லது காண அவாவுகின்ற பன்முகங்கள் மறுதலிக்கப்பட்ட ஒற்றை சிந்தனையின் வெளிப்பாடு’ என்பது கூத்துச் செம்மையாக்கச் செயற்பாட்டு முன்னெடுப்புக்களை அவதானிக்கின்ற போதும், அதனை முன்னெடுத்தவர்களின் கருத்தாடல்களாக நூல்களில் பதியப்பட்டுள்ளவற்றை வாசித்தறிகின்ற போதும் தெளிவடைகின்றது.
காலனிய நலன்பேண்தகு செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட, கூத்துச் செம்மையாக்கச் செயற்பாட்டிலிருந்து வேறுபட்டு, பன்முகங்களை ஏற்கின்ற அல்லது அங்கீகரிக்கின்ற நிலையினை, கூத்து மீளுருவாக்கம் ஏற்படுத்தியிருப்பதை அதன் செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டுத் தளங்களை அவதானிக்கின்ற போது, தெளிவு பெறமுடிகின்றது.
Postcolonial theory thus establishes intellectual spaces for subaltern peoples to speak for themselves, in their own voices. And thus produce cultural discourses of philosophy, language, society and economy. Balancing the imbalanced us and them binary power relationship between the colonist and the colonial subjects
‘அவர்களின் மொழியில் அவர்களின் தேவைகளுக்காக அவர்களே கதைத்தல்’ என்பதை, காலனிய நீக்க சிந்தனையாளர்களும் வலியுறுத்துகின்றனர். காலனிய நீக்க சிந்தனாவாதத்தின் அடிப்படையில் நின்று அணுகினால், கூத்துச் செம்மையாக்கம் மத்தியத்தர நலன்பேண்தகு நடவடிக்கையாக அமைவதை காணலாம். கூத்து மீளுருவாக்கம், அவர்களுடைய மொழியில் அவர்களின் தேவைகளுக்காக அவர்களே கதைத்தல் என்ற காலனியநீக்கச் சிந்தனாவாதத்திற்கு இயைபாக, தமது பாரம்பரிய கலைவடிவமான கூத்தினூடாக, அதிகார நலன்பேண்தகு செயற்பாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் களைவதன் ஊடாக, அந்நிய காலனியத்திற்கு எதிராக மாத்திரமன்று, தாம் சார்ந்து நிலவுகின்ற சார்புநிலை அதிகாரத்திற்கு எதிராக, மக்கள் தாமே, தமது அரங்கினூடாகக் கதைத்தல் என்ற நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது.
கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டின் இந்த அடிப்படை புரிதல்நிலை அதன் தொடர் செயற்பாட்டின் மற்றொரு பரிமாணமாக, சிறுவர்களுக்கான பாரம்பரிய அரங்க முன்னெடுப்புக்கானத் தேவையை கண்டடைய வலியுறுத்துகின்றது. கூத்து மீளுருவாக்கத்தின் வளர்ச்சியாக, அடுத்தக்கட்டச் செயற்பாட்டு முன்னெடுப்பாக இனங்கண்டறியப்படும் சிறுவர் கூத்தரங்கு, பாரம்பரியமாக ஆடப்பட்டு வந்த கூத்தரங்கில் சிறுவர் – கூத்தராக பாத்திரமேற்றல் என்பதை கடந்து, சிறுவர் உளமுதிர்ச்சி குறித்த புரிந்துணர்வுடன் சிறுவர் பாத்திரமேற்றல் என்ற நிலையை உருவாக்கி விடுகின்றது. சிறப்பாக சிறுவர் காணுகின்ற, சிறுவர் காணவிரும்புகின்ற உலகம் எனப் பெரியவர் கருதும் உலகத்தையன்று, சிறுவர் விரும்புகின்ற, அவர்களின் உலகத்தில் எதிர்க்கொள்ளும் இன்னல்களை, அவர்களே பேசுகின்ற நிலையினை சிறுவர் கூத்தரங்கு வலியுறுத்துகின்றது.
சிறுவர்களுக்கானது என பெரியவர்கள் கருதுகின்றவற்றை நடித்தல் என்ற செயற்பாட்டு நிலையிலிருந்து விடுபட்டு, சிறுவர்களே சிறுவர்களுக்காக கதைத்தல், சிறுவர்கள் காணுகின்ற உலகத்தை கதைத்தல் என்ற நிலையை சிறுவர் கூத்தரங்கச் செயற்பாட்டில் அவதானிக்க முடியும். அத்தகைய அரங்கச் செயற்பாட்டில், சிறுவர்கள் புராண, இதிகாச கதைகளில் கதைச்சொல்லிகளாக இருந்த நிலைமாறி, சிறுவர்கள் தமது உலகத்தில் எதிர்க்கொள்கின்ற சிக்கல்களை வெளிப்படையாக பேசவும், வெளிப்படுத்தவுமான சூழலை சிறுவர் கூத்தரங்கு ஏற்படுத்தியிருக்கின்றது.
கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக கருக்கொள்கின்ற சிறுவர் கூத்தரங்கின் செயற்பாடுகள் 2011 ஆம் ஆண்டளவில், நந்திப்போர் வடமோடி சிறுவர் கூத்தரங்கச் செயற்பாட்டுடன் கருக்கொள்கிறது. நந்தி போரைத் தொடர்ந்து, வனராணி, மழைப்பழம், கனகராசன் கனவு ஆகிய கூத்துக்கள் சிறுவர் கூத்தரங்கில் முக்கியம் பெறுகின்றன. இவற்றுள் நந்தி போர், வனராணி, மழைப்பழம் ஆகியவை பல்வேறு இடங்களிலும் ஆற்றுகைச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கட்டுரை சிறுவர்கூத்துக்களில், தழுவலாக்க கதையாக அமையும் கிரிஜா சிறுவர்கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட, மழைப்பழம் வடமோடிக் கூத்துப்பனுவல் குறித்து நோக்குகிறது.
கிரிஜா தழுவலாக்க கதை
கன்னட மொழியில் அமைந்த குறுந்திரைப்படம் கிரிஜாவைத் தழுவி, தமிழில் எழுதப்பட்ட குறுங்கதையாக, கிரிஜா அமைகின்றது. சி. ஜெயசங்கரின் எழுத்தில் தமிழில் எழுதப்பட்ட கிரிஜா குறுங்கதை, சிறுவர்களுக்கான விளையாட்டாகவும், நாடகமாகவும் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டும் வந்துள்ளது. ‘1990களின் பின்னரான காலப்பகுதியில், குமாரபுரம் சிறுவர்களுடனான செயற்பாடாக ‘கதையை நாடகமாக்கலிருந்து கதையை விளையாட்டாக்கல்’ முன்னெடுக்கப்பட்டிருந்தது என சி. ஜெயசங்கர் குறிப்பிடுகின்றார். இதன் போது நாடகமாக்கலில் வருகின்ற உளதடையில் இருந்து விடுபட்டு, விளையாட்டாக செய்யும் போது, எந்தவித தடையுமின்றி அவர்களுக்கு விருப்பமான இடத்தில் இருந்துக் கொண்டு சிறுவர்கள் கதையை விளையாட்டாக முன்னெடுத்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.’
இதனடிப்படையில், கதையை விளையாட்டாக்கல் குறித்து நோக்குகின்ற போது, நமது மரபிற்கு புதிய விடயமல்ல இது என்பதை அறியமுடிகிறது. சிறுபராயத்தில் ‘கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடுதல்’, ‘ தேர் ஊர்வலம்’ இவைபோன்ற விளையாட்டுக்கள் எல்லாம் சிறுவர்கள் அன்றாடவேளைகளில் கேட்ட, பார்த்தறிந்த கதைகளை மையப்படுத்திய விளையாட்டாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. இந்தநிலையில் சிறுவர்கள் மிக இயல்பாக, கதைகளை, விளையாட்டாக முன்னெடுப்பதை அவதானிக்க முடியும். கதையை விளையாட்டாக்கும் போது அவர்களுக்கிருக்கின்ற நெகிழ்வுத்தன்மை அல்லது நெகிழ்ச்சித்தன்மை (Flexibility) என்பது, கதையை நாடகமாக்கல் என்பதை காட்டிலும், மீஉச்ச குதுகலத்தை அளிப்பதாகவும் இருந்துவந்திருக்கிறது.
குறிப்பாக நமது மரபிலும் பிற மரபுகளிலும் பறவைகளை விரட்டவும், தோட்டத்து காவலனாகவும் உருவாக்கப்படும் வெருட்டிகள் முக்கியமானவையாக இருந்து வருகின்றன. சிற்பங்களை செய்தல், ஓவியங்களை வரைதல் போன்றவற்றை செய்கின்ற போது சிறுவர்களுக்கு இருக்கின்ற தடை என்பது வெருட்டிகளை செய்கின்றபோது இருப்பதில்லை. அவர்களுக்கு விருப்பமான விதத்தில் அதனை முன்னெடுக்கமுடிகின்றது. இந்தவகையில் கதையை விளையாட்டாக்கல் என்பது போலவே வெருட்டிகளை செய்தலும் சிறுவர்களுக்கு நெகிழ்ச்சிக்குரிய செயலாகவே இருந்து வருகின்றது. எனினும், வெருட்டிகளை செய்தலில் உள்ள அழகியலும் அறிவியலும் பொருட்டாக கொள்ளப்படாத நிலையே அவதானிக்க முடிகின்றது. இந்தவகையில் வெருட்டிகளை கணிப்பிற்குரியதாக்கும் “வீட்டிலும் விளையாட்டாக வெருளி எனும் விரும்பி வெருட்டி” சி. ஜெயசங்கரின் முயற்சி, முக்கியம் பெறுகிறது. ( இது தனியாக ஆராயப்பட வேண்டியது.)
ஆக இத்தகைய அவதானிப்புகள், சி. ஜெயசங்கரை கதையை விளையாட்டாக்கல் என்ற செயன்முறைக்கு இட்டு சென்றிருக்க கூடும் என உறுதிக்கொள்ளச் செய்கிறது. இந்நிலையில், குமாரபுரம் சிறுவர்களுடனான செயற்பாட்டு முன்னெடுப்பின் தொடர்ச்சியாக, கிரிஜா கதை, விளையாட்டாகவும் பின்னர், நாடகமாகவும் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழு நண்பர்களால் முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கிறது. இத்தகைய செயற்பாடுகளுக்கு மத்தியில், 2005 ஆம் ஆண்டு கிரிஜா தழுவலாக்க சிறுவர்கதையின் முதல் பதிப்பும், 2012 ஆம் ஆண்டு இரண்டாவது பதிப்பும் வெளிவந்துள்ளது.
சிறுவர்களை மையப்படுத்தியதாக அமையும் கிரிஜா சிறுவர்கதை, ஆண், பெண் பால்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு காலங்காலமாக பெரியவர்களால் பின்பற்றப்படும் வழமைகளை கேள்விக்குட்படுத்துவதாக அமைகின்றது. வானத்தில் முகில்களுக்குள் இருந்து மழையைப் பொழிவிக்கின்ற மழைப்பழத்தை அரக்கனொருவன் கவர்ந்து வைத்திருக்கிறான். அதனை மீட்க வேண்டி, சிறுவர்கள் அரக்கன் போடும் புதிர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கல்லாக்கப்படவும், அதனை மீட்டிட வேண்டி பாடினிகளின் உபதேசம்படி சிறுமி கிரிஜா சென்று, புதிர் விடுவித்து மழைப்பழம் பெற்று மீண்டு, மழைப்பொழிய செய்த கதையை கிரிஜா உரைக்கின்றது. பால்நிலைகளின் அடிப்படையில் நிலவுகின்ற சமமின்மைகளில், கவனத்திற்கொள்ளப்படாத தளங்களை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது கதை.
சிறுவர்களின் உலகத்தில் கேள்விகளாக இருக்கின்ற அதேநேரம், பெரியவர்களால் சிறுவர்களுக்கானது என உருவாக்கிவிட்டிருக்கின்ற உலகத்தில் நடைமுறையாகப் பேணப்படுகின்ற, பேசுபொருளாகக் கணிக்கப்படாத விடயப்பொருளை, பேசுப்பொருளாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை கதையின் முதல் பாதி வலியுறுத்தி நிற்கிறது. ஆண், பெண் பால்நிலைகளை அடியொட்டி நிலவுகின்ற சமமின்மைகள், காலத்தின்கண் பேசுப்பொருளாய் இருந்துவருகின்றது எனினும், சமமின்மைகளை களையவேண்டியதன் பொருட்டான முன்னெடுப்புக்கள், நடைமுறைகள், சிறுபராயத்திலிருந்து உருவாகிவர வேண்டியதன் அவசியத்தை, சிந்தையிலிட்டு நிரப்புகிறது கதை.
எல்லா அம்மாக்களைப் போலவே கிரிஜாவின் அம்மாவும் ஆண் பிள்ளைக்கே அதிக உணவும் பரிமாறினாள். தூர இடத்திலிருந்து, வெயிலில் நடந்து தண்ணீர் எடுத்து வருவது கூட கிரிஜாவின் வேலைதான். கிரிஜாவின் அண்ணன் புத்தகப் படிப்பில் கெட்டிக்காரனாகவும் இருந்தான். கிரிஜா தலைகீழாக வைத்துப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை நேர்வளமாக்கிக் கொடுக்கும் அறிவு அவனுக்கிருந்தது.
கொடிய அரக்கனிடம் செல்ல எனக்கு அனுமதி தரவேண்டும் அரசே என்கிறாள் கிரிஜா. சிறுமியே, கொடிய அரக்கன் என்ன பாவைப்பிள்ளை என்று நினைத்தாயா விளையாடுவதற்கு? சிறுமியே, கொடிய அரக்கனை வெல்வதற்கு துணிவு வேண்டும், பலம் வேண்டும், புத்தி வேண்டும்.
அம்மாவுடன் சேர்ந்து வீட்டு வேலைகளுடன் வெளிவேலைகளும் செய்பவள் நான், நீண்ட தூரம் சுடும் வெயிலில் நடந்து நிறைகுடத்தில் தண்ணீர் சுமந்து வருபவள் நான், பயங்கரமான மலைகளில் விறகு முறித்து வருபவள் நான் என்கிறாள். குழந்தாய் எல்லாம் பெண்கள் செய்யும் வேலை தான். அரக்கனிடம் செல்வதற்கு பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். என கதைநெடுகிலும் வரும் பல்வேறு ஆசிரியர் கூற்றும், பாத்திரங்களின் கூற்றும் பால்நிலைகளின் அடிப்படையில், சிறுபராயத்திலிருந்தே சிறுவர்களின் உலகம் பெரியவர்களால் கட்டமைப்பு செய்யப்பட்டிருப்பதை மீள்வாசிப்புக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறது.
‘உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கழகு’ என்ற வழமைக்கு மாறாக, சமூகமாற்றம் நிகழாமையினையும், பால்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாய வழமைகள் கட்டமைத்து வைத்திருக்கின்றவை, ஆண், பெண் இருப்பிலும் வாழ்விலும் நியாயமற்ற சமமின்மைகளை வலுவாக்கி விடுவதையும் கதை சித்தரிக்கின்றது. சிறுவர்கள் உலகத்தில் கேள்விகளாக இருக்கின்ற, பெரியவர் உலகத்தில் வழமையாகப் பேணப்பட்டு வருகின்ற, கட்டுடைப்புச் செய்யவேண்டிய விடயப்பொருளைத் தழுவி, கதையின் முதல்பாதியில் யதார்த்த வாழ்வியல் சித்தரிப்பும், இரண்டாம் பாதியில் கற்பனை உலகச் சித்தரிப்பும் அமைந்து விடுகின்றன.
பாடினிகளுக்கும், சிறுமி கிரிஜாவுக்கும் இடையிலான உரையாடல் பகுதியாக கதையில் இடம்பெறும் பின்வரும் பகுதி, சமுதாய வழமைகள் சிறுவர் உலகைக் கட்டமைப்புச் செய்துவைத்திருக்கின்ற நிலையை வெளிக்கொணர்கிறது. சிறுவனின் உருவத்தில் உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்படும் கஷ்டங்களை சமாளித்துக் கொள்ள வேண்டும் என்றனர் பாடினிகள். கிரிஜாவோ சிறுவர்கள் உருவத்தில் கஷ்டமா? சிறுவர்களைப்போல வேண்டியதை எல்லாம் சுதந்திரமாகச் செய்வேன். எவ்வளவு குதூகலம் என்று துள்ளிக் குதித்தாள். இவ்வாறாக கதை, பெண் என்றால் பேதமை தான் என்ற நிலையை களைத்தெறிந்து, சமத்துவத்தை வளர்க்க வேண்டிய, சமத்துவ சூழலில் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது.
கூத்து மீளுருவாக்கமும் சிறுவர் கூத்தும்
கூத்து மீளுருவாக்கத்தின் அடியாகக் கருக்கொள்கின்ற சிறுவர்கூத்தரங்கப் பின்னணி குறித்து நோக்கும் போது, மீளுருவாக்கம் குறித்த புரிதல் அவசியமாகின்றது. மீளுருவாக்கம் என்பது ஆங்கிலத்தில், Reformulation என்பதாக அறியப்படுகின்றது. Reformulation என்பதற்கு ‘The act of creating or preparing something again. என oxford learner dictionaries பொருள் விளக்கம் தருகிறது. இதனடிப்படையில் அணுகுகின்றபோது கூத்து மீளுருவாக்கம், கூத்தில் ஆடப்படும் கதைகளை, சமுதாய முற்போக்குநிலை அல்லது சமூக சமத்துவம் என்பதை, உள்ளடக்கிய கதைகளாக குறித்த சமுகத்தினுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் கட்டுடைப்பு செய்து கட்டுகிறது.
கலை கலைக்காகவே என்ற மேனாட்டு கொள்கைக்கு மாறாக, ( கலையைக் கலைக்குள்ளிருந்து பார்;; ; கலையாகவே பார்; ; வேறொன்றையும் பார்க்காதே – ஜான் ஸ்டூவர்ட் மில்) கலை வாழ்க்கைக்காகவும் என்பதை கீழைத்தேய கலைமரபு, கலையுலகின் பல்வேறு பரிமாணங்களிலும் வலியுறுத்திருப்பதை சான்றுகள் பல உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் கூத்து மீளுருவாக்கத்தின் வழி மீளுருவாக்கஞ் செய்யப்பட்டுள்ள, கூத்துக்களை பார்க்கின்ற போது, அவை கலை வாழ்க்கைக்காகவும் தான் என்பது உறுதிக்கொள்ளும் வகையில், ஆணாதிக்க கருத்தியல்களை கேள்விக்கிடமாக்கி, சமூகசமத்துவம் என்பதை வலியுறுத்தி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
இதனுடைய தொடர்ச்சியாக, சிறுவர் கூத்தரங்கு என்ற செயற்பாடு முன்னெடுக்கப்படும் போது, சிறுவருக்கான கூத்தரங்கச் செயன்முறை ஒன்றின் அவசியம் வலுவாக உணரப்பட்டுள்ளதன் பின்னணியை புரிதல் அல்லது தெளிதல் அவசியமாகும். சிறுவர் கூத்தரங்கச் செயன்முறையை முன்னெடுக்கும் காலம் வரையில், ஆடப்பட்டக் கூத்துக்களில் (மீளுருவாக்கச் செயன் முறைக்கு முன்னரான காலப்பகுதி) சிறுவருடைய பங்கு என்னவாக இருந்தது அல்லது கூத்தில் சிறுவருடைய நிலை என்ன என ஆராய்கின்றபோது, சிறுவர்கள் கட்டியக்காரன், தோழி ஆகிய பாத்திரங்களை ஏற்று ஆடியுள்ளமையை அறிய முடிகின்றது. ஆனால், அவர்கள் ஆடிய கதைகள் யாவும் புராண இதிகாசக் கதைகளை மையப்படுத்திய ஆணாதிக்கக் கருத்தியல்கள் கட்டமைப்புச் செய்யப்பட்ட கூத்துக்களாகவே இருந்து வந்திருக்கின்றன. இந்த பின்னணியில் சிறுவர்களுக்கெனவே, கூத்;துக்கள் உருவாக வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு, கூத்துமீளுருவாக்கச் செயற்பாட்டின் விளைவாக சிறுவர் கூத்தரங்கச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
கூத்து மீளுருவாக்கச் செயன்முறையின் விளைவாகத் தோற்றம் பெறுகின்ற சிறுவர் கூத்தரங்கு, சிறுவர்களுக்கான அரங்க நடவடிக்கையாகவும், அறிவு விருத்திக்கானத் தளமாகவும் அமைகின்றது. சிறப்பாக, கல்வியியல் அரங்கு வலியுறுத்துகின்ற, காணுகின்ற பன்மைத்துவ அறிவுருவாக்கச் செயன்முறையை சிறுவர்கூத்தரங்கு வலியுறுத்துகின்றது. நவீனம், கல்வி என்பதாக வரையறுத்திருக்கின்ற செயன்முறையில் கல்விக்கும் நடைமுறைக்குமான பாரியளவிலான வித்தியாசங்களை இனங்காணமுடிகின்றது. சிறப்பாக, கல்விப்பீடங்களாக நவீனம் கட்டமைத்து வைத்திருக்கின்றவற்றினூடாகப் பெறுகின்ற அறிவு என்பதற்கும், அதனை செயல்நிலைப்படுத்தல் ( செயற்பாட்டறிவு – Functional Knowledge) என்பதற்கும் இடையில் மிகுதியான இடைவெளியை அவதானிக்க முடிகின்றதுடன், கல்வி என்பது நூலறிவு அல்லது பாடபுத்தக அறிவு என்பதாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், சாதாரண கிராமபுறங்களில் வாழ்கின்ற மக்கள் மையப்பட்டிருக்கின்ற தொழில் நிபுணத்துவம் அல்லது தொழிலறிவு உட்பட ஏனைய அறிவுடைமைகள் அறிவாக பொருட்டப்படுத்தப்படுவதில்லை. இந்நிலைக்கு மாறாக சிறுவர் கூத்தரங்கு> பாடபுத்தக அறிவு என்பதாக வரையறுக்கப்பட்டிருக்கின்ற கல்விமுறைக்கு மாறாக, பன்மைத்துவ அறிவுருவாக்கச் செயற்பாடாக அமைவதுடன், பன்மைத்துவ அறிவுருவாக்கத்தை ஏற்கவும்> அங்கீகரிக்கவும் செய்கின்றது.
சிறப்பாக கூத்து செயன்முறையில், களரியடித்தல் தொடங்கி அரங்கேற்றம் வரையான காலப்பகுதியில் கூத்தராக பாத்திரமேற்றல் என்பதையும் கடந்து, பல பாகங்களை ஏற்பதற்கான வாய்ப்பும், பக்குவமும் சிறுவர்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்படுகின்றது. இதன் காரணமாக கல்விக்கும் நடைமுறைக்குமான வேறுபாடு என்பது களைத்தெறியப்படுகின்றதுடன், கல்விக்கும் நடைமுறைக்குமான சமச்சீரான போக்கை, அரங்கச் செயற்பாட்டினூடாக முன்னெடுப்பதற்கும் சிறுவர்கூத்தரங்கு முயல்கிறது. இந்த அடிப்படையிலேயே சிறுவர் கூத்தரங்கினூடாகக் கருக்கொண்டு உருக்கொள்கின்ற ஒவ்வொரு கூத்தும், அதன் எழுத்து மற்றும் ஆற்றுகை நிலைகளில் அறிவுபெட்டகமாகத் தொழிற்பட விளைகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
நவீனம், மனிதர்களின் ஒவ்வொரு திறன் விருத்திக்குமான, அறிவு விருத்திக்குமான வெவ்வேறு தளங்களை பரிந்துரை செய்கின்ற நிலையில், சிறுவர் கூத்தரங்கு ஒருசேர சிறுவர்களின் திறன் விருத்திக்கும், அறிவு விருத்திக்கும், சிந்தனை விருத்திக்குமான ஒற்றை தளமாக அமைந்துவிடுகின்றது. நவீன கல்விமுறை புள்ளிகளின் அடிப்படையில் கற்றவர், கல்லாதவர் என்ற பிரிவினையை வலுவடையச் செய்துவிட, எல்லாத் திறன்களுக்குமான ஏற்புடைமையை அல்லது வெளியினை சிறுவர் கூத்தரங்கு பெற்று கொடுப்பதுடன், மிக சிறப்பாக தக்கன கொண்டு தகாதன விலக்கி வாழவுமான நிலையை ஏற்படுத்தி விடுவதன் ஊடாக, நடைமுறையில் கல்வி வேறு நடைமுறை வேறு என்ற நிலைப்பாட்டை தகர்க்கவும் செய்கிறது.
எழுத்துப் பரீட்சை, தேர்ச்சிமட்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின்ற நவீன கல்விமுறையில், சேர்ந்து கற்றல், கலந்துரையாடிக்கற்றல், செய்து கற்றல் என்பதற்கான வாய்ப்பு, புள்ளிகள் அல்லது பெறுபேறுகள் என்ற எல்லையை நோக்கிய கட்டமைப்பில் மறுக்கப்பட்டும், மறுதலிக்கப்பட்டும் வருகின்ற நிலையில், சிறுவர் கூத்தரங்கு கூடிகற்கவும், செய்து கற்கவுமான தளமாக அமைவதனூடாக மாற்று கல்வி முறையாகவும் தொழிற்பட விளைகின்றது.
கதைத் தழுவிய கூத்து
சிறுவர் கூத்துக்களில், கிரிஜா கதையினை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப் பெற்ற கூத்தாக மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்து அமைகின்றது. மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்தானது, பழுகாமம் கவிஞர் தணிகாசலம் அவர்களால், ‘சாதனை படைத்த சிறுமி’ எனும் பெயரில் கூத்தாக எழுதப்பட்டு, ஆற்றுகைச் செய்யப்பட்டு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்தே செ. சிவநாயகம் அண்ணாவியாரால் ‘மழைப்பழம்’ எனும் பெயரில் எழுதப்பட்டு, 2012 ஆம் ஆண்டு, கிழக்குப் பல்கலைகழக நுண்கலைத்துறை மாணவர்களாலும், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டு குழு நண்பர்களாலும், அண்ணாவியார் ஞானசேகரம், அண்ணாவியார் செ. சிவநாயகம் ஆகியோரால் களரியடிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. 2013 ஆம் ஆண்டு, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்து மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாவில், கோயில் முன்றலில் அரங்கேற்றியுள்ளனர்.
இரண்டாம் முறை அரங்கேற்றம் செய்யும் போது, கூத்தில் ஏலவே படைப்பாக்கஞ் செய்யப்பட்டிருந்த அரக்கன் பாத்திரம் சமூக வழமைக்கு மாறாக, சமஸ்கிருத ஆணாதிக்க, திராவிட, ஆரிய முரண்பாட்டின் அடிப்படையில் கட்டமைப்புச் செய்யப்படுகின்ற புராண, இதிகாச பாத்திரங்களில் இருந்து விடுபட்டு, சிறுவர்கள் விரும்பும் ஒருவராக, நீதிநியாய நெறிமுறைக்குட்பட்ட பாத்திரமாக மீளுருவாக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (கட்டுரையில் மீளுருவாக்க பாத்திரங்கள் தனியாக நோக்கப்பட்டுள்ளன.)
இதனைத் தொடர்ந்து மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்தானது, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதிவருட சிறப்புக் கற்கை மாணவர்களின் ஆய்வுச் செயற்பாட்டின் ஒருபகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. ‘ஈழத்துத் தமிழ் அரங்க வரலாற்றில் சிறுவர் கூத்தரங்கு; சி. ஜெயசங்கரின் கருத்தியலை மையப்படுத்திய ஒரு பங்குகொள் ஆய்வு செயற்பாடு’ எனும் தலைப்பில், தி.துலக்சனாவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு செயற்பாட்டின் ஒருபகுதியைப் பூர்த்திச் செய்யுமுகமாக, சித்தாண்டி பிரதேசத்திலும், மாணவன் இ. கங்கைகோபனால் தனது ஆய்வுசெயற்பாட்டின் ஒரு பகுதியை பூர்த்திச் செய்யுமுகமாக யாழ்ப்பாணத்திலும் ஆற்றுகைச் செய்யப்பட்டு வந்துள்ளன.
இவ்வாறு ஆற்றுகைச் செய்யப்பட்டு வந்துள்ள மழைப்பழம் சிறுவர் கூத்தின் பனுவல் குறித்து நோக்கம் போது, கூத்தின் நெறிமுறை பிசகாவண்ணம், அதேநேரம் சிறுவர்கள் புரிந்துக் கொள்ளக் கூடிய மொழியில் படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. கிரிஜா கதைத்தழுவலாக கருக்கொள்கின்ற மழைப்பழம் வடமோடி கூத்தானது, கட்டியக்காரன், பாடினிகள்மூவர், கிரிஜாவாக சுந்தரி, தாய் வேதவல்லி, சுந்தரியின் தமையன் மதிவதனன், மகதநாட்டின் அரசன் மகேந்திர பூபதி, விஜயன்(சிறுவனாக உருமாறிய கிரிஜா), கிழவி, அரக்கன், மந்திரி, பறையறைவோன் ஆகிய பாத்திரங்களைக் கொண்டு கூத்தாக கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
நாம் வாழுகின்ற அதே உலகத்தில் தான் சிறுவர்களும் வாழ்கின்றார்கள். நமது குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, ஊடக வலைத்தளங்கள் என்பனவும், பிறவும் எங்களைக் கட்டமைத்து வைத்திருக்கின்றதை போலவே, சிறுவர்களின் அக,புற நடத்தைகளை தீர்மானிப்பதிலும் செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. ஆண், பெண் சமத்துவம் அல்லது சமவுடைமை என்பது தொடர்பில் பரவலாக சிந்திக்கின்ற அல்லது பார்வையிடுகின்ற தளங்களில் இருந்துக் கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர, சின்ன சின்ன விடயங்களில் கடைப்பிடிக்கின்ற நடைமுறைகள் அல்லது பின்பற்றப்படுகின்ற வழமைகளில் உள்ள சமமின்மைகள் கவனத்திற் கொள்ளப்படுவதோ அல்லது பொருட்டாக கொள்ளப்படுவதோ இல்லை. இந்த நிலையில் சிறுவர்களின் ஆரம்பபராயத்திலிருந்து, பிறப்பின் அடிப்படையிலும், பால்ரீதியாகவும் நிலவுகின்ற சமமின்மைகள் களைத்தெறியப்பட வேண்டியதன் அவசியத்தினை, கூத்தாக எழுதப்பட்டுள்ள மழைப்பழம் சிறுவர்கூத்து வலியுறுத்துகின்றது.
பின்பற்றப்பட்டு வருகின்ற சமூக வழமைகளில் பால் ரீதியாக நிலவுகின்ற சமமின்மையாக, வீட்டுவேலை என்றால் பெண்தான் செய்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை குறிப்பிடலாம். எனினும், இதனை நடைமுறையில் பின்பற்றுகின்ற எந்தவொரு சமூகமும் அதனை யதார்த்த நடைமுறை என்பதாகத்தான் கருதுகிறதே தவிர, அத்தகையதொரு நடைமுறையில் நிலவுகின்ற சமமின்மை என்பது கருத்திற் கொள்ளப்படாத ஒன்றாகவே இருந்துவருகின்றது. இந்நிலையில் மழைப்பழம் சிறுவர்கூத்தானது, அந்நிலையினை கேள்விக்குட்படுத்துவதன் ஊடாக சமூக வழமைகளினை மீள்வாசிப்புக்குட்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது.
வேலைகள் மாத்திரமல்ல, பால்ரீதியாக நிலவுகின்ற சமமின்மை என்பது, மனிதர்களின் அடிப்படைத் தேவையாக நிலவுகின்ற உணவு உட்பட அனைத்து அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. இதனைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் கிரிஜா தழுவலாக்க கதையை அடியொட்டிய மழைப்பழம் சிறுவர் கூத்து அமைந்து விடுகின்றது. சிறுவர் கூத்தாக படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ள மழைப்பழம், புராண, இதிகாசங்களின் வழி நீண்ட நெடுங்காலமாக கண்ணனின் லீலைகள் என்பதாக வரையறுக்கப்படுகின்ற சில கற்பிதங்களையும் மீள்வாசிப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.
மழைப்பழம் சிறுவர் கூத்தில், மதிவதனன் என்ற சிறுவனின் தருவாக அமைக்கப்பட்டுள்ள பாடல் பின்வருமாறு அமைகின்றது.
‘என்னத்தாயே உந்தன் பேச்சிது எந்தன் வீரம் தாம்
நீயும் தான் அறியவாயோ
ஒருவயதாகையில் இழுத்தேனே பாம்மை நான்
இரண்டு வயதில் நானும் அடக்கினேன் காட்டெருமை’
மதிவதனன் தருவாக அமையும் குறித்த பாடல், புராண, இதிகாச கதைகளில் வரும் கண்ணனின் லீலைகளாக புனையப்பட்டு வந்துள்ளவற்றை நினைவுப் பெறச் செய்கின்றது. சிறப்பாக, பெரியாழ்வார் திருமொழியில், இரண்டாம் பத்தாக வரும் நீராட்டல் பகுதியில்,
‘கன்றினை வாலோலைக் கட்டிக்
கனிக ளுதிர எறிந்து
பின் தொடர்ந் தோடியோர் பாம்பைப்
பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன், நம்பி!
நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராட வேண்டும்
நாரணா! ஓடாதே வாராய்!’
என்ற பாடலை எடுத்துக் காட்டலாம்.
ஆனால் நடைமுறையில், கண்ணனின் லீலைகளாக அறியப்படுபவற்றை, குழந்தைகள் செய்தால் குழப்படிகளாக அன்றி வேறென்னவாக கணிப்பிற்குரியதாகிறது என்பது சிந்திக்கப்பட வேண்டியது. மற்றையது கண்ணனின் லீலைகளாக சொல்லப்பட்டுள்ளவற்றில் முக்கியமாக ‘பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டல்’ இடம்பெறுகிறது. எனினும், குறித்த பாத்திரவார்ப்பு என்பது பதின்மபருவத்தையும் எட்டாத குழந்தை அல்லது சிறுவனாகத் தான் புராணங்களிலும், இதிகாச இலக்கியங்களிலும், நாலாயிரந்திவ்வியப் பிரபந்த பாசுரங்களிலும் படைப்பாக்கஞ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. ஆனால் சிறுவருக்குரியதாக அல்லது சிறுவராக கட்டமைப்பு செய்யப்படுகின்ற கண்ணன் என்ற பாத்திரம் செய்யும் லீலைகள் இரசிப்பிற்குரியதாகவும், நடைமுறையில் அவ்வாறு சிறுவர்கள் செய்தல் கோபத்தை ஏற்படுத்துகின்ற செயலாகவுமே இருந்து வருகிறது.
இதற்கு மாறாக கண்ணன் என்பதாக வார்ப்புச் செய்யப்பட்ட சிறுவர் பாத்திரம் பாம்மை பிடித்திழுத்து அதன் தலையில் நின்றாடல் லீலையாகவும், மறுபுறம் வீரமாகவும் கொண்டாடப்படுகின்றது. அவ்வாறு பாம்பை பிடித்துக் கொண்டாடியதன் பொருட்டான புராண கதையும் விளக்கப்படுகின்றது. ஓடியாடி விளையாடும் பருவத்தில் கண்ணன் பாம்பைப் பிடித்துக் கொண்டாடல் எத்துனை சாத்தியப்பாடுடையது என்பது கேள்விகளுக்கிடமற்ற விடயமாகவே இருந்து வந்திருக்கின்ற நிலையில், மழைப்பழம் சிறுவர் கூத்தில் இத்தகைய கேள்விகளுக்கிடமற்ற கட்டமைப்புகளை கட்டுடைப்பு செய்ய வேண்டியதன் அவசியம் வெளிக்கொணரப்படும் வகையில், மதிவதனன், கட்டியக்காரன் கூத்துப்பாத்திர தரு பாடல்கள் அமைந்து விடுகின்றன.
கட்டியக்காரன் தரு
‘அண்டப் புழுகொன்றும் புழுகாதே நீயும்
ஆகாயப் புழுகன் போல் பேசாதே
ஒரு வயதில் யாரும் பாம்பை இழுப்பாரோ
காட்டெருமைக்கதை கடும் புழுகல்லவோ.’
பால்ரீதியாக நிலவுகின்ற சமமின்மைகள் வாழ்வில் பல தளங்களிலும் நிலவுவதை கேள்விக்குட்படுத்தும் வகையில் எழுத்தாக்கம் செய்யப்பட்டுள்ள மழைப்பழம் கூத்து, சிறுவயதிலிருந்தே சிறுவர் என்ற ரீதியில் பால்நிலை வேறுபாடுகளை களைந்து பொதுமைப்படுத்தி வளர்க்கப்பட வேண்டியதன் அவசியம், சிறுமி சுந்தரிக்கும் அவளது தாய் வேதவல்லிக்குமிடையிலான உரையாடலாக வெளிப்படும் பாடல்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
சிறுவர்களுக்காக படைப்பாக்கஞ் செய்யப்பட்டுள்ள கூத்தானப்படியால், சிறுவர்களுக்கு விளங்கக் கூடிய வகையிலான, மொழி நடையை கவித்துவமாக கையாண்டிருப்பதுடன், விடுகதைகளை வடமோடி கூத்திலக்கணத்திற்கு ஏற்ப எளிய முறையில் பாடலாக அமைத்திருக்கின்றார் அண்ணாவியார் செ. சிவநாயகம் அவர்கள்.
அரக்கன் தரு
‘மூன்று கண்கள் உண்டு சிவனுமே இல்லையே
உடல் முழுதும் மயிராய்
உச்சம் தலையதில் குடுமியும் உண்டல்லோ
தவசியும் இல்லை என்பேன்’
அரக்கன் வசனம்
கேளடா சிறுவனே, முதற் புதிரை விடுவிப்பாயடா சிறுவனே.
விஜயன் தரு
‘உயரமாக மரம் இருந்தாலும் காய்க்குமே
ஒவ்வொரு குலையாக
இப்புதிரின் விடை தேங்காய் தான் என்றே
நான் தெளிவுடன் கூறுகிறேன்.’
மீளுருவாக்கப் பாத்திரங்கள்
மீளுருவாக்கச் செயற்பாட்டின் வழி உருவாகின்ற சிறுவர் கூத்தரங்கச் செயற்பாட்டில் சிறப்பாக, மழைப்பழம் சிறுவர் கூத்தில், பறையறைவோன் பாத்திரவார்ப்பு கணிப்பிற்குரியதாகிறது. நீண்டநெடுங்கால வரலாற்றில் தொழிலின் நிமித்தம் பெயர்பெற்ற சமூகங்கள், பின்னாளில் சாதி ஏற்றத்தாழ்வின் அடிப்படையில், கட்டமைக்கப்பட்டு கீழாக்கப்பட்ட நிலைகளை வரலாற்றின்கண் அவதானிக்க முடிகிறது. கூத்து மீளுருவாக்கத்தின் பிரதான பணி சமத்துவத்தை கட்டமைத்தல். இந்தவகையிலேயே ஆணாதிக்க கருத்தியல்களை கேள்விக்கிடமாக்கி, சமத்துவ நிலைகளை பலவகையிலும் வலியுறுத்துகின்றது கூத்து மீளுருவாக்கம். மீளுருவாக்கச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக உருப்பெறுகின்ற மழைப்பழம் சிறுவர் கூத்தில் பறையறைவோன் பாத்திரம், சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற் சென்று, அதன் ஆதிநிலை அல்லது தொன்மையை கண்டுணரச் செய்கிறது.
பறையறைவோன் குறித்து பேசும் போது, தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் பலவகையான சான்றாதாரங்களை முன்வைக்கின்றன. சிறப்பாக புறநானூற்று 279 வது பாடல் ஒக்கூர் மாசாத்தியார் பாடியதாக அமைகின்றது. பாடல் பின்வருமாறு
‘கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று
மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து
உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கிச் செல்க என விடுமே!’
என்ற பாடலில் செருப்பறை, போர்க்களத்திலே வாசிக்கப்படுகின்ற பறை பற்றிய குறிப்பாக அமைகின்றது. போர்க்களத்திலே தடாரிப்பறை முழங்கியதற்கான செய்திகளையும் சங்க இலக்கியத்திலே காணமுடியும்.
அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெற்ற புலவர் பாடுவதாக அமைந்த பாடலில், தடாரி பறை பற்றிய குறிப்புகளை காணமுடியும். ( ‘… என் அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் பாடி நின்ற பல் நாள் அன்றியும் …’ ) பறை என்றால் அறிவித்தல் என்று பொருள். இதனடிப்படையில் பார்க்கின்ற போது சங்கமருவியகால இலக்கியமான மணிமேகலையில், “ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதையில்” வரும் பின்வரும் பாடல் வரிகள்;,
‘ … மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம் எனச் சாற்றிக் காட்டி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்தீர்’. என நாவை குறுந்தடியாகக் கொண்டு வாய்ப்பறை அறைவீர் என்பதை குறிப்பிடுகின்றது.
இந்தவகையில் அணுகுகின்ற போது, பறை என்ற இசைக்கருவியின் தொன்மை குறித்து உய்த்துணர முடியும். எனினும், சாதிகட்டமைப்பில் பறையர்சாதி கீழ்ப்படுத்தப்பட்டதான சாதிகட்டமைப்பாக கட்டப்பட்டுவிடுகின்றது. செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் நாவல், ஈழத்தில் பறையர் சாதியை மையப்படுத்திய சாதிக்கட்டமைப்பை பேசிநிற்கிறது. இத்தகைய கட்டமைப்புகளிலிருந்து விடுபட்டு, மனிதக்குலம் உயத்துணரவும், சேர்ந்தியங்கவுமான வெளியை உருவாக்கிவிடும் கூத்தில், பறையர் கீழான பாத்திரமாக புனையப்பட்டமைக்கு மாறாக, பாரம்பரியமாக பறையறைவோன் பாத்திரம் வார்க்கப்பட்டிருந்த விதத்தினை வெளிக்கொணரும் வகையில், பறையறைவோன் பாரம்பரிய அறிமுக விருத்தமும், பறையறைவோன் தருவும் மழைப்பழம் சிறுவர் கூத்தில், அமைக்கப்பட்டிருக்கின்றன.
பறையறைவோன் பாரம்பரிய அறிமுக விருத்தம்
‘வானம் மேல் ஊடுருவ மகாதேவர் வலமாக
மணிமுரசு அறைந்தவனும் இவனே
மாதேவர் குழை கற்க திருநடனம் புரிந்த
வள்ளுவ குலாதிபவனும் இவனே.’
மழைப்பழம் சிறுவர் கூத்தில், மீளுருவாக்கஞ் செய்யப்பட்ட பாத்திரம் என்ற வகையில், நோக்குதற்குரியது ‘அரக்கன்’ என்ற பாத்திரமாகும். புராண, இதிகாசங்களிலும், அவற்றை மையப்படுத்திய கதைத் தொடர்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும், சிறுவர் கதைகளிலும், கார்ட்டூன்களிலும் அரக்கனின் பாத்திரவார்ப்பு என்பது அடிப்படையிலேயே, சமஸ்கிருத ஆணாதிக்க கட்டமைப்பை தழுவிய வகையிலும், திராவிட, ஆரிய முரண்பாட்டை கட்டமைப்புச் செய்கின்றவகையிலுமே வார்க்கப்பட்டுவருவதை அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக, சமுதாயவழமைகள் சிறுவர்களை கட்டமைக்கின்ற விதம் குறித்த கணிப்பில், உடலமைப்பை மைப்படுத்திய கருத்தாடல்கள்(Body shaming) முக்கிய இடம்பெறுகின்றன. உடலமைப்பை மையப்படுத்திய கேளிகைகளை போலவே, நிற வேறுபாடும் சிறுபராயத்திலே புகட்டப்பட்டு விடுகின்றது. இத்தகைய கருத்தாடல்களின்வழி சிறுவர்களை கட்டமைப்புச் செய்வதில் புராண, இதிகாச கதைகளை மையப்படுத்திய கார்ட்டூன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆக இத்தகைய நிலைப்பாடுகளில் இருந்து விடுபட்டு, மழைப்பழம் சிறுவர் கூத்தில், சிறுவர்கள் விரும்புகின்ற, நீதிநியாயத்திற்குட்பட்ட பாத்திரமாக அரக்கன் என்ற பாத்திரம் மீளுருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மரங்களை வெட்டி காடுகளை அழிக்கின்ற செயல்களில் மக்கள் ஈடுபடுவதால், அவர்களுக்கு பாடம் புகட்டவே, மழைப்பழத்தை திருடியதாக அரக்கன் உரைப்பதாக வரும் பாடல் பகுதி இதனை தெளிவுப்படுத்துகின்றது.
இவ்வாறாக தமிழில் சி.ஜெயசங்கரால் தழுவலாக்கம் செய்யப்பட்ட கிரிஜா கதையை தழுவி, அண்ணாவியார், செ. சிவநாயகம் அவர்களால் உருவாக்கப் பெற்ற மழைப்பழம் சிறுவர் கூத்து, சிறுவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற உலகில், சமமின்மை என்றபோதும், கணக்கில் கொள்ளப்படாத விடயம் குறித்து சமூகத்தின் பார்வையை கட்டவிழ்த்து விட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றதுடன், சமூகத்தின் சமமின்மைகளை சிறுபராயத்திலிருந்தே அறிந்து தெளிந்து தக்கன கொண்டு தகாதன விலக்கி வாழவும் வழிவகைச் செய்கின்றது.

கிரிஜா தழுவலாக்க சிறுவர்கதையும் மழைப்பழம் வடமோடி சிறுவர் கூத்துப்பனுவலும்.
இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம் இலங்கை

அடிக்குறிப்புகள்

[1] https://en.wikipedia.org/wiki/Postcolonialism

[1] ஜெயசங்கர்.சி. கிரிஜா சிறுவர் கதை  இரண்டாம் பதிப்பு 2012 செப்டெம்பர், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழு. ப.4

[1]  மேலது ப. 8

[1] மேலது ப. 8

[1] மேலது ப. 10

 உசாத்துணைகள்

1.ஜெயசங்கர்.சி. கிரிஜா சிறுவர் கதை  இரண்டாம் பதிப்பு 2012 செப்டெம்பர், மூன்றாவதுகண் உள்ளுர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழு

2. சிவநாயகம். செ. மழைப்பழம் சிறுவர்களுக்கான மீளுருவாக்கம் செய்யப்பட்ட வடமோடிக்கூத்து. ( கூத்துப் பனுவல்)

  1.  
  2.  
  3. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124286/language/ta-IN/—-.aspx
  1.  
  2.  
  3.  
  4. http://www.battinews.com/2015/09/blog-post_897.html
  1.  
  2.  
  3.  
  4.  
  5.  
  6.  
  7. http://ayalveedu.blogspot.com/2012/02/blog-post_20.html?m=1
  1. https://www.kaanpiyam.com/index.php/2020-08-15-12-05-50/2020-12-22-12-20-26/980-2021-04-10-22-45-33

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More