உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்றான கனடாவில் வழக்கத்துக்கு மாறாக தற்போது வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் அங்கு வெப்பத்தினால் 130க்கும் மேற்பட்டவா்கள் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகின்ற நிலையில் அங்கு நேற்று முன்தினம் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியதில் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தற்போது வரை வெப்பம் காரணமாக 130 க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வான்கூவர் நகரில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இப்போது வரை 65 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கனடா வானிலை மையம் பிரிட்டிஷ் கொலம்பியா மட்டும் இன்றி சஸ்காட்செவன், மனிடோபா உள்ளிட்ட மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை கனடாவை போல் அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் போர்ட்லாந்து மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்கள் 1940 களுக்கு பின்னா் அதிக வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.