உலகம் பிரதான செய்திகள்

எப்சிலன்,லாம்ப்டா புதிய வைரஸ்கள் ஐரோப்பிய நாடுகளில் பரவுகின்றன!

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட மரபு மாறிய வைரஸ் கிருமி ஐரோப்பா உட்பட 27 நாடுகளில் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பினால் கிரேக்க இலக்கப் பெயரில் “லாம்ப்டா”(Lambda) என அழைக்கப்படுகின்ற அந்தத் திரிபு தென் அமெரிக்க நாடுகளில் தீவிரமாகப் பரவியிருந்தது.பெருநாட்டில் சுமார் எண்பது வீதமான தொற்றுக்களுக்கு அது காரணமாக விளங்கியது. தற்சமயம் அங்கிருந்து அது உலகின் ஏனைய பகுதிகளுக்குப் பரவத் தொடங்கியுள்ளது.

அதன் மரபு மாற்றம் அறிவியலாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளையும் மனிதரது இயல்பானநோய் எதிர்ப்புச் சக்தியையும் எதிர்த்து நிற்கவல்லது என்பதை ஆரம்ப ஆய்வுகள் காட்டி உள்ளன.

இங்கிலாந்தில் ஏற்கனவே “லாம்ப்டா”தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். ஜேர்மனியிலும் அது பரவியிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோன்று அமெரிக்காவின் கலிபோர் னியாவில் கடந்த ஆண்டு முதலில் கண்டறியப்பட்டு “கலிபோர்னியாத் திரிபு”(California variant) என்று அழைக்கப்பட்டவைரஸ் கிருமியும் ஐரோப்பிய நாடுகளில்பரவுவது தெரியவந்திருக்கிறது. கலிபோர்னியா வைரஸுக்கு “எப்சிலன்”(Epsilon) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவின் “டெல்ரா” வைரஸ் காரணமாகப் புதிய சவால்களைச் சந்தித்துள்ள ஐரோப்பிய நாடுகளை எப்சிலன், லாம்ப்டா ஆகிய இரு திரிபுகளது வருகை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.உலக சுகாதார நிறுவனம் இந்த இரண்டு திரிபுகளையும் “கவனத்துக் குரியவை”(variant of interest) என்று அறிவித்திருக்கிறது.அவை தொடர்பானஆய்வுகளுக்கு மேலும் கால அவகாசம் தேவையாக உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.07-07-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.