2021 ஜீலை 5 ஆம் நாளில் அருள்தந்தை ஸ்டேன் சுவாமி எனும் சமூகச் செயல்பாட்டாளரின் சிறை மரணம் பெரும் அதிர்ச்சியையும் மீளாத் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மரணத்தைக் கடந்து, பயணிக்க நினைத்தாலும் ஒருவகையில் மனதைக் கனக்கச் செய்கிறது. இந்திய ஒன்றிய அரசு சனநாயகத்தைப் பின்பற்றுகிறதா? எனும் கேள்வியோடு இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. சனநாயகம் என்றால் என்ன? பொதுபுத்தியில் உறைந்திருக்கும் சனநாயகம் யாருக்கானது?, சனநாயக நாட்டில் சனங்களின் மேல் அக்கறை கொள்வது தவறா?, சனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோமென்றால் சமூக ஆர்வலர்கள் ஏன் தண்டிக்கப்படவேண்டும்? பறிக்கப்படும் உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிய ஸ்டேன் சுவாமி போன்றோர்களுக்கு ஏன் தண்டனை வழங்கவேண்டும்? எனும் கேள்விகள் எழுகின்றன.
ஸ்டேன் சுவாமி யார்?
இயேசுசபைத் துறவியான ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி என்கிற ஸ்டேன் சுவாமி சமூகவியல், தத்துவ இறையியல் பயின்றவர். இறையாண்மையை நேசிக்கக் கூடியவர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாழ்வு முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர். பழங்குடி மக்களின் உரிமைக்காகவும், மாந்த இன விடுதலைக்காகவும், தன் வாழ்நாளை ஒப்படைத்தவர். பழங்குடிகளின் வளங்களைக் காப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு எதிராக, தன் வயோதிகத்தைப் பொருட்படுத்தாமல் அறவழியில் களப் போராட்டத்தை நடத்தி வந்தவர். வாழ்வதற்காகப் போராடுவதும், போராடுவதற்காக வாழ்வதுமான வாழ்வை ஸ்டேன் சுவாமி கொண்டிருந்தார் என்பதை அவரின் வாழ்க்கைப்பயணம் வழி அறியமுடிகிறது.
ஜார்கண்ட் பகுதிகளில் பழங்குடிகளின் நிலங்களைப் பறிக்கப்படுவதைத் தடுக்கவேண்டி ஸ்டேன் சுவாமி தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். இயற்கை வளங்களைக் காப்பதில் பழங்குடி மக்கள் பக்கம் நின்று குரல் கொடுத்தார். இக்குரல் அதிகார மையத்தைக் களைத்துவிடும் என்பதை அறிந்த அரசதிகாரம் அடக்குமுறையை ஏவியது. அரசுத்திட்ட வளர்ச்சிக்குத் தடையாக இருந்தார் எனவும் தேசத் துரோகச் செயலை செய்தாரெனவும் ஜார்கண்ட் அரசு ஸ்டேன் சுவாமியைக் கைது செய்து இந்தியப் புலனாய்விற்கு மாற்றி, பல்வேறு வழக்கில் ஆயிரம் பக்கங்களில் குற்றப்பத்திரிகையை உருவாக்கியது.
தொண்ணூறுகளின் இறுதியில், பழங்குடிகளின் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டார்கள். ஜார்கண்ட் கும்லா மாவட்டத்தில் ஃபீல்டு பயரிங் ரேஞ் திட்டமும், ராஞ்சி மற்றும் மேற்கு சிங்பூமில் கோயல் கரோ அணைத் திட்டமும் கொண்டுவருவதற்காகப் பழங்குடிகளின் வாழ்விடங்களைப் பறிப்படும் சூழல் உருவாகின. இந்தத் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபட்ட அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் ராஞ்சியில் ஒரு மையத்தை நிறுவி அம்மையத்தின் பொறுப்பை ஸ்டேன் சுவாமிக்கு வழங்கப்பட்டன. இவ்வமைப்பின் செயல்பாடு பலருக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. பெருநிறுவனங்களின் லாபவேட்டைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவே அரசு நினைத்தது. இதன் விளைவே ஸ்டேன்சுவாமி உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்டோர்களின் மேல் உபா (UAPA is Unlawful Activities (Prevention) Act aimed at the prevention of unlawful activities associations in India) சட்டத்தின் பேரில் கைது நடவடிக்கையைக் கட்டவிழ்க்கப்பட்டது.
அணைத்திட்டம், பெரிய சாலை அமைத்தல் முதலான திட்டங்களுக்காக நில ஆர்ஜித சட்டத்தின் வழி நிலங்களைப் பறிக்கப்படுவதும் பூர்வீகக் குடிகளை வாழ்விடத்திலிருந்து துரத்தப்படுவதும் நடந்தேறிவருகின்றன. இந்திய ஒன்றியத்தில் பெருநிறுவனங்களின் பணப்பெருக்கப் பொருள்களாக நிலமும் மலையும் ஆகிவிடுவதைப் பார்க்கமுடிகின்றன. ஸ்டெரிலைட் ஆலை உருவாக்கம், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், நியுட்ரோனா ஆய்வுத்திட்டம், கனிம வளங்களை எடுத்தல் முதலான செயல்திட்டங்கள் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துதற்கு ஒன்றிய அரசும், அது சார்ந்த மாநில அரசுகளும் பெருநிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மக்கள் விரோதப் போக்கைக் காட்டுகிறது.
ஸ்டேன் சுவாமியின் கைது நடவடிக்கை கூட மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு எதிர்நிலையில் செயல்பட்டுள்ளார் என்பதும் உள்ளீட்டின் அடிப்படையில் மாவோஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்தார் என்பதும் ஆதாரமில்லாக் குற்றச்சாட்டுகளாகும். ஸ்டேன் சுவாமியின் சிறை மரணம் பாசிசத்தின் உச்சமேயாகும். இச்சூழலில் படைப்பாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், அறிவாளிகள் போன்றோரை உபா போன்ற கொடுஞ்சட்டத்தின் வழியாக, பீமா கொரேகான் பொய்வழக்கில் கைதானவர்களை இந்திய ஒன்றிய அரசு விடுவிப்பது கேள்விக்குறியாக இருக்கின்றன.
மாந்த உரிமையிழந்து
துயரெனும் பிடியில் அகப்பட்டவர்களை விடுவிக்க வந்த
தூதர் தந்தை ஸ்டேன் சுவாமியே!
நின் கால்கள் மக்களின் விடியலை நோக்கிப் பயணித்தன.
வனங்களையும் மக்களினங்களையும் காக்கவே
உமது அன்பெனும் கரங்கள் நீண்டன.
மீறல்களைத் தட்டிக்கேட்பதும்
சனநாயக உரிமைக்குரல் கொடுக்கும் போதும்
குரல்வளை நெறிக்கப்படுகின்றன.
பாசிச காலத்தில் வாழுகின்றோம் என்பதற்கு
பல சாட்சியங்கள் நிறைந்திருக்கின்றன.
பீமா – கொரேகான் வெற்றித் தூண் கொண்டாட்ட மகிழ்வில்
மனிதர்களைத் தாக்கிய நிகழ்வின் பின்னாளில்
பொய்மை சூழ்ந்த வழக்கில்
உம் மீதும் பயங்கரவாதியெனும் முகப்பூச்சினை
கொடுங்கோல் கொண்டு வரைந்தார்கள்.
ஆயிரம் குற்றக்கோடுகளைத் தீட்டி
அறிவாளிகளையும்
படைப்பாளிகளையும்
சமூக ஆர்வலர்களையும்
பலிமுகங்களாக ஆக்கினார்கள்.
கொரோனா பெருந்தொற்று காலங்களில் சிறைக் கம்பிகளுக்குள்
காற்று நுழைய முடியாத அறையில்
சிரமமாகச் சுவாசித்திருப்பாய்
பார்க்கின்சன் நோய்மையின் வலியோடும் தளர்வுற்று
கைகளின் நடுக்கத்தோடு இருந்த தருணம்
மனிதநேயமற்ற புலன் விழிகள்
உன்னைக் காவல் காத்தன.
வயோதிக வாதை உம்மை ஆட்கொண்டபோதும் கூட
கால்களில் விலங்குகள் பூட்டி
மருத்துவம் பார்க்கத் தூண்டியது அரசதிகாரம்.
ஈரிரு ஆண்டுகளாய் அடிமைச் சிறையில்
அகப்பட்டடிருந்ததை நினைத்து
ஒருபோதும்
நீ கலங்கவில்லை என்பதை அறிவோம்.
உன் எண்ணமெல்லாம் இயற்கையையும்
இயற்கைவெளியில் சுதந்திர வானில் உலாவும்
பழங்குடிகளின் வாழ்வு மேம்பாடு பற்றியதாகவே இருந்திருக்கும்.
உம்மைப் போன்றோர்களைச்
சிறைப்படுத்தியதற்கும் பலியாக்கியதற்கும்
சனாதனமும் அதிகாரமும் கைகோர்த்துக் களிகொள்கின்றன.
சமாதானத்தைப் பேசுவதும்
இனவிடுதலைகாக நிற்பதும்
குற்றமாகிவிடுகிறது.
சக உயிர்களின் வாழ்வாதாரத்தை
சகஉயிரியாகப் பேசுவது கூட இங்கு தேசத் துரோகமாகிவிடுகின்றன.
கைகளை உயர்த்தி
எதுகை மோனையில் ஒரத்த குரொலியில் பேசுவதும்
வன்முறைகளாகச் சித்திரிக்கப்படுகின்றன.
பறவைகள் ஒன்றுகூடிப் பறப்பதும்
தடைவிதிக்கும் காலமாகிப் போயின.
அநியாயங்களைத் தோலுரிக்கும் பேனாக்கள் உடைக்கப்படுகின்றன.
நடந்தேறும் பிழைகளைக் காட்சிப்படுத்துவதும் குற்றமாகிவிடுகிறது.
நாம் வாழும் வாழ்க்கை
இருண்ட காலத்திற்கானதாகி விடுகின்றன
ஆள்வோரின் கைகளில் சுழலும் சாட்டைகளும்
அதிகார வல்லாதிக்கங்களும்
எமது கண்களுக்குப் புலப்படுகின்றன.
உரிமையை நிலைநாட்ட
திமிறியெழும் காலத்தில்
அரசதிகாரத்தின் பிடியுடைக்க
ஆயிரம் ஆயிரம் விதைகள் முளைக்கும்.
ம.கருணாநிதி