கொவிட் 19ற்கான தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் குறித்து தன்னிடம் எந்தவிதமானக் கருத்துக்களையும் அரசாங்க தரப்பினர் கேட்கவில்லை என ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, தன்னுடன் ஒரு மணித்தியாலங்கள் கலந்துரையாடியதாகவும், இதன்போது மாத்திரமே தடுப்பூசிகள் தொடர்பில் தன்னிடம் ஆலோசனைகளை அவர் கேட்டதாகவும் கூறினார்.
இதனைத் தவிர்ந்த ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னிடம் ஆலோசனைகள் எதனையும் அரசாங்கம் கேட்கவில்லை. சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளின்போதும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணரான என்னிடம் எந்தவிதமான ஆலோசனைகளும் கேட்கப்படுவதில்லை என்பதை தான் கவலையுடன் தெரிவிப்பதாகவும் பேராசிரியர் திஸ்ஸவிதாரன குறிப்பிட்டுள்ளார்.