வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இன்று (23.07.21) தெரிவித்துள்ளார்.
ரிஷாட்டின் மனைவியான 46 வயதுடைய ஷெஹாப்தீன் ஆயிஷா , மனைவியின் தந்தையான 70 வயதுடைய மொஹமட் ஷெஹாப்தீன் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிப்பதற்கு சட்டமா அதிபர் சஞ்ஜய ராஜரட்ணம் நேற்று (22.07.21) குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.