உலக அளவில் தற்போது பரவியிருக்கும் டெல்டா வைரஸ் தொடர்பில், கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) உலகளாவிய ரீதியில் எதிர்வரும் வாரங்களில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டோர் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வுடன் அடையாளம் காணப்படலாம் என எதிர்வு கூறியுள்ளது.
உலகளாவிய ரீதியில் இதுவரை 124 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் காலத்தில் டெல்டா கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பிரதான வைரஸாக மாறும் என எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
சில மேற்கத்தேய நாடுகளில் கொவிட் மரணங்கள் குறைவடைந்துள்ளமையால், அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“எவ்வாறாயினும், தடுப்பூசி வேலைத்திட்டம் மந்தகதியாக முன்னெடுக்கப்படும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் செயற்பாடானது எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறக்கூடும்” என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.