தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கல் தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து கிடைக்கப் பெற்ற சினோபாம் தடுப்பூசிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இரண்டு லட்சம், வவுனியா மாவட்டத்திற்கு 75,000 மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50,000 தடுப்பூசிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த நான்கு மாவட்டங்களிலும் இத்தடுப்பூசியானது 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பாடசாலை ஆசிரியர்களுக்கும் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி வழங்கும் பணிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படுகிறது
யாழ்ப்பாண மாவட்டத்திலே இரண்டாம் கட்டங்களாக ஒரு லட்சம் பேருக்கு முதலாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதுடன் 50 ஆயிரம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டிருக்கின்றது
யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரை இன்று வியாழக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற இருக்கின்றது. தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒவ்வொரு தடுப்பூசி வழங்கும் நிலையங்களிலும் பிரத்தியேகமாக முன்னுரிமை வழங்கப்படும்.
முதல் நாள் யாழ்ப்பாண மாவட்டத்திலே பாடசாலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த யாழ். மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதேபோல யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் மாகாணங்களிலும் பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்கும் இங்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
அவர்கள் தாங்கள் ஆசிரியர் பணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை காண்பித்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசி நாளை வெள்ளிக்கிழமை (30) முதல் வழங்கப்பட இருக்கிறது. முன்களப்பணியாளர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு தங்களுக்கு தடுப்பூசி வழங்குகின்ற நேரம் மற்றும் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.
18 வயதிற்கு மேற்ப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி போட ஒரு விசேடமான தினம் ஒதுக்கப்படும். அது பின்னர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளால் அறிவிக்கப்படும். அந்த நாட்களில் சென்று அந்த இடங்களுக்கு சென்று தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும்.
தடுப்பூசி அல்லது வேறு ஏதாவது விடயங்களில் ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளில் ஜூலை 31 ஆம் திகதி ஆகஸ்ட் 7ஆம் திகதி காலை 8 மணி முதல் ஒவ்வாமை உடையவர்கள் தங்களுடைய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்துடன் அந்தந்த வைத்தியசாலைகளுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசியை வழங்குகின்ற ஏற்பாடுகளை நாங்கள் செய்திருக்கிறோம். அவ்வாறானவர்களது விவரங்களை குடும்பத்தினரோ பராமரிப்பாளர்களோ சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு சமர்ப்பிப்பதன் மூலம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
அனைவரும் தடுப்பூசிகளை தவறாது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏனென்றால் கொரோனாத் நோய் மீண்டும் நாட்டில் தீவிரமாக பரவி வருகின்றது. எங்களைக் காப்பாற்ற இருக்கின்ற ஒரேயொரு விடயம் தடுப்பூசியே ஆகும்.
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். குறிப்பாக கைகளைச் சுத்தம் செய்து முகக்கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறையை தொடர்ச்சியாக நாம் பின்பற்றவேண்டும் என்றார்.