முழுமையாக தடுப்பூசிகள் பெற்ற விமானப் பயணிகளை இலங்கைக்குள் அழைத்து செல்லும் பொழுது, இதுவரையிலும் நடைமுறையிலிருந்த, விமானமொன்றிற்கான ஆகக் கூடுதலாக 75 பயணிகள் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
விமானங்களில் செல்லும் பயணிகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருப்பதற்கான எழுத்து மூலமான ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்கள் நிறைவடைந்த பயணிகளை, அதிகபட்ச பயணிகளைக் கொண்ட விமானத்தில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.
அதேவேளை, தடுப்பூசியின் முதலாவது டோஸ் அல்லது எந்தவொரு தடுப்பூசியும் வழங்கப்படாத பயணிகளை ஒரே விமானத்தில் 75 பேரை மட்டுமே அழைத்துவர முடியும் என்பதுடன் அந்தப் பயணிகள் இலங்கைக்கு சென்றதன் பின்னர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது