கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 13ஆம் திகதிக்குப் பின்னர், ஒன்பது நிமிடத்துக்கு ஒருவர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை 150 ஆக பதிவாகி வருகிறது எனவும் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (15.08.21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க , சுகாதார சேவையாளர்களில் பாரிய எண்ணிக்கையானோருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் 50 சதவீதம் கொரோனா தொற்றாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், நாட்டின் முழு சுகாதாரத் துறையும் சரியும் அபாயத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார்.
நாட்டை முடக்க வேண்டுமென பலர் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இதேவேளை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில் அமைச்சரவையில் உரையாற்றுவதற்கு முயற்சித்தபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதனைத் தடுத்து நிறுத்தியதாகவும், தேவை ஏற்பட்டால் வைத்தியர்கள் தன்னை சந்திக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.