யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 129 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளிலும் கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 129 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு அமைக்கப்பட்டு 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 கோவிட்-19 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
கோவிட்-19 நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் தினமும் 5 சடலங்கள் போதனா மருத்துவமனை சவ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் சீரான ஒழுங்கமைப்பில் தினமும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் சடலங்கள் கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றன