தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த ஜனவரியில் முதன் முதல் அறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு க்கு “மூ”(“Mu”) என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. அயல் நாடுகளிலும் ஐரோப்பா உட்படவேறு சில நாடுகளிலும் பரவியுள்ள அதன் குணவியல்புகள் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருவதாக உலகசுகாதார நிறுவனத்தின் நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
.B.1.621 என்னும் அறிவியல் பெயர் கொண்ட கொலம்பியா திரிபு(“Colombian variant”) இனிமேல் “மூ” என்று அழைக்கப்படும்.”மூ” என்பது கிரேக்க இலக்கங்களில் (Greek alphabet) பன்னிரெண்டைக் குறிக்கும். தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட “பேற்றா” (Beta) திரிபினைப்போன்று “மூ” வைரஸும் தடுப்பூசிகளை எதிர்க்கின்ற சக்திமிக்கதாக இருக்கலாம் என்பது பூர்வாங்கப் பரிசோதனைகளில்தெரியவந்துள்ளது.
2019 இல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல மரபு மாற்றங்களை எடுத்து புதிய தன்மைகளுடன் பரவி வருவது தெரிந்ததே. அவற்றில்இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்ரா திரிபு உலகெங்கும் புதிதாகத் தொற்றுநெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா என்கின்ற தாய் வைரஸில் இருந்து பல நூற்றுக் கணக்கான வைரஸ் திரிபுகள் உருவாகி வந்தாலும் அவற்றில் சில மாத்திரமே தொற்றும் திறன் கூடியவையாகவும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியால் கட்டுப்படுத்த முடியாதவையாகவும் காணப்படுகின்றன.
அத்தகைய ஆபத்தான திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது. இலகுவாக அடையாளம் காண்பதற்காகவும் நாடுகளின் பெயர்களைக் கூறி அழைப்பதால் உருவாகின்ற விரும்பத்தகாத விளைவுகளைத் தவிர்க்கவும் கிரேக்க இலக்கங்களின் பெயர்கள் திரிபுகளுக்குச் சூட்டப்படுகின்றன.
பெல்ஜியத்தில் மூதாளர் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த வயோதிபர்கள் ஏழுபேர் அண்மையில் “மூ” என்கின்ற கொலம்பியா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள் ஆவர். அமெரிக்கா, மெக்ஸிக்கோ ,இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து போன்ற நாடுகளில் மரபு மாறிய”மூ” வைரஸ் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
——————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.01-09-2021