Home இலங்கைகைதடி முதியோர் இல்ல முதியவர் உள்ளிட்ட 08 பேர் கொரோனோவால் உயிரிழப்பு

கைதடி முதியோர் இல்ல முதியவர் உள்ளிட்ட 08 பேர் கொரோனோவால் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்று தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட முதியவர் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கோவிட்-19 தொற்றுடன் குழந்தை பிரசவித்து 10 நாள்களின் பின்னர் உயிரிழந்தார்.

அதேவேளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும்,  இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும், கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 41 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

உடுவிலில் 74 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
 அவரது சடலம் தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மின் தகனம் செய்யப்படும் என்று உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259ஆக உயர்வடைந்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More