எமது நாட்டைப் பொறுத்தவரை மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் பற்றி எந்தவொரு ஆய்வுகளும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை. மொத்தத்தில் இப்படியும் நோயாளிகள் உள்ளனர் என்பதை மறந்துவிட்டார்களோ என்று கேட்க தோன்றுகிறது என மறைந்த ஊடகவியலாளர் ஞா.பிரகாஸ் தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மஸ்குலர் டிஸ்ரோபி நோயினால் கடந்த 18 வருட காலமாக பாதிக்கப்பட்ருந்தவரான , சுயாதீன ஊடகவியலாளர் ஞா.பிரகாஸ் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொரோனோ தொற்றினால் உயிரிழந்திருந்தார்.
அவர் கடந்த மே மாதம் 16ஆம் திகதி தனது முகநூலில் எழுதிய பதிவிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது ,
“எமக்கான பாதுகாப்பு” ?
மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகள் சாதாரணமாகவே குறைந்த ஆயுள் காலத்தைக் கொண்டவர்கள். அந்த ஆயுள் காலம் வரையும் வாழப் போராடுபவர்களாக அவர்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் கொரோனா எனும் பெருந்தொற்று இந்த நோயாளிகளுக்கு மேலுமொரு எதிரியாக வந்திருக்கின்றது.
சளி தொடர்பிலான பிரச்சினையே மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளின் உயிரையெடுக்கும் ஆயுதமாக இருப்பதால், சளி நோய் நிலைமையினைக் கொண்ட கொரோனா பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
எனது தேடலுக்கு எட்டியதுவரை இலங்கை, இந்தியா, ஏனைய வெளி நாடுகளில் உள்ள மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளர்கள் நான் உட்பட கொரோனா நிலைமையினால் மிக அதிகமாக அச்சமடைந்துள்ளனர். ‘நாங்கள் இறந்து விடுவோமா?, எங்களுக்கு தடுப்பூசி கிடைக்குமா?, அதை பெற்றுக் கொள்வது ஆபத்தில்லையா?’ என்பது அவர்களுக்குள் பரந்துபட்ட கேள்வியாக காணப்படுகிறது.
ஆனால் மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றிய ஆய்வுகளோ பாதுகாப்பது தொடர்பான திட்டங்களோ தனித்துவமாக செய்யப்படவில்லை என்பதை என்னுடைய தேடல் காட்டுகின்றது. மஸ்குலர் டிஸ்ரோபி தொடர்பான அமைப்புக்கள் சில மட்டுமே சில ஆய்வுகளை வெளிப்படுத்தியுள்ளன. அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.
பிற நாடுகள் உள்ளூர் மட்டத்தில் எவ்வாறு இதனை கையாளுகிறது என்பது தெரியவில்லை. எமது நாட்டைப் பொறுத்தவரை மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் பற்றி எந்தவொரு ஆய்வுகளும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை.
மொத்தத்தில் இப்படியும் நோயாளிகள் உள்ளனர் என்பதை மறந்துவிட்டார்களோ என்று கேட்க தோன்றுகிறது.
ஏற்கனவே குறைந்த ஆயுளை வைத்து போராடிவரும் மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை ஏற்றுவதை சாத்தியமாக்க இந்த நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா என்பதை மருத்துவ சபையின் ஊடாக ஆராய்ந்து உறுதிப்படுத்தி, நோயாளியின் நோய் நிலைமையை பரிசோதித்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகளின் விருப்பத்துடன் எமது அரசு முன்னெடுத்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணப்பாடு.
ஆனால் அப்படியொரு விசேட கவனிப்பு எம் மீது காட்டப்படுமா என்பது கேள்விக்குறியே. அதனைச் செய்யவில்லையென்றால் இந்த நோயாளிகள் உள்ள குடும்பத்தினருக்கு கொரோனா நோய் தொற்று ஆபத்து வரும் போதேனும் மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளியை காப்பதற்காகவும், மன அழுத்தத்தை குறைக்கவும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பதை விரைவாக உறுதி செய்வதற்கான வழிமுறைகளேனும் அவசியம். அந்தக் குறைந்த சலுகையை கூட பெற முடியாத நிலையில் தான் நிலைமை இருக்கின்றது. இது மஸ்குலர் டிஸ்ரோபி நோயாளிகள் மட்டுமல்ல ஆபத்தான நோய்களுடன் இருப்பவர்கள் உள்ள குடும்பங்களுக்கும் அவசியமானது.
அதிகளவில் பிசிஆர் பரிசோதனைகளை செய்வதற்கான பிசிஆர் இயந்திரங்களுக்கு பற்றாக்குறை இருப்பதால் பிசிஆர் மாதிரிகள் விரைவாக பெறப்பட்டும் பல நாட்கள் கடந்த பின்னரே அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.
அவ்வாறான நிலைமை இருக்கும் போது எம்மை போன்றவர்களுக்கான முன்னுரிமை செயற்திட்டங்கள் நிச்சயம் இருக்க வேண்டும். நான் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் கூட எனக்கான பரிசோதனை முடிவும் காலம்கடந்து தான் கிடைக்குமோ என்னமோ தெரியவில்லை. எங்களுக்கு கொரோனா தடுப்பூசியும் இல்லை. சலுகையும் இல்லை என்பது தான் வெளிப்படையான உண்மை. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.