தமிழக கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று சனிக்கிழமை (4) மாலை ராமநாதபுரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 27 பேர் படகு ஒன்றின் மூலம் கடல் வழியாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி தூத்துக்குடி சென்று கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டு மதுரையில் தங்கியிருந்த நிலையில் அவா்களை ராமநாதபுரம், மதுரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் இலங்கையில் இருந்து கனடா தப்பிச் செல்ல மங்களூருவில் பதுங்கியிருந்த இலங்கை தமிழர் 32 பேரை மங்களூர் கியூ பிரிவுகாவல்துறையினர் ஜூன் மாதம் 11ஆம் திகதி மாலை கைது செய்தனர். இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டணத்தில் சிலர் அடைக்கலம் கொடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணையில் தெரிய வந்தது.
அதன்படி இலங்கை தமிழர்கள் சிலரை மங்களுரூ தனிப்படையினர் ஜூன் மாதம் 20ஆம் திகதி அழைத்து வந்து வேதாளை கடல் பகுதியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.
இதை தொடர்ந்து அதிகாரி சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று சனிக்கிழமை (4) ராமநாதபுரம் சென்று மண்டபம் அருகே வேதாளை, சீனியப்பா தர்கா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை பார்வையிட்டதுடன் இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரை கைது செய்து ராமநாதபுரத்தில் வைத்து விசாரனைகளை மேற்கொண்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது