இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

“நான் அறியாத எனது ஊர்” – பௌர்ஐா அன்ராசா!

இந்த வருடம் August 30ம் திகதி நாங்கள் எங்களது சொந்த வீட்டிற்கு சென்று சரியாக ஒருவருட பூர்த்தியை எட்டியுள்ளோம். எமது நாட்டில் ஏற்பட்ட போரினால் 30 வருடங்கள் இடப்பெயர்வையும் இன்னல்களையும் கண்டு வந்தோம். வாடகை வீடு, தொடர்ச்சியான இடமாற்றம் என்ற நிலைகளை கடந்து வந்து சொந்த ஊரில் சொந்த வீட்டில் குடியேறிய நினைவுகள் அழகானவை. இந்த நேரத்தில் எமது ஊருக்கு மீள குடியேற அனுமதி வழங்கி நாங்கள் எங்களுடைய காணிகளை பார்வையிடச் சென்ற அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவே இருந்தது. மேலும் ஒரு ஆச்சரியமான ஒரு உணர்வையும் எமக்குள்ளே ஏற்படுத்தியதாகவும் இருந்தது. இந்த அனுபவத்தினை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

2018ம் ஆண்டு எங்களுடைய ஊரான மயிலிட்டிக்கு குடியேறலாம் என்ற அனுமதியினை அரசாங்கம் அறிவித்திருந்தது. எங்களுடைய ஊர் யாழ்ப்பாண வலிகாம வலயத்தில் மிகவும் பிரசித்தி வாய்ததும் புகழ் பெற்றதுமாக இருக்கின்றது. எங்களுடைய இடத்தினை விடுவதற்கு இராணுவத்தினர் பெரும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். அக் கொண்டாட்டத்தில் வரவேற்பு உரைகளும், கட்டளை மொழிகளும், உறுதியுரைகளும், மிக நீளமாக சென்று கொண்டிருந்தன. எமது சொந்த ஊருக்கு நாங்கள் செல்வதற்கு ஏன் அவர்கள் மத்தியில் இவ்வளவு கோலாகலம் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் எங்களது உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் தங்களுடைய ஊர்களை பார்க்க போகின்றோம் என்ற கொண்டாட்டம் அவர்களுடைய மனங்களில் இருந்தது என்று எங்களுக்கு விளங்கியிருந்தது. 30 வருடங்களின் பின்னர் தங்களது சொந்த ஊரை பார்ப்பதற்கு வயதானவர்களும் இளைஞர்களும் தவறாமல் வந்திருந்தனர்.


நானும் அக்காவும், அம்மாவுடன் சென்றிருந்தோம். நாங்கள் பிறப்பதற்கு முன்னரே ஊரைவிட்டு வெளியேறியதால் எங்களது ஊரைப்பற்றிய விம்பங்கள் எமது பெற்றோர்களதும், உறவினர்களதும் கதைகளினூடாகவே எங்கள் மனதில் ஆளமாக பதிந்திருந்தது. இதனால் ஊரைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் எங்களுக்கும் இருந்தது. ஆனாலும் வயதானவர்களுக்கும் எமது பெற்றோர்களுக்கும் இருந்த ஆவலைவிட மிக குறைவாகவே இருந்தது.


ஊரைப்பார்ப்பதற்கு சென்ற வழிநெடுகிலும் எங்களுடைய அம்மா ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார். சீமெந்து தொழிற்சாலை, நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறை கடற்கரை, புகையிரத நிலையம், இயற்கைத் துறைமுகம், பலாலி விமான நிலையம் என்று எல்லா இடத்தையும் சொல்லிக் காட்டிக் கொண்டே வந்தார். எங்களது கடற்கரை மிக அழகாகவும் சுத்தமாகவும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதை பார்க்க எங்களுக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. துறைமுகத்திற்கு அண்மையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் என எங்களது கண்கள் பார்ப்பதற்கு நிறைய விடயங்கள் இருந்தன. எங்களது பயணத்தில் இருந்த இளைய தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தவர்கள் இவையனைத்தையும் சொல்லிக் கொண்டே வந்தார்கள்.


எங்களது ஊர் மயிலிட்டி துறைமுகத்திலிருந்து 15 நிமிட நேரத்தில் சென்று விடக்கூடிய தூரத்தில் இருந்தது. இந்நேரத்தில் இராணுவத்தினரின் நிகழ்வுகள் முடிவடைந்து ஊருக்கு செல்லலாம் என்று அனுமதி கிடைத்த வேளையில் ஒரு திருவிழாக் கூட்டத்தைபோல மக்கள் முண்டியடித்துக் கொண்டே சென்றார்கள் அவர்களுடைய வேகத்தில் எப்பிடியாவது ஊரைப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலும் விருப்பமும் மட்டுமே இருந்தது.


நான் அவதானித்ததில் எவருமே பொறுமையாக நடந்து செல்லவில்லை. மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். வெயில் காலமென்பதால் தார் போடாத வீதியில் புழுதி மெலெழுந்து கொண்டிருந்தது. அப்போதைய நிலைமையில் எவரும் அந்த புழுதியையோ, கற்களையோ பார்க்கவே இல்லை என்றே சொல்லலாம். வீதியின் இருமருங்கிலும் வானளவு உயர்ந்த பற்றைக்காடுகளும், விளாமரங்களும், இப்பிலுப்பில் மரங்களுக்கும் முள் மரங்களுமே செறிந்திருந்தன. ஒரு சில இடங்களை இராணுவத்தினர் தங்களது தேவைகளுக்காக திருத்தியமைத்து வைத்திருந்தனர்.


இத்தனைக்கும் நடுவிலே ஒவ்வொரு குடும்பத்தவர்களும் தமது எல்லைகளையும் வெற்றுக்காணிகளையும் தேடிப்பிடித்துக் கொண்டிருந்தனர். எவ்வளவு ஆவலோடு அதனைச் செய்தார்கள் என்பதை வெறும் எழுத்தில் மட்டும் சொல்லிவிட்டுப் போக முடியாது. அவ்வளவு உணர்வு ரீதியான தருணமாக அந்த பொழுது காணப்பட்டது.


இதற்கு மத்தியில் எங்களுடைய அம்மா, எங்களுடைய காணியை கண்டுபிடித்தாக கூறினார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம் ஏனெனில் அடர்ந்திருந்த விளாத்தி மரக்காட்டை காட்டி அம்மா சொன்னார் ‘ இது தான் எங்கட காணி. இதுக்கு இஞ்சால ஒரு மதகு இருந்தது அதுதான் எங்கட ஒழுங்கை’ என்றார். எங்களுக்கு நம்பிக்கை வரேல்ல. சரி அம்மா சொன்ன மதகுக்கான அடையாளங்கள் எங்கேயாவது இருக்கோ எண்டு அக்கம் பக்கம் தேடிப் பாhத்தோம். கொஞ்ச தூரத்தில மதகு ஒண்டு இடிஞ்ச நிலையில இருந்தது. அம்மாவ நினைச்சு சந்தோசமா இருந்தாலும் ஒரு ஊரின் மீது ஒரு பற்றும் பிடிமானமும் எவ்வளவு இருந்தது என்பதனையும் உணரக் கூடியதாக இருந்தது.


அந்த பற்றைக் காணிகளுக்கும் அவர்கள் தங்களது காணிகளை கண்டு பிடித்து நிலத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தார்கள். சிலபேர் கண்ணீர் விட்டார்கள். மறைந்த தமது உறவுகளை எண்ணி அழுதார்கள். இந்த இடத்தில் இடப்பெயர்வின் அவலங்கள் எவ்வளவுக்கு ஒவ்வொரு மனித மனங்களிலும் ஆளமாக புதைந்திருக்கின்றது என்பதனை உணரமுடிந்தது. அகதிகளாய், நாடோடிகளாய் வாழ்ந்ததின் வடுக்களை அவர்கள் அந்த இடத்தில் கொட்டித் தீர்த்தார்கள்.
இன்று நாங்கள் எங்களது காணிகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் குடியமர்ந்து விட்டோம்.

எங்களுடைய காணிகளை பூமரங்களாலும் பழமரங்களாலும் பார்த்துப்பார்த்து அழகு படுத்தி வருகின்றோம். கண்ணில் படுகின்ற எல்லா மரங்களையும் நட்டுவைத்துள்ளோம். மரங்களுடன் உரையாடுகிறோம். இது அனைத்தும் இடப்பெயர்வின் வலிகளையும், வாடகை வீடுகளில் இருந்த அந்தரிப்புக்களையுயும் மனங்களில் இருந்து முற்றாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே.


எங்களுடைய அம்மா எங்கள் வளவுக்குள் எல்லா மரங்களையும் நடுவார். சில நேரங்களில் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக மரங்களை நட்டால் ‘ஏன் இப்பிடி நெருக்கமா வைக்கிறீங்கள்’ என்று கேட்டால் ‘இது எங்கட வளவுதானே’ என்று சொல்லுவார். அம்மா சொல்லுகின்ற ‘எங்கட வளவுதானே’ என்ற ஒற்றைச்சொல் எங்களுக்கு எப்பவுமே பல நினைவுகளையும் அனுபவங்களையும் தருவதாகவே உள்ளது.

பௌர்ஐா அன்ராசா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.