Home இலங்கை நான் பிறப்பதற்கு துணையாக இருந்த மருத்துவிச்சி! பிறேமானந்த சுஜாதா.

நான் பிறப்பதற்கு துணையாக இருந்த மருத்துவிச்சி! பிறேமானந்த சுஜாதா.

by admin
    

பெரியபுல்லுமலை கிராமத்தில் வசிக்கும் ஆ.இராசம்மா இவர் ஒரு புகழ்ப்பெற்ற மருத்துவிச்சியாக காணப்படுகின்றார்.இவர் 1953ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 15 வயதில் திருமணம் செய்துக்கொண்டதாகவும் இவருக்கு 5 பிள்ளைகள் இவர்கள் திருமணம் செய்து விட்டார்கள் 16வயதில் இருந்து ‘அப்பம் சுட்டு விற்கும்’ தொழிலையும் இன்றைக்கு வரைக்கும் செய்துக்கொண்டு வருகின்றார். தனது 19 வயதிலேயே மருத்துவிச்சி வேலையை செய்து வந்துள்ளாராம். ‘நான் மருத்துவம் பார்த்த பிள்ளைகளுடைய பிள்ளைகளுக்கும் மருத்துவம் பார்துள்ளேன்’ என்று கூறினார். இவர் மருத்துவிச்சி வேலையை யாரிடமும் கேட்டு பழகவில்லை தானாகவே தற்துணிவின் பெயரில் செய்ததாக கூறினார். அதாவது மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை எனக்கு ஏற்பட்டது. எனது திறமையாலும், தற்துணிவினாலும் எனது ‘அண்ணனுடைய மனிசிக்கு வலி வந்திச்சி மருத்துவிச்சி எங்கயோ போயிட்டா எனக்கு 3வது பிள்ள பிறந்து 3நாள் நானாகவே அவைக்கு மருத்துவம் பார்த்தன்’ என்றார்.


இந்த பிரசவம் பார்ப்பதற்கு எந்தவொரு ஆயுதமோ,பொருளோ என்னிடம் இல்லை ‘புது விளேட்’ ஒன்றை எடுத்து சுடுதண்ணீரில் போட்டு பின்பு பிள்ளையின் தொப்புள் கொடியை வெட்டி எடுத்ததாக கூறினார். பிள்ளையை வெளியில் எடுத்து ‘குளிர்க்க வெச்சிட்டு தாய்க்கு கோப்பி குடுத்துட்டு வந்துட்டன்’;. என்றார். இது தான் என்னுடைய முதலாவது பிரசவம் பார்த்த அனுபவமாக இருந்தது. பயம் ஒன்று ஏற்படவில்லை கை நடுக்கம் மட்;டும் தான் இருந்தது என்றார். ஏன் மருத்துவம் செய்யனும் என்ற ஆசை ஏற்பட்டது என்றால் ‘ஆத்துர அவசரத்துக்கு கூப்பிட்டா போய் செய்யலாம்.என்ற எண்ணம் எனக்கு வந்திச்சி’ அதில் இருந்து தன்னுடைய ஊர் மட்டும் இல்லை பக்கத்து ஊருக்கும் போய் மருத்துவம் பார்த்துள்ளேன் என்றார். இவர் சென்று மருத்துவிச்சி பார்துள்ள பிள்ளைகளை ‘எண்ணி கணக்கு எடுக்க ஏலாது’ என்றார் பிள்ளைகள் எல்லாமே சுக பிரசவம் தான் என்றார் ‘இப்ப என்ன என்டா உடனே சீசர் பண்றாங்க இமுந்தி எல்லாம் இப்படி எல்லாம் ஒன்டும் இல்ல நான் பார்த்த எல்லா பிரசவமும் சுகபிரசவம் தான் பாமசு ஐயாவால முயாத பிரசவத்தையும் நான் செய்துள்ளேன் தாய்க்கோ பிள்ளைக்கோ ஒன்டுமே நடக்காது’ என்றார்.


மருத்துவம் பார்க்கும் போது தாய்க்கு கடுமையாக வலி வருவதற்;கு ‘கருக்கள்’ போட்டு கொடுத்தால் உடனே வலிவந்து பிள்ளை பிறந்துவிடும் என்றார். இப்படி நான் மருத்துவிச்சி வேலை செய்துக்கொண்டிருக்கும் போது 1992ஆம் ஆண்டு மருத்துவிச்சிமார்கள் அனைவரையும் மட்டக்களப்பு மன்றசாலையில் 7நாட்கள் தொடர்ந்து பயிற்ச்சி வழங்கப்பட்டதாக கூறினார். பின்னர் செங்கலடி வைத்தியசாலையில் 5-6 நாட்கள் அங்கே இருந்து வைத்தியர்களுக்கு முன்பாக பிரசவம் பார்க்க சொன்னார்களாம். ‘நான் செய்றது பிழையா சரியா என்று டொக்டர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் நான் பயம் இல்லாமல். பிரசவம் பார்த்தேன். எனக்கு வைத்தியசாலையால் சான்றிதழும் கிடைத்தது’ என்றார். இந்த பயிற்ச்சி முடிந்த பின்னர் தங்களுக்கான ஆயுதங்கள் எல்லாம் தந்தார்கள். அதனை வைத்துக்கொண்டு தான் நான் தொடர்ந்தும் மருத்துவம் பார்த்துக்கொண்டு வந்தேன் என்றார்.

எங்களுடை ஊரில் இருந்த எல்லா தாய்மாருக்கும் வீட்டில் தான் மருத்துவம் பார்தேன். ஏன் என்றால் எங்களுடைய ஊரில் இருந்து செங்கலடி வைத்தியசாலைக்கு போவதற்கு எந்தவிதமான போக்குவரத்தும் இல்லை அதனால் ‘சைக்கிளும் மாட்டுவண்டிலும்’ தான் அந்த காலத்தில் வாகனமாக இருந்தது என்றார் இந்த மருத்துவிச்சியே எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் பிள்ளைகளை பெறவிப்பாராம். சிலவேளையில் பிள்ளைகள் பெறப்பதற்கு கஷ்டமாக இருந்தால் வெட்டுகாயம் ஏற்படும். அப்படியானால் உடனே ‘மாட்டுவண்டிலில்’ ஏற்றி செங்கலடி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.


எங்ளுடைய ஊரிலேயே இருந்துக்கொண்டு மருத்துவிச்சி வேலையை மிகவும் ஆர்வமாக செய்துக் கொண்டு வந்தார்களாம். 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்ரவாத யுத்தத்தின் காரணமாக பெரியபுல்லுமலை கிராமத்தை விட்டு மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து தங்களுடைய சொத்து சுகங்களை விட்டு உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக ஊரை விட்டு ‘ஆயித்தியமலை, உன்னிச்சை’ என்னும் இடங்களுக்கு இடம்பெயர்ந்துச் சென்று கோயில்கள், பாடசாலைகள் என்பவற்றில் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் தங்களுடைய உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தார்களாம். அந்த கோயிலில் தாய் ஒருவருக்கு பிரசவவலி வந்துவிட்டதாம் ‘நான் தான் உடனே ஓரு மறப்பான இடத்துக்கு தூக்கி சென்று பிரசவம் பார்த்தேன். ஒரு சீலை துணியில் தான் பிள்ளையை சுத்தி வெச்சி இருந்தேன், நான் இல்லாமல் இருந்திருந்தா தாயும் பிள்ளையும் இறந்திருப்பாங்க அந்த சூழலில் பிறந்த பிள்ள இன்றைக்கு மிகவும் ஆரோக்கியமாக வாழ்கின்றது.என்னுடைய அணுபவத்தில் இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது’ என்றார்.


சில நாட்களுக்கு பின்னர் இவர்கள் சிலஇடங்களில் சிறிய வீடுகளை கட்டி அந்த இடத்திலேயே குடியேறிக்கொண்டார்களாம்.அங்கு இருக்கும் போதும் பக்கத்தில் இருக்கின்ற ஊர் தாய்மார்களுக்கும் மருத்துவம் செய்துள்ளாராம். ‘பக்கத்து ஊர்களுக்கு அந்த பிரச்சினை காலத்தில யாருமே இரவு நேரங்கள்ள வெளிய போக கூடாது என்று இராணுவம் சொல்லியிருந்தது. யாரும் கூப்பிடும் போது போக ஏலாம இருக்கவும் முடியாது போகத்தான் வேணும் அப்படி ஒழிஞ்சி யாருக்கும் தெரியாம போயும் பிரசவம் பார்த்துயிருக்கின்றேன்’


இவர் பார்த்த மருத்துவிச்சி முறையில் இரட்டை குழந்தைகளும் பிறந்திருக்கின்றதாம். பிரசவம் பார்ப்பதில் எந்தவொரு பயமோ, தடுமாற்றமோ எனக்கு இல்லை , பிள்ளை பிறந்த உடனே தாய்க்கு உணவு கொடுப்பதில்லை ‘கோப்பியும் வட்டரும்’ தான் கொடுப்பதாம் மறு நாள் காலையில் தான் ‘பத்திய உணவு’ கொடுப்பதாம் இந்த மருத்துவிச்சி பிரசவம் பார்த்த வீ;ட்டுக்கு தொடர்ந்து 12நாட்கள் சென்று தாயினுடைய நலத்தையும், குழந்தையினுடைய நலத்தையும் பார்த்துக்கொண்டு வருவதாக கூறினார். பிள்ளை பிறந்தவுடன் மகிழ்ச்சியில் சில வீடுகளில் 50ரூபாய் 100ரூபாய் என்ற பணமும் கொடுப்பார்களாம். ‘நான் காச எதிர்பாக்குறது இல்ல உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்;காக தான் போற நான்’ என்றார்.


இந்த மருத்துவிச்சியே என்னுடைய அம்மாவுக்கு நான் பிறப்பதற்கும் மருத்துவம் பார்த்ததாக கூறினார் உண்மையில் மருத்துவிச்சி ஏதோ ஒருவகையில் தாய்மார்களுக்கு சொந்தமாகவே இருப்பார்கள் இந்த மருத்துவிச்சி பக்கத்திலேயே இருந்து மருத்துவம் பார்ப்பதால் தாய்மார்;களுக்கு எந்தவிதமான பயமோ தடுமாற்றமோ ஏற்படாது. தாயினுடைய நலன் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் அக்கறையாக செயற்படுவார்கள். மேலும் இவர்கள் பக்கத்தில் இருப்பது எங்களுடைய அம்மாவுக்கு சமமாக இருக்கின்ற உணர்வை ஏற்படுத்தும் எனபார் என்னுடைய அம்மா, என்னை தொடர்ந்து என்னுடைய இரண்டு தம்பிமார்களுக்கும் மருத்துவம் பார்த்ததும் இந்த மருத்துவிசியே, இவருடைய கை பக்குவத்தினால் எனக்கோ, எனது தம்பிமார்களுக்கோ எந்தவிதமாக நோய்களும் ஏற்படவில்லை இன்று வரைக்கும் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்று எனது அம்மா கூறினார்.


ஆ.இராசம்மா மருத்துவிச்சி 19 வயதில் இருந்து 60 வயது வரைக்கும் மருத்துவிச்சி தொழிலில் சிறந்து விளங்கியுள்ளார். பெரியபுல்லுமலையில் சிறப்புப்பெற்ற கைப்பக்குவமும் திறமையும் கொண்டவராக இவர் திகழ்கின்றார். தற்பொழுது கண் பார்வை கொஞ்சம் குறைவாக இருக்கின்றதாகவும் கூறினார். தன்னுடைய மூத்த மகளின் வீட்டில் இருந்து தான் இன்றைக்கும்’அப்பம் சுட்டு விற்கின்றார்’ முன்பு இருந்த மருத்துவிச்சி முறைகள் இன்றைய சூழலில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவர்களின் மகத்துவத்தின் தேவைகள் மறக்கப்பட்டதாக உள்ளது இதனை ஞாபகப்படுத்துவதே அதன் நோக்கம்.
பிறேமானந்த சுஜாதா

;.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More