இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் மலையகம்

” மலையக தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரிய கிராமிய தெய்வங்களின் வழிப்பாட்டு முறைகள் பற்றிய ஒரு பார்வை”ரவிச்சந்திரன் சாந்தினி.

மலையகமக்கள், தாம் செய்யும் தொழிலை தெய்வமாகவும் இந்தத் தொழிலுக்கு பயன்படும் உபகரணங்களை அதன் அடையாளமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். மலையக தமிழரின் வழிபாட்டு அம்சங்களில் கிராமிய வழிபாடுகள் மிக முகியமானது. மலையக தொழிலாளர்கள்
தங்களுக்கும் தங்களது தொழிற்துறைக்கும் பாதுகாப்பாக இருந்த இயற்கை வளங்களையும் தமது வாழ்வாதாரத்துக்கு துணையாக இருந்த இயந்திரங்கள் ஆயுதங்கள் உட்பட தமக்கு வழிகாட்டியாக இருந்தவர்களையும்
தெய்வமாக மதித்து அதனை வழிபட்டும் வருகின்றார்கள்.

கிராமிய தெய்வம் “ எனப்படுவது எம்மக்களிடையே காணப்படும் வழிபாட்டு முறைமைகளில் மிக முக்கியமானது. கிராமிய கடவுள்கள்களின் வழிபாடுகளானது மலையக மக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களின் முன்னோர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகில் மிக தொன்மையான வழிபாடு இயற்கை வழிபாடாகும். அதற்கு அடுத்த வழிபாடு கிராமிய தெய்வ வழிபாடாகும் .இவ்வாறான கிராமிய தெய்வ வழிபாட்டு முறைகள் என்பது வீட்டுத் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இன தெய்வ வழிபாடு, ஊர் தெய்வ வழிபாபடு, முன்னோர் வழிபாடு என பல வகைகள் காணப்படுகின்றன.

மருதைவீரன்,முனியாண்டி,மாடன்,முனி,ரோத முனி
ஐயனார், மலைசாமி,கொய்னூறான்,மாடன்,
மதுரவீரன் போன்ற கிராமிய தெய்வங்கள் ,மருந்துசாமி,பட்டை மரத்துச் சாமி,கவ்வாத்துச்சாமி என மலையக தமிழர்கள் தங்கள் தொழிற்துறையோடு சம்பந்தப்படுத்தியும் தமது வாழ்வியலோடும் தொடர்பு படுத்தியும் பல வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றுள் கவ்வாத்துச்சாமியினை பற்றிக் குறிப்பிடும் போது பொதுவாக மலையகத்தில் ஆண்களே கவ்வாத்து தொழிலில் ஈடுபடுவர்.
தேயிலை செழிப்பாக வளர்வதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வெட்டுபடுவதை ‘கவ்வாத்து’ என அழைப்பார்கள். இந்த வேலையினை செய்யும் போது ஆண்கள் பெரிய கத்தியினால் தேயிலை மரங்களை வெட்டுவார்கள். அவ்வாறு வெட்டப்படும் போது அவர்களுக்கு ஆயுதத்தாலோ வெட்டப்பட்ட தேயிலைச் செடியினாலோ தீங்குகள் ஏற்படா வண்ணம் காத்தருள வேண்டும் என்பதற்காக கவ்வாத்து வேலை தொடங்கும் நாள் காலை கவ்வாத்துசாமி வழிபாடு நடைபெறும்.

தேயிலையினை வெட்டும் போது அதாவது கவ்வாத்தினை மேற்கொள்ளும் போது தங்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படக்கூடாது தாங்கள் அனைவரும் நேர்த்தியான வகையில் கவ்வாத்து வேலையினை வெகு விரைவில் செய்து முடிக்க வேண்டும். அத்தோடு வேலையினை தொடர்ந்து செய்யும் போது மிருகங்களிடமிருந்தும், ஏனைய பூச்சிகளிடமிருந்தும் தங்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படக்கூடாது என எண்ணிக்கொண்டு கவ்வாத்தினை மேற்கொள்ளும் முதல் நாளன்று கவ்வாத்து சாமிக்கு பூசைப்பொருட்களினை வைத்து அதாவது கவ்வாத்தினை மேற்கொள்ள உதவும் “கத்தி” இதனையும் கவ்வாத்துச் சாமியின் முன் வைத்து வணங்குவார்கள். பிறகு தொழிலாளர்கள் அனைவரும் கவ்வாத்துச் சாமியிடம் நேர்த்தி ஒன்றினை வைப்பார்கள் அதாவது எங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி கவ்வாத்தினை முடித்து தர வேண்டும் என்று எண்ணி கவ்வாத்துச் சாமியினை வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு கவ்வாத்துச் சாமியினை வணங்கியதனை தொடர்ந்து அவர்கள் கவ்வாத்து தொழிலினை மேற்கொள்வார்கள். இவ்வாறு ஒரு மாத காலம் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் கவ்வாத்து தொழில் முடிவடைந்த பிறகு கவ்வாத்து தொழிலிலை மேற்கொண்ட அனைவரும் காசு சேர்த்து தங்களால் முடிந்தளவு உணவு சமைத்து
கவ்வாத்து சாமினா அப்படி ஒரு விசேசம், கவ்வாத்து முடிஞ்சு மலையெல்லாம் துப்புறவு ஆக்கின பெறகு, பொங்க வச்சு சாமி கும்பிடுதல்,மற்றும் கவ்வாத்துச் சாமிக்கு படையல் செய்வார்கள். இதனை ஊர் மக்களுக்கும் வழங்குவார்கள். இவ்வாறு நம்பிக்கை நிறைந்த வகையில் கவ்வாத்துச் சாமியினை வணங்கி தங்களது தொழிலை மேற்கொள்ளும் தன்மைகள் இன்றும் சிறப்பாக நடந்து வருகிறது.

பூசை வழிபாடுகள் பாரம்பரிய முறையிலேயே செய்யப்பட்டு வருகிறது. இந்து மக்கள் மட்டுமல் தோட்டத்தில் உள்ள ஏனய சமயத்தவர்களும் கவ்வாத்துச் சாமி பற்றி அறிந்து வைத்துள்ளனர்.
புதுவருடத் தினத்தன்று (ஜனவரி முதலாம் திகதி) தேயிலை மலைகளில் தேயிலை செழிப்பாக காணப்பட வேண்டும் என ‘பொலிக்கொழுந்து’பறித்து காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
இந்தக் கிராமிய தெய்வ வழிபாடுகள் மக்கள் தாமாகவே இயற்றிக்கொண்ட வழிபாட்டு முறைகளுடனும் கலைகளுடனும் பின்னிப்பிணைந்துள்ளது.

காலனித்தவ ஆட்சியின் நிமித்தம் ஆகமவிதிப்படி கோயில் கட்டி பெருந்தெய்வ வழிபாடு எம்மிடையே உட்புகுந்துக்கொண்டாலும் மலையகத்தில் இன்றும் நம்பிக்கை நிறைந்த வகையில் தங்களுடைய தொழிலுக்காகவும், ஆரோக்கியமாக வாழ்வதற்கான உந்து சக்தியாகவும் கிராமியதெய்வ வழிப்பாட்டினை சிறப்பாக செய்துவருகின்றனர். தவிர்க்க முடியாத பல மாற்றங்களினால் ஆகம முறைப்படி பூசைகளுக்கு உள்வாங்கப்பட்டாலும் கலைகளுடன் இணைந்த எமது கிராமியதெய்வ வழிபாட்டு முறைகளை அழியாது மீட்டெடுத்து பதிவுசெய்யவேண்டிய கட்டுப்பாட்டில் நாம் உள்ளோம். அதுதான் எமது இன அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கும்” என்பது எனது பதிவாக உள்ளது. இன்றைய உலகமயமாக்கல் சூழலின் நிமித்தம் பல்வேறு இனக்குழுமங்கள் தங்களது அடையாளங்களை இழந்து வருகின்றனர். எனவே அவ்வாறில்லாது கலைகளினூடாகவும், பண்பாடுகளினூடாகவும் கிரமிய தெய்வ வழிபாடுகளை நம்பிக்கை நிறைந்த வகையில் பாரம்பரியங்கள் மாறாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ரவிச்சந்திரன் சாந்தினி
நுண்கலைத்துறை விசேட கற்கை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.