Home உலகம் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் – சவுதிக்கு தொடர்பு?

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் – சவுதிக்கு தொடர்பு?

by admin

20 ஆண்டுக்கு பின் வெளியான FBI ரகசிய ஆவணம்..

இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று நேற்றுடன் 20 ஆண்டுகள் முடிந்த நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக எஃப்.பி.ஐ அமைப்பின் ரகசிய அறிக்கை பொதுவெளியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2001, செப். 11ஆம் தேதி தான் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 2997 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னரே, ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கும் சவுதி அரசுக்கும் தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகவே கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்கா சார்பில் இது குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படாமலேயே இருந்தது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகச் சவுதி இருந்ததாலேயே தகவல்கள் மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தன. இது குறித்த அனைத்து ரகசியத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தோரின் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பான அனைத்து ரகசியத் தகவல்களையும் வெளியிட அதிபர் பைடன் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக எஃப்.பி.ஐ அமைப்பின் ரகசிய ஆவணம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்போது சவுதி உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்ட உமர் பயோமிக்கும் இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

சவுதிக்கு தொடர்பு இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற ஓர் ஆண்டிற்கு முன்னதாக 2000ஆம் ஆண்டிலேயே கடத்தல்காரர்கள் அமெரிக்காவுக்கு வந்து, விமானத்தை இயக்கும் பயிற்சியைப் பெறத் தொடங்கியிருந்தனர். அந்த காலகட்டத்தில் சவுதி உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்ட உமர் பயோமி என்பவருக்கும் இரண்டு கடத்தல்காரர்களை அவ்வப்போது சந்தித்ததாகவும் எஃப்.பி.ஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியான எஃப்.பி.ஐ அறிக்கையில் “சவுதி தூதரகத்தில் உமர் பயோமிக்கு மிக உயர்ந்த அந்தஸ்து இருந்தது. போக்குவரத்து, நிதி, தங்குமிடம் உள்ளிட்ட பலவற்றில் உமர் பயோமி கடத்தல்காரர்களுக்கு உதவியுள்ளார். மேலும், உமர் பயோமிக்கு ஜிகாத் மீது அதிக நம்பிக்கை இருந்ததாகவும் ஜிகாத் குறித்து அடிக்கடி பேசுவார் என்றும் நாங்கள் (FBI) நேர்காணல் செய்த நபர் தெரிவித்தார்” என்று இன்று வெளியிடப்பட்ட ரகசிய ஆணவத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009 மற்றும் 2015ஆண் ஆண்டுகளில் இந்தத் தாக்குதல் தொடர்பாக சில முக்கிய நபர்களுடன் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் எஃப்.பி.ஐ அமைப்பு இந்த ஆவணத்தை கடந்த 2016, ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கியிருந்தது. இதுநாள் வரையில் ரகசிய ஆவணமாக இருந்த இது இப்போது வெளியிடப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் அமெரிக்காவில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு உதவியவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கிடையே நடைபெற்ற டெலிபோன் உரையாடல் தொடர்பான தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

அடுத்த ஆவணங்கள் சவுதி அரசுக்கு பணியாற்றியாக நம்பப்படும் ஒருவருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே இருந்த தொடர்பை இது உறுதி செய்துள்ளது. ஆனால், அதேநேரம் பலரும் எதிர்பார்த்தபடி சவுதி அரசுக்கு இந்த தாக்குதலில் நேரடியாகத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இதில் இல்லை. இருப்பினும், இது முதல் ஆவணம் தான் என்றும் வரும் காலங்களில் வெளியாகும் ரகசிய ஆவணங்களில் சவுதி அரசுக்கும் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் இடையே இருந்த தொடர்பு அம்பலமாகும் என இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜிம் கிரெண்ட்லர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More