ஒரு சமூகம் தமது நிகழ்கால இருப்பின் நியாயங்களை நிறுவுவதற்கும் எதிர்கால இருப்புகளின் வழிமுறைகளை வகுத்து கொள்வதற்கும் தனது கடந்தகால வரலாற்று அம்சங்களை கண்டுகொள்வது அவசியமாகும். அவ்வகையில் அடங்காப்பற்று என அழைக்கப்பட்டு வந்த வன்னிமா நகரில்; அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்களில் புதூர் நாகதம்பிரான் ஆலயமும் ஒன்றாகும். இவ் ஆலயம் யாழ் யு9 வீதியில், 207 ½ கிலோமீற்றர் கல்லில் இருந்து மேற்குப்பக்கமாக 5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இலங்கை திருநாட்டில் உள்ள பல்லின மக்களின் வழிபாட்டுத்தலமாக சிறப்புப் பெற்று விளங்குகின்றது. முதலில் இயற்கை வழிபாட்டை மேற்கொண்ட மனிதர்; பின் ஆத்மா(ஆவி) வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதர் வெவ்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்கு கோவில்களை எழுப்பி வழிபட்டான். நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் நாகபாம்பு வழிபாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
பண்டைய தமிழர்களின் இயற்கை வழிபாடுகளில் ஒன்றாகவும் இந்து மற்றும் பௌத்த மதங்களில் காணப்படும் வழிபாடாகவும் இருந்து வருகின்றது. புராண இதிகாசங்களிலும் ஆதி பர்வம் முதலான பண்டை நூல்களிலும் நாகத்தின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கை திரு நாட்டில் வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள புத்தூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் நாகதம்பிரான் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கொள்ளப்படுகிறது. இதன் தோற்றம் பற்றி தொல்லியல் வரலாற்று காரணிகள் பல்வேறு சான்றுகள் பகிர்ந்த போதிலும் வாய்மொழி வந்த கதைகளே சான்றாதாரங்களாக நம்பிக்கையுடன் கூடிய வழிபாட்டிற்கு துணைபுரிகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புளியம் பொக்கனை எனும் ஊரில் நீதிநாயக முதலியார், கமலம் அம்மையார் தம்பதிகளுக்கு பங்குனிமாத உத்தர நட்சத்திரமும் பூரணையும் கூடிய சுபதினத்தில் நாகதம்பிரானும், ஓர் பெண் பிள்ளையும் பிறந்ததாக எம் முன்னோர்களால் அறியத்தரப்பட்ட வரலாறாகும். பாம்பிற்கு தம்பிரான் என்றும் பெண்ணிற்கு வள்ளிநாகாச்சி என்றும் பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தனர்.
தம்பிரானும், வள்ளி நாகாச்சியும் வளர்ந்து வரும் பிராயத்தில் தம்பிரான் வெளியில் சென்று வேறு பாம்புகளுடன் சேர்ந்து வீடுவருவதும். தம்பிரான், தாய், தந்தை, சகோதர்களின் உடலில் ஏறி ஊர்ந்து விளையாடி வருவதுமாக நடந்துவந்த காலத்தில் ஒரு நாள் நீதி நாயக முதலியார் கமத்தொழிலுக்குச் செல்ல, கமலம் அம்மையார் முற்றம் கூட்டிக்கொண்டு நிற்கையில் தம்பிரான் கூட்டிய குப்பையை கிளறி தாயின் உடலில் ஏறியபோது “ சீ வீட்டை விட்டு போ ” எனக் கூறி கூட்டிய துடைப்பத்தால் தட்டியதால் தம்பிரான் பெரும் கோபம் கொண்டு மற்றைய பாம்புகளுடன் புதூர் காட்டை நோக்கி சென்றுவிட்டார். அவர் சென்ற பாதைகள் புல் பூண்டுகள் எரிந்து நீண்ட காலமாக அவை முளைக்காமல் இருந்தது. அப்பாதை “நாகம் சொரிந்த சோலை” என கூறப்பட்டது. தகப்பன் நீதிநாயகமுதலியார் கமத்தொழிலில் இருந்து வீடு வந்து தம்பிரானை நீண்ட நேரமாக காணாததால் மனைவியிடம் வினாவிய போது கமலம் அம்மையார் நடந்தவற்றை கூறினார். அவற்றை கேட்டு பெரும் துன்பமடைந்த நீதி நாயக முதலியார் அவர் உறவினரை அழைத்து தம்பிரான் சென்ற வழி கண்டு புதூர்காடு சென்றடைந்தனர். அக்காட்டில் அற்புதமான பெரிய புளியமரப் பொந்தில் தம்பிரானும் அவருடன் வந்த மற்றைய பாம்புகளும் இருப்பதை கண்டு மகிழ்ச்சியுற்றார். தம்பிரானை தன்னுடன் வரும்படி தந்தை அழைத்தபோது மறுத்து விட்டு தன்னுடன் வந்த மற்றைய பாம்புகளில் ஒன்றை தகப்பனுடன் அனுப்பி வைத்தார்.
புதூருக்கு கிழக்கே புதூர் வீதியில் சுமார் 3 மைல் தொலைவில் உள்ள குருக்கள் குளம் எனும் கிராமத்தில் வசித்து வந்த சைவவேளாளர் குலத்தில் உதித்த சிதம்பரநாதர் என்பவருக்கு சொர்ப்பனத்தில் தோன்றி நான் நாதம்பிரான் என குறிப்பிட்டும் புதூர் காட்டில் புளியமர பொந்தில் தான் இருப்பதாக இடத்தையும் குறிப்பிட்டு அங்கு வந்து தன்னை ஆதரிக்கும் படியும் தான் நல்லருள் பாலிப்பதாக கூறி மறைந்தார். இதை உணர்ந்த சிதம்பரநாதர் புதூர் காட்டை நோக்கி சென்றடைந்தார். அங்கே அற்புத புளிய மர பொந்தில் நாதம்பிரான் இருக்கும் காட்சி கண்டு அவ் புளிய மரப் பொந்தில் பால், பழம் வைத்து வழிபட்டு வந்தார். நாதம்பிரான் சொர்ப்பனத்தில் உணர்த்தியபடி அவ்விடம் புதூர் என்று அழைக்கப்பட்டு மிகுந்த பக்தியுடன் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. சிதம்பர நாதர் காலமாகி விட அவரின் மகன் குமராத்தைப்பிள்ளை தகப்பனார் செய்தது போல் நாகதம்பிரான் பணியை செய்து வந்தார். பின் வயது முதிர சட்ட பூர்வமாக தர்மாசனம் எழுதி அவர் மகன் நாகமணிக்கு கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து வந்த தலைமுறையினரால் நாகதம்பிரான் பணி செய்யப்பட்டு வருகின்றது.
இராமுப்பிள்ளை கார்த்திகேசு, தம்பு, நாகமுத்து, வல்லிபுரம் ஆகியோர் பணி செய்து வருகையில் நாகதம்பிரான் அருள்வாக்கால் குறித்த புளியமரம் எடுக்கப்பட்டு அவ்விடத்தில் மூலஸ்தானமும் அதை தொடர்ந்து ஏனைய கட்டிடங்களும் கட்டப்பட்டு மூலஸ்தானத்தில் நாகதம்பிரானும் அதை தொடர்ந்த கட்டிடத்தில் பிள்ளையார், அம்மன், முருகன், வைரவர் ஆகிய திருவூலங்கள் வைக்கப்பட்டது. இன்றுவரை பாரம்பரியம் பேணப்பட்டு பூசை இடம்பெற்று வரும் ஆலயமாக திகழ்கின்றது. 1965 ம் ஆண்டு திருவோண நட்சத்திரத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்று பூசை செய்யப்பட்டு வருகின்றது. மூலஸ்தானத்திற்கு அருகில் உள்ள பாலைமரப் பொந்தில் நாகதம்பிரான் உத்தரவுப்படி பால், பழம் வைத்து பூசை செய்து வருகிறார்கள். பாலைமர பொந்து வழியாக நாகதம்பிரான் மூலஸ்தானத்திற்கு வருகின்றார். மூலஸ்தானத்தில் இருக்கும் நாகதம்பிரான் திருவூலத்திற்கு அபிசேகம் செய்யும் நீர் வெளிவரும் இடத்தில் இருந்து மருந்து எனும் மண் எடுக்கப்படுகின்றது. விம் தீண்டியோர், புத்திர பாக்கியம் இல்லாதோர், நாகதோம், செவ்வாய் தோம், குரு முhதலான தோம் உள்ளோருக்கு மருந்து மண்ணை எடுத்து கோவில் தீர்த்த நீரில் கரைத்து தெளித்த நீரை பருக கொடுத்து, வெள்ளை துணி வேளைகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் மஞ்சள், வீபூதி, சந்தனம் பூசி பொந்தின் வாசலில் வைத்து எடுத்து நாகதம்பிரானை நினைவு கூர்ந்து கையில் கட்டிவிட்டால் சகல துன்பங்களும், தோங்களும் நீங்கி வந்தது. இது நாகதம்பிரானின் அருளாளே நிகழ்ந்தது என மக்கள் நம்பினர்.
வருடாவருடம் பெரும் பொங்கல் வைகாசி மாதத்தில் வரும் விசாகம் பூரணையின் பின் வரும் அமாவாசைக்கு அண்மித்த திங்கள் அன்று நடைபெறுகிறது. முன்னோர்கள் பெரும் பொங்களுக்குரிய பொருட்களை பெற்று கொள்வதற்காக பொங்களுக்கு இரு வாரங்களுக்கு முன் புதூரில் இருந்து மாட்டுவண்டி பூட்டி கொடிகாமாம், சாவகச்சேரி, நீர்வேலி, மீசாலை ஆகிய இடங்களுக்கு சென்று அவ்விடங்களில் பறைசாற்றி நாகதம்பிரான் பொங்கல் தினத்தை தெருவித்து மக்கள் வழங்கிய நன்கொடைகளை பெற்று மேலதிகமான பொருட்களை பணம் குடுத்து வாங்கி பொங்களுக்கு இருநாட்களுக்கு முன் இடம் வந்து சேர்ந்ததாக ஆலய வரலாறு கூறுகின்றது. கொண்டுவரும் பொங்கல் பொருட்களை நாகதம்பிரான் ஆலயத்திற்கு எதிரே சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள “பண்டவெட்டை” எனும் இடத்தில் வெள்ளை துணியால் மூடிவைப்பார்கள். பொங்கல் தினத்தன்று “பண்டவெட்டை” எனும் இடத்தில் இருந்து நேர்த்திக்கு காவடி அலகு குத்தி தோளில் வைக்கப்பட்டும், பால்செம்பு எடுப்பவர்களுக்கு செம்பில் பால் விட்டும், கற்பூரதீபம் ஏற்றி ஆரம்பித்து வைத்து வீதிவலம் வந்து நாகதம்பிரானுக்கு அர்ச்சனை செய்வர். நாகதோம், செவ்வாய் தோம் உள்ளோர் தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, பாம்புப்படம் வைத்து பாலிட்டு நாகதம்பிரானை வலம் வந்து வணங்கி தோ~ நிவர்த்தியும், அங்கபிரதட்சணம் நேர்த்திகளும், பொங்கல் நேர்த்திகளும் அன்றைய தினம் முதல் இடம்பெறும்.
நாகதம்பிரான் நேர்த்திக்காக கொண்டுவரப்படும் பணம், கோழிகள், முட்டைகள் போன்றவை நாகதம்பிரான் வீதி வலம் வந்து பொங்கல் பொருட்களை எடுத்து வருவதற்காக அன்றையதினம் இரவு சுமார் 12.00 மணியளவில் இடைநிறுத்தப்பட்டு பிள்ளையார், நாகதம்பிரான், அம்மன் முத்து சப்பறத்தில் வைத்து பூமாலைகளால், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முன்னோர் வழிமுறையில் நாகதம்பிரான் வழிவந்த பூசகர்கள் மூவர், குறித்த சுவாமிகள் ஒவ்வொன்றினதும் அணிகன்களை எடுத்த வண்ணம் வீதிவலம் செல்லும் சுவாமி முன் குறித்த “பண்டவெட்டை” எனும் இடத்தில் வைக்கப்பட்ட பொங்கல் பெருட்களை எடுக்க செல்வார்கள். அவ்விடம் சென்றதும் நாகதம்பிரான் அணிகலணுடன் சென்ற பூசகர் பொங்கல் செய்வதற்குரிய வளந்துக்களுக்கும் (மண்பானை), பொங்கல் பொருட்களுக்கும் பூசை செய்து ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொருவரிடம் வெள்ளை துணியால் மூடி கொடுப்பார். அப்பொருட்களை எடுத்து கொண்டு வீதி வலம் வருவர். சுவாமி கோவில் இருப்பிடத்தை அடைந்ததும் நேர்த்திக்கான நிகழ்வு இடம்பெறும். அத்துடன் பூசகரால் நாதம்பிரானுக்கு பால், பழம் வைக்கும் பாலை மரத்தடியில் மூன்று அடுப்பு வைத்து வளந்துக்களில் பிள்ளையார், நாதம்பிரான், அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு வளந்து நேரும் பூசை நடைபெற்று பொங்கல் வைக்கப்படும்.
தமிழர்களின் கிராமிய தெய்வ வழிபாட்டு முறைகளில் முக்கிய அம்சமாக வளந்து நேரும் பூசை காணப்படுகின்றது. வளந்து என்பது வழமையான ஆலயமுறைகளில் பொங்கல் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் மண் பானைகளில் இருந்து சற்று வேறுபட்ட அமைப்பு முறையை கொண்டு காணப்படும். வளந்தின் அடிசற்று அகன்று, வாய்ப்பகுதி ஒடுங்கியதாக மண்ணினால் செய்யப்பட்டிருக்கும். வளந்து நேர்தலின் போது பூசாரி எட்டுதிக்கும் பரிகளன் அழைத்து நேர்ந்து வளந்தின் மேல் வெள்ளை துணியால் கட்டுவார்கள். பொங்கல் வைக்கும் போது இத் துணிமேல் நெருப்புபடாது என்பது ஐதீகமாகும். வளந்தினை குறித்த பரவணியக்காரர்களிடம் வழங்கும் போது அவர்களின் தலை மீது வெள்ளை துணியால் மொக்காடு போட்டு மூடி வலப்பக்க தோளில் வைத்து, ஏனை பண்ட பொருட்கள் உரித்து காரருக்கு வழங்கப்பட்டதும் பண்டமெடுக்கும் இடத்தில் இருந்து ஆலயம் நோக்கி கால்நடையாக செல்வர். அங்கு பூசாரி முறை வழிபாடு இடம்பெற்று பொங்கல் வைக்கப்படும். இது தமிழர்களின் பொதுவான கிராமிய வழிபாட்டு முறையாகும்.
புதூர் நாகதம்பிரானில் பொங்கல் வைக்கப்பட்டதும் நேர்த்திக்காக வந்த கோழி, முட்டை ஏலத்தில் விற்கப்படும். பொங்கல் செய்ததும், படையல் வைத்து பூசை நடைபெற்றதும் பொங்கல் விழா நிறைவு பெறும். இவ் பொங்கல் அன்று இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்து செல்வார்கள். அன்றைய தினம் பகல் இரவு என தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இவ் அன்னதானத்திற்கு என சிறப்பு வரலாற்று பின்னணியும் உள்ளது. வவுனியா வடக்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நொச்சி மோட்டை என்னும் கிராமத்தில் வசித்த அ.வன்னியசிங்கம் (கணபதிப்பிள்ளை), தம்பாப்பிள்ளை ஆகிய இருவரும் அன்னதானத்தை ஆரம்பிப்பதற்கு நாகதம்பிரான் பணிகள் செய்து வந்தவர்களிடம் சென்று அனுமதி கேட்டபோது அவர்கள் அனுமதி வழங்கினர். அன்று நடைபெற்ற நாகதம்பிரான் பூசை கண்டு சாப்பிட்டு போகும்படி கூற அதற்கு அவர்கள் தாங்கள் இருவரும் நடந்து நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளதால், அதை தவிர்த்து சென்றனர். அப்போது நாகதம்பிரானிடம் செல்லும் பாதை சிறுபாதையாக இருந்ததால் அவர்கள் இருவரும் திரும்பிச் செல்கையில் பாம்பு இருவரையும் வழிமறித்துவிட்டது.
பின் அவர்கள் திரும்பி சென்று நாகதம்பிரானை வழிபட்டு உணவு உண்ட பின் ஊருக்கு சென்றடைந்தனர். இதன் பின் இருவரும் இணைந்து நெடுங்களாமாக அன்னதானம் வழங்கி வந்தனர். அவர்களுடன் இணைந்து நொச்சி மோட்டை கிராம மக்களும் அன்னதானம் வழங்கி வந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. நீர்வேலி எனும் ஊரில் வசித்து வந்த வ.செல்லத்துரை திருமணமாகி நீண்டகாலமாக குழந்தை இல்லாததால் நாதம்பிரானுக்கு தொட்டிலும் பிள்ளையும் வாங்கி பூசை செய்ததன் விளைவாக 1959 ம் ஆண்டு பங்குனி மாதம் 24 திகதி உத்தரநட்சத்திரமும் பூரணையும் கூடிய சுப தினத்தில் பெண் பிள்ளை பிறந்தது. குழந்தைக்கு நாகேஸ்வரி என பெயர் சூட்டினர். நேர்த்தி பயனளித்து குழந்தை பிறந்ததால் அ.வன்னியசிங்கம், தம்பாப்பிள்ளை ஆகிய இருவருடனும் இணைந்து அன்னதானம் வழங்கி வருகின்றனர். இன்று அத் தலை முறையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் ஆலய வழிபாட்டுடன் கூடிய சடங்குகள் இன்றும் மரபுரீதியாக பேணப்பட்டு வருகின்றது.
400 வருட கால பழைமையை கொண்ட புதூர் நாகதம்பிரானின் ஆலய சிறப்பை அறிந்தும் அதன் மகிமை உணர்ந்து “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” எனும் வாக்குக்கு இணங்க 2018 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 13ம் திகதி 108 அடி நவ தள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆலய பிரதம குருவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது வவுனியா மாவட்டத்தில் அதி உயரமுள்ள இராஜ கோபுராமாக அமையவுள்ளது. குறிப்பாக ஈழத் தமிழரின் ஆதிக் குடிகளான நாகர்களின் மரபுவழி வழிபாட்டு முறைகளுள் ஒன்றான நாகவழிபாடு தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்ததன் ஓர் அங்கமாகவே புதூர் நாகதம்பிரான் ஆலயமும் வடக்கின் ஏனைய ஆலயங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
மகிழினி சதாசிவம்
நுண்கலைத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்.