மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடா்பில் அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் பாவனையில் இருந்ததாகக் கூறப்படும் ஓர் உழவு இயந்திரம் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சமயம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அது பிரதேச சபைக்குரியது எனத் தவறாக உரிமை கோரும் கடிதம் வழங்கி நீதிமன்றில் இருந்து உழவு இயந்திரத்தை விடுவித்து அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை 14 ஆம் திகதி தொடக்கம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகள் வெறிதாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.