Home இலங்கை கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி போட பின்னடிப்பு

கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி போட பின்னடிப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் கொவிட்-19 தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. தடுப்பூசியானது ஏனையவர்களைப் போலவே கர்ப்பவதிகளை கொவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் மிக கணிசமான அளவில் குறைக்கும். மாறாக இத்தடுப்பூசியானது அதனைப் பெற்றுக்கொள்ளும் கர்ப்பவதிக்கோ, அவரது சிசுவிற்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொவிட் – 19 உலகளாவிய தொற்றின் மூன்றாவது அலை இன்று இலங்கையில் வெகு தீவிரமாகப் பரவி வருவதுடன் இறப்பு வீதமும் மிக அதிகமாக உள்ளது. கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாவதால் இறப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் கர்ப்பிணித்தாய்மார்கள் மிக முக்கியமான தரப்பினராவர்.

இலங்கையில் 2020 மார்ச் மாதம் முதல் 2021 செப்ரெம்பர் வரை 6 ஆயிரத்து 49 கர்ப்பிணித்தாய்மார்கள் கொவிட் – 19 நோய் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதில் இந்த வருடம் இதுவரை 5 ஆயிரத்து 938 கர்ப்பிணித்தாய்மார் தொற்றுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது. அவர்களில் இதுவரை 43 தாய்மார்கள் நாடுமுழுவதும் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் தொற்றுக்குள்ளான முதலாவது கர்ப்பிணி பெண்ணின் உயிரிழப்பு கடந்த மே மாதம் 6ம் திகதி பதிவானது. கடந்த 5 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் நாடுமுழுவதிலும் சராசரியாக எட்டு கர்ப்பிணித்தாய்மார்கள் இறப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இவ்வருடம் இதுவரை 184 கர்ப்பிணித்தாய்மார் கொவிட் – 19 தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுள்ளனர். தரவுகளின் படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை பதியப்பட்ட ஓவ்வொரு 100 கர்ப்பிணித்தாய்மார்களிலும் 3 பேர்கொவிட் – 19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 4 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

பொதுவாக கர்ப்பவதிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஓரளவு குறைவடையும். இதன் காரணமாக இலகுவில் கொவிட் – 19 தொற்று உட்பட தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணித்தாய்மார்களில் அறிகுறிகள் இன்றியோ அல்லது மெல்லிய அறிகுறிகளுடன் மட்டும் இருப்பினும் கூட இவர்களது உடல்நிலை திடீரென மோசமடைய கூடுமாதலால் அவர்களது சிசுவிற்கு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகாத கர்ப்பிணித்தாய்மார்களைவிட கொவிட் -19 தொற்று உள்ள கர்ப்பிணித்தாய்மார்கள் கர்ப்ப கால சிக்கல் நிலைகளுக்காக அதிகமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய தேவையுட்பட, பாதகமான கர்ப்ப விளைவுகளுக்கும், தொற்றுநோயின் நிமித்தம் ஏற்படக்கூடிய காலத்திற்கு முன்னான பிறப்பு, சிசு இறப்பு மற்றும் தாய் மரணத்திற்கும் உள்ளாகின்றனர்.

இதற்கு மேலதிகமாக கர்ப்பவதிகளில் ஏற்கனவே வேறு தொற்றா நோய் நிலமைகள் உடையவர்கள், வயது கூடியவர்கள் மற்றும் உடற்திணிவுச்சுட்டி அதிகரித்தவர்கள் கொவிட் – 19 தொற்றினால் மேலதிக சிக்கல்களை எதிர்நோக்குவதுடன் அதிகளவில் இறப்புக்கும் உள்ளாகின்றனர்.

இந்தஙநிலையில் மேலதிகமாக கொவிட் – 19 தொற்றினால் கர்ப்பிணித்தாய்மார் இறப்பதை தடுப்பதற்கு எமக்கு முன்னால் உள்ள தெரிவுகள் மிகச்சிலவே.

அவையாவன பொதுச் சுகாதார நடைமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், சரியான முறையில் கைகளைக் கழுவுதல் என்பவற்றை இறுக்கமாக கடைப்பிடித்தல், மற்றும் தடுப்பூசியை அதிகளவு பெற்றுக் கொடுத்தல் என்பவையாகும்.

இவ்வகையில் பொதுச் சுகாதார நடைமுறைகளை பெருமளவானோர் சரியாகக் கடைப்பிடிக்காமையால் இன்று வரை கொவிட் – 19 தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது உள்ளது. இந்நிலையில் எமக்கு மீதமாக உள்ள ஒரே ஒரு உபாயம் தடுப்பூசிகளை அதிகளவு பெற்றுக் கொடுப்பதுவே.

எனவே கொவிட் – 19 தாக்கத்தினால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைப்பதற்காகவே அனைத்து கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் கோவிட் – 19 தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதன் மூலம் தாய்க்கும் சேயிற்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வருந்தத்தக்க வகையில் யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் இத் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. இத்தடுப்பூசியானது ஏனையவர்களைப் போலவே கர்ப்பவதிகளை கொவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் மிக கணிசமான அளவில் குறைக்கும். மாறாக இத்தடுப்பூசியானது அதனைப் பெற்றுக்கொள்ளும் கர்ப்பவதிக்கோ, அவரது சிசுவிற்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பவதிகள் இத்தடுப்பூசியை தமது கர்ப்பத்தின் எக் காலத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இத்தடுப்பூசிகளினால் ஏற்படக்கூடிய மெல்லிய காய்ச்சல், உடற்சோர்வு மற்றும் தடுப்பூசி வழங்கப்பட்ட இடத்தில் வீக்கம் என்பன மட்டுமே ஏற்படலாம். ஆனால் இவையும் மிக மிக அரிதாகவே ஏற்படுவதுடன் அவ்வாறு ஏற்பட்ட போதிலும் உங்கள் சிசுவுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.

இத்தடுப்பூசியினை கர்ப்பிணித்தாய்மார்கள் தமக்குரிய குடும்பநல உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்வதன் மூலம் அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் ஆதார மருத்துவமனைகள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை போன்றவற்றில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

கர்ப்பிணித்தாய்மாரே கோவிட் – 19 தொற்றுக்கொதிரான தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்வது உங்களையும், உங்கள் சிசுவையும் இக் கொவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் இச்சமூகத்தையும் பாதுகாப்பதாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More