மலையக சமுதாயத்தினை பொறுத்தவரையில் கூத்து என்பது மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மலைப் பகுதிகளில் தேயிலை தொழிலுக்காக வரவழைக்கப்பட்ட மக்கள் அவர்களுடன் சேர்ந்து அவர்களின் வாழ்வியல் அம்சங்களையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளன அவற்றுள் கூத்துக்களும் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது அதாவது தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்கள் இவர்களின் வேலை முடிந்தவுடன் மாலை நேரங்களில் தங்களது பாரம்பரியக் கூத்துக்கள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்று கூடி ஆடி மகிழ்வது வழக்கம் அவ்வாறு மக்கள் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து உயிரோடு இன்றும் அழியாது காணப்படும் கூத்துக்களுள் பின்வரும் கூத்துக்களும் அடங்கும்.
காமன் கூத்து
பொன்னர் சங்கர்
அர்ஜுனன் தபசு
நல்ல தங்காள்
இவ்வாறான கூத்துக்கள் இன்றும் மலையக மக்கள் வாழ்வியலோடு இணைந்த காணப்படுகிறது. இவற்றுள் இன்றளவும் அழியாது மலையக மக்களால் ஆடப்பட்டு வரும் காமன்கூத்து மிகவும் பிரதான இடத்தை வகிக்கின்றது. அந்தவகையில் பார்க்கும்போது கதை கருவானது சமயம் சார்ந்ததாகும். பக்தி நிறைந்ததாகவும் சோகம் கலந்த உணர்வு மேலோங்கி காணப்படும். இக் கூத்துக்கள் சமயம் தழுவியதாக விளங்குவதால் இந் நிகழ்வின் தொடக்கத்தில் காமன் கம்பம் நடுதல் என்பது மிகவும் பாரம்பரியமான பக்தி நிறைந்த ஒன்றாகும் இங்கு கம்பம் உன்டலானது மாசி மாதம் அமாவாசை கழித்து மூன்றாம் பிறையில் வரும் நாளில் காமன் பொட்டல் அதாவது பரம்பரை பரம்பரையாக ஊரின் பொதுவாக அமைந்த இடத்தில் சமய சடங்குகள் நிகழ்த்தப்படுவது வழக்கம் இதன்போது நாட்டுப்புற கிராமிய இசையின் இனிமையும் கலந்து காணப்படும் இடமே காமன் கோயிலாக கருதப்படுகிறது.
காமன் மேடையில் கம்பத்தை சுற்றி மூன்று அடுக்குகளில் மேடை அமைக்கப்படும்;. பின்னர் நட்சத்திரமும் பார்க்கப்படும் இங்கு கம்பத்திற்கு நேராக சிவனின் வீடு அமைக்கப்படும். இது பச்சை தென்னை ஓலையால் அமைக்கப்படும். அங்கு பாத்திரம் ஏற்பவர்கள் மிகுந்த பக்தி மனத்துடன் விரதமிருந்து காமனை வேண்டி காமன் பொட்டலிற்கு வந்து அங்கு தமிழர் மத்தியில் மங்களகரமானது என்று கருதப்படும் சிவ பொருட்களாக விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சள் ஆகியன பொருட்கள் வெற்றிலையில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் இவற்றினை பாத்திரங்கள் ஏற்க வந்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையிலான பொருட்களை தெரிவு செய்வார்கள் அவ்வாறு தெரிவு செய்தபின் அதில் இருக்கும் பொருட்களை வைத்து அவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் வழங்கப்படும.; பின்னர் காமன் மாஸ்டர் எனப்படும் அண்ணாவியார் காமன் கூத்து ஆடல் பாடல் என்பவற்றுக்கான பயிற்சி அளிக்கப்படும். இதன்பின்னர் கூத்து அரங்கேற்றம் அதற்குத் தேவையான நிதியினை பெறுவதற்கு கூத்தானது அயலிலுள்ள தோட்டங்களுக்கு சென்று ஆடுவது வழக்கம் அவ்வாறு ஆடப்படும் போது கூத்து தேவையான நிதியை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு அயலிலுள்ள தோட்டங்களுக்கு கூத்து ஆடப்படும் போது அங்கு சிறுவர்கள் மற்றும் கூத்தாட விருப்பமுடையவர்கள் பாத்திரங்களை ஏற்று ஆடுவார்கள் அவ்வாறு ஆடப்படும் போது அடுத்த தலைமுறையினருக்கும் இக்கூத்து சென்றடைகிறது இதன் போது அடுத்த வருடம் கூத்து ஆடுவதற்கு அண்ணாவியார் ஆனால் பயிற்றுவிக்கப்படுவது இலகுவாக அமைகிறது இதன்போது தோட்டப்புறங்களில் கூத்து ஆடி இறுதி அன்று வெகுவிமர்சையாக கூத்து ஆடப்படும்.
காமணை தெய்வமாக வழிபடுவது வழக்கம் இந்தியாவிலும் இதன் தன்மை நிலவுவது போன்று இலங்கையிலும் மலையக தமிழர் மத்தியில் அவர்களின் பண்பாட்டிற்கு அமைத்து நிகழ்த்தப்படுகிறது காமன் கூத்து காமன் பண்டிகை இகாமதகனம் காமன் கம்பம், மன்மத தம்பம், என்றெல்லாம் அழைக்கப்படுவது வழக்கம் மன்மதன் அதாவது காமன் ரதியின் தோழிகள் நந்திதேவர், நாரதர் இசித்திரனார், சிவன், உமை போன்ற பாத்திரங்களும் இடம்பெறும் சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகிய நூல்களிலும் காமலீலா பற்றிய குறிப்புக்களும் காமன் நோன்பு பற்றிய தகவல்களும் குறிப்பிட்டுள்ளது இதன் கதைக்கருவை பற்றி நோக்கும் போது தக்கணை வதம் செய்த சிவன் அவரது கோபத்தை தணிக்க கைலாசத்தில் ஆழ்ந்த கடும் தவத்திற்கு செல்கிறார். இதன் காரணமாக தேவலோகம் மற்றும் பூலோகம் கடும் இன்னல்களுக்கு உள்ளாகிறது இதன் காரணமாக தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்று சிவனின் தவத்தை கலைக்குமாறு இந்திரனிடம் வேண்டுகின்றனர்.
இந்திரன் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்மதனுக்கு சிவனின் தவத்தைக் கலைக்கும்படி உத்தரவிடுகிறார். அவ்வாறு இந்திரன் இட்ட ஆணையை ஏற்று மன்மதன் ரதி உடன் சென்று சிவனின் தவத்தைக் கலைப்பதற்காக சிவன் கடும் தவம் புரியும் கைலாயத்தின் சென்று காம நடனம் ஆடுகிறார். இதன்போது மன்மதன் சிவன் மீது காம கணைகளைத் தொடுக்க ஆத்திரமடைந்த சிவன் கண் திறந்து நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீயினால் மன்மதன் வெந்து சாம்பலாகி மடிந்து போக இதனை கண்ட ரதி சிவனிடம் மண்டியிட்டு மன்றாடி இழந்த தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டுகிறார். இதன்போது மனமிரங்கிய சிவன் மூன்றாம் நாளில் மன்மதனை உயிர் பெற்று தருகிறார்.
இவ் காமன்கூத்து ஆனது ஆரம்பமாகும் தினத்திற்கு முந்தைய தினம் அனைத்து தோட்டங்களுக்கும் ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்தி காமன் பொட்டலில் இரவு 7 மணியளவில் ஆரம்பமாகி விடியும் வரை ஆடப்படுகிறது. இதில் கோமாளி பாத்திரமானது ரதி மன்மதன் ஆகிய பாத்திரங்கள் ஆடும்போது இடையில் ஆடும் பாத்திரமாகும். இது மிகவும் சிரிப்பூட்டும் வகையிலான பாத்திரமாக காணப்படுகிறது பின்பு குறவன், குறத்தி ஆட்டம் ஆடும் இதுவும் நகைச்சுவை தன்மையான பாத்திரமாக காணப்படுகிறது இதன் பின்னர் ரதி மன்மதன் கான திருமண வைபவம் நடைபெறும்.
இதன் போது தேவர்கள், இந்திரர்கள், சிவன், பார்வதி போன்ற பாத்திரங்கள் இடம் பெறும் இதன்போது மன்மதன் சார்பாக இந்திரனும் ரதி சார்பாக சிவன் மற்றும் அவர்களின் உறவினர்கள் போல வருவார்கள் இவர்களின் திருமணம் நடைபெற்ற பிறகு மெய் வைப்பு விருதும் இடம்பெறும். இதன்பின்னர் பாத்திரங்களை அறிமுகப்படுத்தி காமன் கூத்து ஆட்டம் ஆனது இடம்பெறும் இதன்போது மன்மதன் ரதி ஆகிய பாத்திரங்களை ஏற்று ஆண் ஆடுவார்கள்
இவர்கள் கூத்து ஆடும் சமயங்களில் சில வேளைகளில் அதி மானுட நிலைக்கு சென்று கூத்துக்கலை ஆடுவது வழக்கம் இதேவேளை மன்மதனின் ஆட்டம் ஆனது மிகவும் வேகமாகவும் ரதியின் ஆட்டம் ஆனது மிகவும் மென்மையானதாகவும் பெண்ணியம் மிக்கதாகவும் காணப்படும். இதன் பின்னர் வரும் பாத்திரம் வீரபத்திரர் பாத்திரமாகும் இது மிகுந்த ஆக்ரோசமாகவும் வாயில் கோழியை கடித்தவாறு முதுகில் தீப்பந்தங்களை கட்டிக்கொண்டு மிகுந்த கோபத்துடன் வேகமாக ஆடக்கூடிய ஒரு பாத்திரமாக காணப்படும். அதனைத் தொடர்ந்து காமன் பொட்டலுக்கு வரும் இன்னொரு பாத்திரமாக காளி பாத்திரம் காணப்படுகிறது. இங்கு காளி ஆட்டம் ஆனது மிகவும் பிரபல்யமான ஒரு ஆட்டமாக காணப்படுகின்றது.
காமன் கூத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது பாத்திரமானது மிகுந்த கோபத்துடன் ஆடுவதாக அமையும் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமான தோற்றத்திலும் காணப்படும்;. பின்பு நந்தி ஆட்டம் ஆனது பிரதானமாக காணப்படுகின்றது அதாவது லாவணி இசை கேற்ற ஒரு மென்மையான ஆடலை கூத்து முழுவதும் ஆடிவரும் ஒரு பாத்திரமாகவும் அனைவராலும் குறிப்பாக சிறுவர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்படும் ஒரு ஆட்டமாகவும் நந்தி ஆட்டம் காணப்படுகிறது
காமன் கூத்தில் ஒப்பனையின் பயன்பாடு.
இங்கு பயன்படுத்தப்படும் ஒப்னையானது மிகவும் பிரகாசமானதாக கடுமையான நிறமுடையதாகவும் பயன்படுத்தப்படும். இங்கு ரதி மன்மதன் சிவன் ஆகிய பாத்திரங்கள் தலையில் கிரீடம் அணிந்திருப்பார். சிவன் உடலானது நீல நிறத்தில் காணப்படும் வீரபத்திரருக்கு ஆடுபவர் சிவப்பு நிறம் அல்லது கறுப்பு நிறத்திலான ஆடை அணிந்து மண்டை ஓடுகளையும் அணிந்திருப்பார் அவரின் முதுகு பகுதியில் ஐந்து அல்லது எட்டு தீப்பந்தங்கள் கட்டப்பட்டிருக்கும் பாத்திரமானது ஆடி முடியும் வரை தீப்பந்தம் ஆனது எரிந்துகொண்டே இருக்கும் வாயில் கோழியைக் கவ்வியவாறே இவர் காட்சியளிப்பார்;. காலி பாத்திரமானது மிகுந்த ஆக்ரோஷமாகவும் நாக்கை வெளியே நீட்டி அவள் கண்கள் பெரிதாக்கியும் படி கருப்பு நிற ஆடை அணிந்து மண்டை ஓடுகளை கையில் தாங்கி இப் பாத்திரமானது நடனமாடும. இதன்பிறகு பிரதான பாத்திரமான ரதி மன்மதன் பாத்திரமானது பச்சை நிறத்தில் தோற்றமளிப்பார்கள் இவர்களுக்கு கிரீடம் ஆபரணங்கள் போன்றவற்றை அணிவித்து இருப்பர் பச்சை மரத்திலான விலை தாங்கிக்கொண்டு காமன் கூத்து ஆடுவார்கள் இவ்வாறு தாங்கி ஆடும் பச்சை மரத்தினால் செய்யப்பட்ட வில்லே இறுதியில் தீயிலிட்டு எரிக்கப்படும் இதுவே சிவன் மன்மதனை அழித்த தினை எடுத்துக்காட்டும் ஒரு செயலாக அமைகிறது இங்கே தோன்றும் மற்ற பாத்திரங்களுக்கான வேட உடை ஒப்பனை யானது ஒப்பனைக் கலைஞர்கள் இன் விருப்பத்திற்கே விடப்படும் ஆரம்பத்தில் தீப்பந்தங்கள் ஆன ஒளியுடன் இங்கு பயன்படுத்தப்பட்டது. இன்று நவீன காலத்தில் எல்இடி மற்றும் பிளாஷ் லைட் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது.
காமன் கூத்தில் இசையின் பயன்பாடு.
இங்கு பயன்படுத்தப்படும் இசையானது லாவணி இசை ஒப்பாரி போன்ற பாடல்கள் இதமானதாக இருக்கும் இங்கு பிரதான இசைக்கருவியாக தப்பு காணப்படுகிறது. ஒரே நேரத்தில் மூன்றிலிருந்து ஐந்து தப்புக்கள் வரை வாசிக்கப்படும் இதில் மூத்த கலைஞர் ஒருவர் இருப்பார் அவரே எந்த நேரத்தில் எவ்விதமான இசையினை வழங்கவேண்டும் என்று மற்றவர்களுக்கு தப்பின் மூலமாக கூறுவார்இங்கு இசைக்கப்படும் இசையானது சில வேளைகளில் ஆடலுக்கும் சிலவேளைகளில் அங்க அசைவுகளும் பூஜைகளுக்காக என்று வேறு வேறு விதமான இசை நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது இங்கு பெரும்பாலான இசை பாடலுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு காமன் கூத்தனது இனிதே நிறைவடையும்…
(நேரடி ஆற்றுகை அனுபவத்தை கொண்டும் கூத்து கலைஞ்சர்கள் உடனான நேரடி உரையாடலினை அடிப்படையாக எழதப்பட்ட கட்டுரை.)
ஜு.சுஜிரட்ணம்
நாடகமும் அரங்கியலும்
கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை