பறை என்பது ‘ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு, சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி’ என முனைவர் வளர்மதி தன்னுடைய ‘பறை’ ஆய்வு நூலில் விளக்குகிறார்.
பறை என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். பேசு எனப் பொருள்படும் அறை என்ற சொல்லிலிருந்து பறை தோன்றியது (நன்னூல்:458). பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி பறை எனப்பட்டது.
தீட்டைப்பறை, தொண்டகச்சிறுபறை, அரிப்பறை, மன்றோல்சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பலவகைகள் உள்ளன. இந்துக்கடவுளான சிவனையே ஆட வைத்த இசைக்கருவி என்ற பெருமையை இப்பறை இசைக்கருவி பெறுகின்றது.
மேலும், இந்து தர்மத்தில் பறை சக்தியின் பெயரென்றும், அவளே ஆதியென்றும், சிவனே பகவான் என்றும் பாரதியார் கூறுகிறார். பறை இசைக்கு இறைசக்தியை ஆட்படுத்தும் ஆற்றல் உண்டு (மூர்த்தி.இரா,2018) மனித வாழ்க்கையிலே பறை இசை மட்டும்தான் மங்கலத்திற்கும், அமங்கலத்திற்கும் இசைக்கப்படும் இசைக்கருவியாக விளங்குகின்றது. வேறு எந்தவொரு இசைக்கருவியையும் இத்தனை விடயங்களுக்கு பயன்படுத்த முடியாது. இதற்கு காரணம் பறை என்பது தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது எனலாம். ஓற்றைப்பறையில் இருந்து தோன்றும் தப்பட்டை இசை எட்டுத்திக்கும் ஒலித்து கேட்பவர்களையே தாளம் போடவைக்கும் ஆற்றலை கொண்டு விளங்குகிறது. இதுதான் பறையின் பலம் என்று கூறப்படுகிறது. மேலும், உருவேற்றுவது, சாந்தப்படுத்துவது, களிப்பேற்றுவது, தன்னிலை மறந்து ஆடவைப்பது என்பன பறையிசையின் குணங்கள் என்றே கூறலாம்.
ஆரம்பகாலத்தில் பறை ஈழ மக்களின் கலாசார அடையாளமாக விளங்கியது. மேலும், ஆரம்பகாலத்தில் உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியமாகவும், பழங்காலத்தில் பறையடித்து தகவல் சொல்லுதல் ஒரு முக்கிய தகவல்பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் இருந்துவந்துள்ளது. இதனை விட இந்த பறை மேளம் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது எனலாம். அதாவது ஆரம்பகாலத்தில் போருக்கு வீரர்களை அணி திரட்டுவதற்கும், வெற்றி தோல்விகளை அறிவிப்பதற்காகவும், மன்னரின் செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காகவும், காடுகளில் இருந்து விலங்குகளை விரட்டுவதற்காகவும், மழை இல்லாத காலங்களில் வருண பகவானை அழைக்கவும், வயல் வேலைகளின் போது ஊக்கமளிப்பதற்காகவும், இவற்றை விட இயற்கை வழிபாடு, விழாக்கள், கூத்துக்கள், இறப்பு நிகழ்வுகள் போன்றவற்றிற்கு இந்த பறை பயன்படுத்தப்பட்டது.( விதுஜா.வே,2021)
இவ்வாறு பெருமை வாய்ந்த இந்த பறை மேளம் காலப்போக்கில் சமூகத்தில் ஏற்பட்ட பல மாற்றங்கள் காரணமாக பின்தள்ளப்பட்டது. குறிப்பாக சமூகவகுப்பு தான் இதற்கு காரணம் எனலாம். அதாவது, இந்த பறை மேளத்தை வாசிப்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் எனக் கருதி உயர்நிலையில் உள்ள மக்கள் இவ்விசையையும், இதனை வாசிக்கும் சமூகத்தினரையும் சமூத்திலிருந்து ஒதுக்கி வைத்தார்கள். இதனால் ஆரம்பகாலத்தில் ஈழ மக்களின் பாரம்பரியக் கலையாக இருந்தாலும் தற்காலத்தில் இந்த பறை இசை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் அடையாளமாக காணப்பட்டது.
இலங்கையில் மலையகத்தில் தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியிலும், வடக்கு,கிழக்கு தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியிலும் பறை இசை இன்றுவரை பயிலப்பட்டு வருகிறது. மலையகத்தில் இந்த பறையை ‘தப்பு’ என்று அழைப்பார்கள். இப்பறையிசையுடன் சொர்ணாலி என்ற வாத்தியமும் வாசிக்கப்படுகிறது. இந்த சொர்ணாலி சிங்களத்தில் ‘கொரண’ என்று அழைக்கப்படுகிறது. இருந்தாலும், தற்காலத்தில் பறைமேளக்கூத்து என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் காணப்படும் அதிசிறப்பு வாய்ந்த கலைவடிவமாக விளங்குகிறது.
பறை பற்றி தொல்காப்பியம், குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, நற்றினை, நான்மணிக்கடிகை, திருக்குறள் போன்;றன எடுத்துக் கூறுகின்றன. இதனைவிட கவிப்பேரரசு வைரமுத்து பறை இசை பற்றி பின்வருமாறு சிறப்பாக கூறியுள்ளார்.
‘விலங்கு விரட்ட பிறந்த பறை
கைவிலங்கு ஒடிக்க பிறந்த பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை’
சாதிய அடக்கு முறைகளால் தற்காலத்தில் சாவுமேளம் அடிப்பதற்காகவும், கிராமிய வழிபாடுகளுக்கு மட்டும் தான் பறை இசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரம்பகாலத்தில் திருமண நிகழ்வின் போது மணப்பறை இசைக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் சாதி வேறுபாடுகளால் இம்மணப்பறை இசை இல்லாமலே போய்விட்டது. திருமணத்தின் போது பறையால் நாள் குறித்த செய்தியை நாலடியார் ‘ பல்லார் அறியப் பறையறைந்து நாள் கேட்டுக் கல்யாணம் செய்து’ (நாலடியார்:86) எனக் கூறுகின்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பாக ஈழத்து இஸ்லாமியர்களும் பறை இசைக்கு ஆதரவு அளித்து வந்தனர். இஸ்லாமிய குடும்ப விழாக்களிலும் இப்பறையிசை இசைக்கப்பட்டது. தொழில் அடிப்படையில் கீழ் நிலையில் இருந்தாலும், இன்று சமய வழிபாடுகளிலும் இறப்புச் சடங்கிலும் பறை இசை முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. பறை இசை ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ்வொரு தாள அடியை கொண்டு விளங்குகின்றது. அதாவது இப்பொழுது கிராமியக் கோவில்களை எடுத்து நோக்கினால், அங்கே மடைப்பண்டம் எடுக்கும்போது, பூசாரிக்கு உருஏறி ஆடும் போது, பொங்கல் வழுந்து ஏற்றும் போது, படையல் செய்யும் போது, காவடியாட்டம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான தாளஅடி அடிக்கப்படுகிறது. இதே போல இறந்த வீட்டிலும் உறவினர்கள் வரும் போது, பகைவர்கள் வரும் போது, பிரேதம் குளிப்பாட்டும் போது, பிரேதம் தூக்கும் போது, பிரேதம் வீடு வழியாக செல்லும் போது, அதனை வழி மறித்து அடிக்கும் போது, கொள்ளி வைக்கும் போது என ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ்வொரு தாளஅடி அடிக்கப்படுகிறது. மேலும், ராசாதாளம், வரவுத்தாளம், கோணங்கிதாளம், ராணித்தாளம் எனப் பல்வேறு தாளங்களை கொண்டு காணப்படுகிறது. அத்தோடு பறைமேளத்தில் 18 தாளங்கள் காணப்படுவதாக இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வட இலங்கையில் பன்றித்தலைச்சி, புளியம் பொக்கனை, வற்றாப்பளை, பொறிக்கடவை, புதூர் போன்ற ஆலயங்கள் ஆகமப்படி இயங்கினாலும் பொங்கலின் போது பறை மேளம் இசைக்கப்படுவதனை காணமுடிகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் செல்வச்சந்நிதியில் வெளிப்பிரகாரத்திலும் பறையிசை வாசிக்கப்படுகின்றது.
‘வற்றாப்பளை ஆலயத்தை எடுத்து நோக்கினால், வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாகப் பொங்கலின் போது இந்த பறை மேள இசை முதன்மை நிலை வகிக்கிறது. பறை மேளத்துடன் பாக்குத் தொண்டல் என்ற கால்கோல் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. பாக்கு தொண்டல் என்பது உபகரிப்புக்காரர்களிடமிருந்து மங்கலப் பொருட்களான மஞ்சள், பாக்கு, வெற்றிலை போன்றவற்றை பெறுதலாகும். இந்தபாக்கு முடிச்சு காட்டுவிநாயகர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள வேப்பமரக் கொம்பரில் கட்டிவிடுவார்கள். இலங்கையில் எந்தவொரு ஆலயத்திலும் மேற்கொள்ளப்படாத இந்த நிகழ்வானது இத்தலத்திற்கே விஷேடமான வழமை முறையாக காணப்படுகிறது. இதன்பின் 8ம் நாள் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு இடம்பெறும். அதாவது காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதசாரிகளாக புறப்பட்டு சிலாவத்தையினூடாக வடகடலிற்கு சென்று அங்கு கடல்நீரை ஒரு பானையில் எடுப்பார்கள். இந்தச் சடங்கு பறைமேளத்தின் துணையுடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்ததீர்த்தக் குடத்தை வரவேற்பதற்காக காட்டுவிநாயகர் ஆலயத்தில் விஷேட பூசைகள் இடம்பெறும். அத்தருணத்தில் ஆலயமணியின் ஓசையும், பறைமேளங்களின் ஒலியும் சேர்ந்து அப்பகுதி எல்லாம் பரவி அம்மன் அடியார்களின் மெய்சிலிர்த்து, அவர்களின் உள்ளமெல்லாம் அம்மனை வழிபட்டு நிற்க வைக்கும். பின்னர் காட்டு விநாயகர் ஆலயத்தில் 7 நாட்கள் உப்பு நீரில் விளக்கு எரிக்கப்பட்டு தினமும் பூசைகள் இடம்பெறும். இந்த பூசைகளின் போது ஒவ்வொரு வேளையும் அறெறிப்பறை இசைக்கப்படும். இந்த அறெறிப்பறை பற்றி திருக்குறள் ‘அறைப்பறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்’ (திருக்குறள்:1076) என்று கூறுகிறது. அடுத்து 7ம் நாள் பறை மேளத்தலைமையில் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கு வழுந்தேற்றுதல் எனப்படுகின்ற பானையை அடுப்பிலேற்றுதல், அரிசி போடுதல், படையல் செய்தல், போன்ற ஒவ்வொரு வழிபாட்டு முறைமைகளையும் மேற்கொள்ளும் போது ஒவ்வொரு விதமான பறைமேளஅடி அடிக்கப்படுகிறது’ (ஹேமா சண்முகசர்மா,2003)
இதனைப் போல சில வித்தியாசங்கள் காணப்பட்டாலும் உள்ளூர் வழிபாடுகளில் ஒன்றான கண்ணகி வழிபாடுகளில் பறையிசை இடம்பெறுவதனை நான் பார்த்துள்ளேன். குறிப்பாக எனது ஊரிலே உள்ள குடத்தனை வடக்கு கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக பொங்கலின் போதும், குடத்தனை விநாயகர் ஆலயத்தில் ஆனி வேள்வியின் போதும் இப்பறையிசை வாசிக்கப்படுகிறது. இவ்விரு நிகழ்வுகளுக்கும் பறையே அத்திவாரமாக விளங்குகிறது.
வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும் அதேவேளை குடத்தனை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் பொங்கல் நடைபெறும். இந்த பொங்கலானது ஆகம முறைசாரா வகையில் பாரம்பரிய சடங்குகளுடன் பின்னிப்பிணைந்து பக்தி சிரத்தையுடன் செய்யப்பட்டு வருகின்றது. பறை இசை முழங்க மடைப்பண்டம் எடுக்கப்பட்டு பின்னர் பூசைகள் இடம்பெறும். மறுநாள் காலையில் பறையிசையின் துணையுடன் வழுந்தேற்றுதல் நிகழ்வும், படையல் செய்தல் நிகழ்வும் இடம்பெறும். இவ்வாறு கிராமிய வழிபாடுகளின் போது பறையிசை வாசிக்கப்படுவதனைக் காணமுடியும். பொங்கல் வழிபாடு இடம்பெறும் எல்லா ஆலயங்களிலும் அம்முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. கிராமிய வழிபாடுகள் இடம்பெறும் எமது பாரம்பரிய வழிபாட்டு தலங்களில் எப்போதுமே பறைமேளத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதிலிருந்து பறைமேளம் எமது தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக வெளிப்படுத்தப்படுகிறது.
‘இலங்கையில் கிழக்கில் பெரும்பாலான ஆலயங்களில் 7 நாள் சடங்கு இடம்பெறுகின்றது.
அதாவது 7 நாட்களும் ஒவ்வொரு வகையான சடங்குகள் நிகழ்த்தப்பட்டு இறுதி நாள் கண்ணகியை குளிரவைப்பார்கள். வருடத்தில் ஏழு நாட்கள் மட்டுமே கண்ணகி கோயில்கள் திறக்கப்பட்டு பூசைகளும், சடங்குகளும் நடத்தப்படுகின்றன. ஏனைய நாட்கள் பூசைகள் நடைபெறுவதில்லை. முதல் நாள் சடங்கான கதவு திறத்தல் நிகழ்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. வருடம் முழுவதும் பூட்டப்பட்டு இருக்கிற கதவு இச்சடங்கு காலத்திலேயே திறக்கப்படும். இச்சடங்கினை ஊர் முழுவதும் இணைந்து செய்வார்கள். ஊரில் பிரசித்தமான வேறு ஒரு ஆலயத்தில் இருந்து சடங்குக்கு உரிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கட்டாடியார் என்று அழைக்கப்படுகின்ற பூசகர் தலைமையில் பறை மேளம், உடுக்கு, சிலம்பு வாத்தியங்கள் முழுங்க ஊர்வலமாக வந்து இந்த கதவு திறத்தல் சடங்கு நடைபெறும். இச்சடங்கிலும் பறை இசை முக்கியத்துவப்படுவதனைக் காணலாம்’ (சுகுமார்,பால,2009)
குறிஞ்சி, பாலை நிலங்களில் கூத்தர்கள் ஆடிப்பாடி மகிழ உறுதுணையாக ஆடுகளப்பறை இருந்துள்ளது. இந்தப்பறை பற்றி அகநானூற்றில் ‘ வாடல் உழஞ்சில் விளைநெற்று அம் துணர் ஆடுகளப்பறையின் அரிப்பன ஒலிப்ப'(அகம்.பாலை.45:2) என்று கூறப்படுகிறது.
‘கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருவிழா முடிந்ததும் இடம்பெறும் நிகழ்வில் ஒவ்வொரு சாதியினரும் தமது தலைமுறைகளை கூறி குலவிருது பெறும் வழக்கம் காணப்படுகிறது. இதனடிப்படையில்; பறையர் சமூகத்தினர் தமது தலைமுறைகளை கூறி சின்னப்பறை எனும் விருதை பெற்றுக் கொள்கின்றனர்’ (விதுஜா.வே,2021). இதற்கூடாக பார்க்கும்போது மட்டக்களப்பில் இந்த பறை மேளம் இசைக்கும் சமூகத்தின் இருப்பு குறித்து அறியலாம். இருப்பினும் தற்காலத்தில் மட்டக்களப்பிலும் பறைமேள இசை பல சவால்களை எதிர்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது. இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை இப்பறைமேள இசையை வளர்ப்பதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதனை அறியமுடிகிறது.
வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் பறைமேள இசையுடன் தெய்வங்கள் ஊர்வலமாக வருகின்றார்கள். அதனைப் பார்ப்பதற்கு செல்லும் பக்தர்கள் பறைமேள இசையுடன் இரண்டறக் கலந்து விடுவதனை அங்கு காணமுடியும். பறைமேளக் கூத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு வாத்தியமாக காணப்படும் ஆனால் இதை இசைப்பவர்கள் இதனை உணவளிக்கும்; கடவுளாக மதிக்கின்றார்கள்.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஒவ்வொரு தருணத்திலும் கூட இந்த இசை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூடுதலாக நகர்ப்புறங்களில் மனிதனது இறுதி ஊர்வலத்தில் கூட பறை பயன்படுத்தப்படுவதில்லை. தற்காலத்தில் பறைக்கு பதிலாக ட்றம்செற் பயன்படுத்துகிறார்கள். கிராமப்புறங்களில் இந்த பறை மேளம் இசைத்தே இறுதி மரியாதை செலுத்துவதனை காணலாம். இதேபோல தற்காலத்தில் ஆலயங்களிலும் பறை இசைக்கு பதிலாக தொழில்நுட்ப இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பகாலத்திலே மேலேகூறியவாறு பெருமை வாய்ந்த பறையிசை தற்காலத்தில் எதிர்நோக்கும் மிகப்பெரும் சவாலாக அமைவது சாதிப்பாகுபாடு ஆகும். ஆனால் இன்றுவரை பறையிசைக்கும் இதனை வாசிக்கும் மக்களுக்குமான அங்கீகாரம் கிடைக்க பெறவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.
மேற்கோள் விபரம்
- மூர்த்தி.இரா, 2018, நிகழ்த்துகைக்கலையில் தப்பட்டம்-ஜமாப் ஒப்பீடு
- விதுஜா.வே, 2021,ஈழத்தில் பறை இசை கட்டுரை
- நாலடியார்:86
- திருக்குறள்:1076
- ஹேமா சண்முகசர்மா,2003, ‘வற்றாப்பளை கண்ணகி அம்மன் கருணை மலர்’,பக்15-25
- சுகுமார்,பால,2009, ஈழத்தில் கண்ணகி கலாச்சாரம், பக்10
- அகம்.பாலை.45:2
- விதுஜா.வே, 2021,ஈழத்தில் பறை இசை கட்டுரை
அ.கமித்தா,
இரண்டாம் வருடம்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.