Home இலங்கை குடிநீர் விற்பனை நிலையங்கள் மீதான தடை எதிர்கால சந்ததியினருக்கானது!

குடிநீர் விற்பனை நிலையங்கள் மீதான தடை எதிர்கால சந்ததியினருக்கானது!

by admin

 நாம் வாழுகின்ற இந்த பூமி எமக்கானது மட்டுமல்ல எதிர்கால எமது எதிர்கால சந்ததியினருக்குமானது. எமது மண்ணின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் மட்டும் இந்த பூமியில் வாழ்ந்து விட்டு  போக முடியாது என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் விமர்சனங்களை முன் வைத்தவர்வர்களுக்கு பதில் அளித்துள்ளார். 

யாழ்.மாநகர சபை எல்லைப்பகுதிக்கு இயங்குகின்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்  மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிரேரணை ஒன்றினை யாழ்.மாநகர சபை நேற்று நிறைவேற்றியது.


குடிநீர் விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் , தென்னிலங்கை குடிநீர் வியாபாரிகளுக்கு இலாபம் ஈட்டிக்கொடுக்கவே  மாநகர சபை இதனை நடைமுறைப்படுத்துகின்றது  என சிலர் எதிர் விமர்சனங்களை முன் வைத்தனர். அதற்கு பதில் அளிக்கும் முகமாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 


அதிலையே மேற்கண்டவாறு  பதிலளித்துள்ளார். குறித்த செய்தி குறிப்பிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையங்கள் மிக வேகமாக யாழ்.மாநகர பகுதி எங்கும் திடீரென முளைக்கின்றது. யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 50 மேற்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு யாழ்.மாநகர சபையின் எந்த ஒரு அனுமதியும் காண்காணிப்பும் இல்லை. இந் நிலையில் இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற குடிநீரின் தரம் குறித்து அறியும் நோக்குடன் யாழ்.மாநகர சபை பகுதிக்குள் இயங்குகின்ற நிலையங்கில் எழுமாறாக இரண்டு நிலையங்களில் குடிநீர் மாதிரிகளை எடுத்தோம். 


அவ் குடிநீர் மாதிரிகளினை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்தி ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டு அறிக்கையினைப் பெற்றுக்கொண்டேன்.
அவ் அறிக்கையினை யாழ்.பல்கலைக்கழக இராசாயனவியல் துறைப் பேராசிரியர் ஒருவரிடம் காண்பித்து கலந்துரையாடிய போது அவர் சில பரிந்துரைகளை முன்வைத்தார்.
அதாவது குறித்த குடிநீர் மாதிரியில் மணம் கலங்கற்தன்மை PH குளோரைட், நைத்திரேற்று, பொஸ்பேற்று, இரும்பு, கல்சியம், சல்பேற் மற்றும் மக்னீசியம் என்பன அனுமதிக்கப்பட்ட அளவிலும் பார்க்க குறைவாக இருக்கின்றது என்று கூறுகின்றார். 

அத்துடன் குடிநீரின் தரத்தில் பிரச்சனையில்லை என்றும் கூறினார். ஆனால் குறித்த குடிநீர் மனிதனுக்கு எந்த ஒரு ஊட்டச்சத்துக்களையும் தரக்கூடியது அல்ல என்றும் அதில் காணப்படுகின்ற ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது என்றும் கருத்துரைத்தார்.


இக் குடிநீரினை வுpற்பனை செய்கின்ற நிலையங்களின் கழிவு நீர் மிக முக்கியமானது நீரினை சுத்திகரிக்கும் செயல்முறையின் போது R.O உபகரணங்களால் வெளியேற்றப்படும் கனியுப்புக்கள் மற்றும் கழிவு நீர் என்பன  நிலத்தில் விட கூடாது அது அபாயகராமானது. 


அவற்றினை  கடற்கரையில் இருந்து 2 அல்லது 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று கடலினுள் விடவேண்டும். இச் செயல்முறையின் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் அத்துடன் கடலினுள் குறித்த கனியுப்புக்களைக் கொண்டு சென்று போடுவதனால் மீன் வளத்தினைப் பெருக்க முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

இந் நிலையில் குடிநீரில் அறிக்கையினை தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் ஒருவரிடம் காட்டி அதற்கான பரிந்துரைகளையும் பெற்றுக் கொண்டேன். அவர் தனது பரிந்துரையில் நீரின் தரத்தில் பிரச்சனையில்லை இங்கு நீரின் தரம் என்பது மலத்தொற்று, கிருமிகள் வாந்திபேதி வயிற்றோட்டம் போன்றவற்றை கொண்டு வருகின்ற எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இந் நீரின் மூலம் மனித உடலுக்கு கிடைக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மிக மிக குறைவு என்றார்.


 உதாரணமாக நீரில் கல்சியம் அளவு நைத்திரேற் இருப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நீரில் இல்லை என்று கூறும் அளவிற்கு மிக குறைவாக உள்ளது.குடிநீரில் மனித உடலுக்குத் தேவையான கனியங்கள் இல்லை என்பதனை இங்கு காரணம் காட்ட வில்லை. அது மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டிய விடயம்


ஆனால் குடிநீரின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பான அறிக்கைக்கு அப்பால் குடிநீர் விற்பனை நிலையங்களின் சுகாதார நடைமுறைகள் கழிவுகளினை அகற்றுகின்ற முறைமை அவர்கள் விற்பனை செய்கின்ற போது செயற்படுகின்ற முறை ஆகியவற்றில் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன


50 க்கு மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மாநகரில் காணப்பட்டாலும் எதற்கும் அனுமதியில்லை இவ் வருடம் மட்டும் 14 விண்ணப்பபடிவங்கள் யாழ்.மாநகர சபைக்கு அனுமதிக்கு கிடைக்க பெற்றன. ஆனால் அனுமதிகள் வழங்கப்படவில்லை. இருந்த போது அவர்கள் குடிநீரின் உற்பத்தி செய்கின்றனர்.இதை விட மிக முக்கியமான சீர்கேடு வாகனங்களில் குடிநீரினை கொண்டு சென்று விற்பனை செய்கின்ற முறை. குடிநீரினை கொண்டு செல்லுகின்று விற்பனை செய்கின்ற நீர்தாங்கிகள் சுத்தம் செய்யப்படுகின்றனவா பாசி பிடித்திருக்கின்றதா இல்லையா என்று எந்த ஒரு கண்காணிப்பும் எம்மிடம் இல்லை.


ஒரு உணவகத்திற்கு பல சட்டங்கள் இருக்கின்றன. உணவைக் கையாளுபவர்களின் மருத்தவச்சான்றிதழ் தொடக்கம் பல விடயங்களில் கண்காணிப்புகள் இருக்கின்றன ஆனால் நீரும் ஒரு உணவுதான் ஆனால் அந்த குடிநீரின் தன்மையை அறிய எந்த ஒரு கண்காணிப்பும் இல்லை.
இந் நிலையினைத் தொடரமுடியாது. இது மிகப்பெரிய ஆபத்தினை கொண்டுவரக்கூடியது மாநகரத்தின் நிலத்தடி நீரில் பாரிய மாற்றங்களை கொண்டு வரும் அது எங்களுடைய எதிர்கால சந்ததியினருக்கு மிக ஆபத்தானது. 


எனவே இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் காண்காணிக்க வேண்டும் இது தொடர்பில் ஒரு குழு அமைக்கப்பட்ட அக்குழுவின் பரிந்துரைகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 


அத்துடன் மிக முக்கியமாக வீதி வீதியாக கொண்டு குடிநீரினை கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவது முற்றாக நிறுத்தப்படவேண்டும். என்று கருத்துரைத்தேன்.இவ் விவாதத்தில் கருத்துரைத்த சக உறுப்பினர் செல்வவடிவேல் ஆசிரியர் பல இடங்களில் இவர்கள் சுத்திகரிப்பதற்கு நீரினைப் பெற்றுக்கொள்கிற நீர் நிலைகள் மிக மோசமானவை.


 வாகனங்களில் நீரினை கொண்டு சென்று விற்பனை செய்பவர்கள் சுத்திகரித்து தான் நீரினை கொண்டு சென்று விற்பனை செய்கின்றார்களா தெரியவில்லை. எனவே இது கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

இவ் விவாதங்களின் அடிப்படையில் மாநகர எல்லைக்குள் காணப்படும் அத்தனை குடிநீர் விற்பனை நிலையங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அதனை மூடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது என சபை ஏகமனதாக தீர்மானித்தது.


இது தொடர்பில் ஒரு சிலர் யாழ்.மாநகர சபை வாழ்வாதாரத்தை பறிக்கின்றதாகவும் தென்னிலங்கை தண்ணீர் கம்பனிகளின் விற்பனையை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றனர்.
 உண்மையில் இக் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையவதை தான்.

ஆனால் எங்களுடைய தேசத்தின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கின்ற எந்த ஒரு விடயத்தினையும் வாழ்வாதாரம் என்கின்ற எண்ணக்கருவிற்குள் சேர்த்து அதனை அனுமதித்து இன்னும் பலர் அதனையே தமது வாழ்வாதார தொழிலாக தொடங்குவதற்கு களம் அமைத்துக் கொடுக்க முடியாது.


யாழ்.மாநகர சபையில் விண்ணப்பித்து விட்டு நாங்கள் எந்த அனுமதியும் தரமாட்டோம் என்று கூறிய பிற்பாடும் எந்த ஒரு நியமங்களும் இல்லாமல் தொடங்க கூடிய ஒரே ஒரு வணிகம் இந்த சுத்திகரிப்பு குடிநீர் உற்பத்தி நிலையம். 


இதனை இவ்வாறு கண்டும் காணாமல் அனுமதித்தால் மாநகர முழுவதும் தண்ணீர் விற்பனை நிலையங்களாக மாறும். ஒன்று இவற்றினைத் தடை செய்ய வேண்டும் அல்லது ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.


சுத்திகரிக்காமல் சுத்திகரிக்கப்பட்ட நீர் என்று வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்கின்றார்கள் கழிவுநீரினை மீண்டும் கிணற்றுக்குள் விட்டு அதனை எடுக்கின்றார்கள் என்று ஒரு உறுப்பினர் சாட்சியம் அளிக்கும் போது எவ்வாறு குறித்த நிலையங்களினை தடை செய்யாமல் விட முடியும், 


அவ்வாறு நிலையங்களினை மட்டும் நீங்கள் தடை செய்யலாம் ஏனையவற்றை அனுமதிக்கலாம் என்ற ஒரு நிலை உருவாகலாம். அதற்கு நிச்சயமாக நியமங்கள் வகுக்கப்படவேண்டும். இது தொடர்பில் ஆராய்வதற்கு யாழ்.மாநகர சபை நிபுணர் குழு ஒன்றினை கட்டாயம் அமைக்கும்.
எமக்கு கிடைக்கப்பெற்ற நிபுணத்துவர்களின் பரிந்துரையின் பிரகாரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ராக இல்லாமமை, அதன கழிவு நீர் மண்ணில் விடுவதனால் ஏற்படுகின்ற மிக அபாயகரம் விற்பனை நிலையங்களில் காணப்படும் சுகாதார பிற்வான நடத்தைகள் போன்ற நடவடிக்கைகளால் அவற்றினை சட்டப்படி தடை செய்வதற்கு மாநகர சபை முடிவெடுத்தது.
என்னைப்பொறுத்தவரை எதிர்காலத்தில் பின்வரும்  விடயங்கள் உறுதியாகப் பின்பற்றப்படும்


1. மாநகர எல்லைக்குள் வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யும் முறைமை முற்றாக நிறுத்தப்படும்.
2. மாநகரத்தில் தற்போது காணப்படுகின்ற குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு மேலதிகமாக எந்த ஒரு விற்பனை நிலையமும் புதிதாக திறப்பது முற்றாக தடை செய்யப்படும்


3. தற்போது குடிநீர் விற்பனை நிலையங்கள் தொடர்பில் சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டு நியமங்கள் வகுக்கப்படும் அந்த நியமங்களுக்கு உட்படாத விற்பனை நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு அவை முற்றாக சீல் செய்யப்படும்.


குடிநீர் விற்பனை நடைபெறும் போது அதனை கண்டும் காணமல் மாநகர சபை இருக்கின்றது என்று கூறுவதும் நாங்கள் தான் அதற்கு நடவடிக்கை எடுத்தால் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்றது தென்னிலங்கை சந்தைக்கு வாய்ப்பு அமைத்து கொடுக்கின்றது என்று விமர்சிப்பதும் நாங்கள். 
ஆக ஒரு விடயத்திற்கு இரண்டும் இருக்கும் அதில் தவறு இல்லை. ஆனால் அதில் எது சிறந்ததோ எது உண்மையோ அதனையே முன்னெடுத்தல் வேண்டும்.

எமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநகர சபை ஏகமனதாக இவ் முடிவினை எடுத்திருக்கின்றது. இது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இருப்பின் அல்லது இதனை எவ்வாறு ஒழுங்கமைக்க முடியும் என்ற சிந்தனைகள் மற்றும் செயற்பாட்டுகள் எதும் இருப்பின் அதனை யாழ்.மாநகர சபையில் கையளித்தால் அடுத்த மாநகர சபை அமர்வினில் இது தொடர்பில் கலந்துரையாட முடியும்.


இக் கழிவுப் பொருட்களால் நிலத்தடி நீர் மாசடையாது. ஆதனை நிலத்தில் விடமுடியும் நிலத்தடி நீருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை. போன்ற விடயங்களை ஒரு நிபுணத்துவ அறிக்கையாக மாநகர சபைக்கு தரும் பட்சத்தில் அதனை ஆராய்வதற்கு மாநகர சபை தயாராகவே இருக்கும். 


இவ்வாறனா செயல்திறன் அறிக்கையினை நிபுணத்துவ அறிக்கையினை மாநகர சபையில் நீங்கள் எழுத்துமூலமாக ஒப்படைக்கமுடியும் உங்களுடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மாநகர சபை நிச்சயம் கருத்தில் எடுக்கும் . அது ஏற்புடையது என்றால் உறுப்பினர்களின் ஆதரவுடன் சபைத் தீர்மானத்திடன் அதை நடைமுறையும் படுத்தும். 

இங்கு பலரும் விமர்சனம் செய்வார்கள் ஆனால் ஒரு பிரச்சனைக்கு இது தான் தீர்வு இதனை இவ்வாறு செய்யுங்கள் என்று ஒரு செயற்பாட்டு அறிக்கையினை தரமாட்டார்கள். 


நாம் செய்வது பிழை கூறுபவர்கள் இது தான் சரியானது . அதை இவ்வாறு செய்யமுடியும் இவற்றினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்று சிறப்பான செயற்றிட்டத்தை தாருங்கள். இதனை ஒழுங்கமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் இருக்கின்றது. எனவே ஆக்கபூர்மான கருத்தினை மாநகர சபைக்குத் தாருங்கள்


அதை விடுத்து மக்களின் வாழ்வாதாரம் தென்னிலங்கை வியாபார விருத்தி என்கின்ற எண்ணக்கருக்களை கொண்டு ஒரு பிழையினை நியாயப்படுத்தவோ அல்லது அதனை தொடரவோ முடியாது. 


அத்துடன் அங்கு நடைபெறுகின்றது இங்கு நடைபெறுகின்றது எனவே இங்கே நடைபெற்றால் என்ன என்பதும். அவர் செய்கின்றார் இவர் செய்கின்றார் எனவே நாம் செய்தால் எனபதும் குறித்த பிரச்சனைக்கு விடையாகாது.


நாம் வாழுகின்ற இந்த பூமி எமக்கானது மட்டுமல்ல எதிர்கால எமது எதிர்கால சந்ததியினருக்குமானது. எமது மண்ணின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் மட்டும் இந்த பூமியில் வாழ்ந்து விட்டு  போக முடியாது. 


ஒன்றை இழந்தே இன்னொன்றைப் பெற முடியும் என்கின்ற அமையச் செலவு போல் சிலவற்றை இழந்தே பெறவேண்டியிருக்கின்றது. இது தவிர்க்க முடியாதது


இத் தீர்மானம் யாருடைய வாழ்வாதாரத்தை பறிப்பதற்காகவே அல்லது வேறு நபர்களிள் உற்பத்தியினை உயர்த்துவதற்காகவோ அல்ல எமக்கானது எமது எதிர்கால சந்தியினருக்கானது அவர்களின் பாதுகாப்பது தொடர்பிலானது. 


இவ்விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு பிழை கருதுபவர்கள் எது சரி என்பதனையும் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்தாலம் என்பது தொடர்பிலான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களினை அறிக்கைகளினை தந்தால் அடுத்த மாநகர சபை அமர்வுகளில் ஆராய முடியும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More