சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசாரத்துக்கு நிதி செலவிட்ட வழக்கு ஒன்றில் பிரான்ஸின் முன்னாள் அதிபர்சார்க்கோசிக்கு பாரிஸ் நீதிமன்றம் ஒன்று ஓராண்டு சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
சிறைக் காலத்தை இலத்திரனியல் கண்காணிப்புக் காப்பு (electronic monitoring bracelet) அணிந்தவாறு வீட்டிலேயே கழிப்பதற்கு நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரங்களை அனுமதிக்கப்பட்ட நிதி வரம்பை மீறிப் பெரும் எடுப்பிலான செலவில் மேற்கொண்டதன் மூலம் அவர் தேர்தல் சட்டத்தை மீறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டி இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் நடைபெறுவது போன்ற பிரசாரப்பாணியில் சார்க்கோசி நடத்திய பிரசாரக் கூட்டங்களின் மொத்த செலவு சுமார் 42.8 மில்லியன் ஈரோக்கள் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. அது வேட்பாளர் ஒருவரது பிரசாரச் செலவுக்கு அனுமதிக்கப்பட்ட நிதித் தொகையை விட ஒரு மடங்கு அதிகமாகும். வரம்பை மீறி நிதி செலவிடப்படுவதை சார்க்கோசியின் கணக்காளர்கள் அவரது கவனத்துக்குக் கொண்டுவந்த போதிலும் தெரிந்துகொண்டே அவர் அதிக நிதியில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார் எனநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2012 தேர்தலில் தனது இரண்டாவதுபதவித் தவணைக்கான போட்டியில்இறங்கிய சார்க்கோசி முன்னாள் அதிபர் பிரான்ஷூவா ஹொலன்டிடம் தோல்விகண்டார். மூத்த வலது சாரி அரசியல் பிரமுகரான 66வயதுடைய சார்க்கோசிக்கு கடந்தஆறு மாதங்களுக்கு முன்பு பிறிதொரு ஊழல் மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அவர் தன் மீதான சகல குற்றச்சாட்டுக்களையும் மறுத்து வருகிறார்.பிரான்ஸில் ஜக் சிராக்கிற்குப் பின்னர் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்ற முன்னாள் அரசுத் தலைவர் சார்க்கோசி ஆவார்.ஜக் சிராக்(Jacques Chirac) பாரிஸ் நகர மேயராகஇருந்த சமயத்தில் இடம்பெற்ற ஓர் ஊழல் மோசடி தொடர்பாக அவருக்கு2011 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒன்றுஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.
—————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்