உலகம் பிரதான செய்திகள்

பாவ மன்னிப்பின் ரகசியத்தன்மை நாட்டின் சட்டங்களை விட உயர்வா?


கத்தோலிக்கத் தலைமை ஆயரை ஆஜராகுமாறு அமைச்சு அழைப்பு அரசுக்கும் மதத்துக்கும் இடையே ஒருபெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

பிரான்ஸின் ஆயர்கள் மன்றத்தின் தலைமைக் குருவை (head of the Bishops’ Conference of France) உள்துறை அமைச் சில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸின் தேவாலயங்களில் மிக நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்ற மத குருமார்கள் சம்பந்தப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று இந்த வாரம் வெளியாகியிருந்தது.

1950 – 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கத்தோலிக்கத் தேவாலயங்களில் இடம் பெற்ற சிறுவர்கள் மீதான குற்றங்கள் பற்றி ஆய்வு செய்த ஆணைக்குழு வெளியிட்ட அந்த அறிக்கையில் சுமார் இரண்டு லட்சத்து 16 ஆயிரம் குற்றச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் பதிவாகி உள்ளன. தொடுகை முதல் வல்லுறவு வரை சிறுவர்கள் மீது புரியப்பட்ட பல்வேறு குற்றங்கள் அடங்கிய அந்த அறிக்கை கத்தோலிக்க சமூகத்தினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


நாட்டின் கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் Eric de Moulins-Beaufort அந்த அறிக்கை பற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடுகையில், ‘பாவமன்னிப்பு’ அல்லது’ஒப்புதல் வாக்குமூலம்’ எனப்படுகின்ற குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மதச் சடங்கில் பேணப்படும் ‘ரகசியம்’ நாட்டின் சட்டங்களை விட மேலானது என்ற சாரப்படக் கருத்து வெளியிட்டிருந்தார்.


பாவிகள் தங்கள் பாவங்களை பாதிரியாரிடம் ஒப்புக் கொண்டு கடவுளிடம் மன்னிப்புக் கோருகின்ற ஒரு சடங்கே ஒப்புதல் வாக்கு மூலம் அல்லது பாவ மன்னிப்புஎனப்படுகிறது. அது ஒரு திரைக்குப் பின்னால் செய்யப்படுகிறது.அதன்போது பாவம் செய்தவரது குரலை மட்டுமே மத
குருவானவர் செவிமடுப்பார். அதில் பேணப்படுகின்ற மிக உயர்ந்த ரகசியத்தன்மையையே ‘நாட்டின் சட்டங்களை விடமேலானது’ என்று ஆயர்கள் அமைப்பின் தலைமைக் குரு குறிப்பிட்டிருந்தார்.


சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அவ்வாறு பாவ மன்னிப்புக் கோரியிருக்கலாம். அது பற்றிய ரகசியத் தன்மையை வெளிப்படுத்த முடியாது என்பதை மனதில் வைத்தே ஆயர் தனது கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


அவரது அந்தக் கருத்துக் குறித்து விளக்கம் கேட்பதற்காகவே-அரசுத் தலைவர் மக்ரோனின் பணிப்பின் பேரில்- உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா ஆயரை அமைச்சுக்கு அழைத்திருக்கிறார்.நாட்டின் குடியரசுச் சட்டங்களை விடஉயர்வானவை என்று எதுவும் இல்லை”என அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் கூறியிருக்கிறார். அமைச்சின் ஆணையை ஏற்றுக் கொண்டுள்ள ஆயர், எதிர்வரும் செவ்வாய்க் கிழமை உள்துறை அமைச்சரைச் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


பிரெஞ்சுச் சட்டங்களின் படி சிறுவர் குற்றங்களை அறிந்திருந்த ஒருவர் அதுபற்றி அரச அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளார். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் .சிறுவர் குற்றங்கள் புரிந்தோர் பாவ மன்னிப்புக் கோருவதன் மூலமாக நாட்டின்சட்டங்களில் இருந்து தப்பிவிட முடியுமாஎன்ற கேள்வியை எழுப்பியிருக்கின்ற இந்த விவகாரம் ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.

     -பாரிஸிலிருந்து குமாரதாஸன்
                          08-10-2021

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.